Thursday, August 20, 2015

அஞ்ஞானவாசம், ஏன் இஞ்ச வந்தனி; இரு குறும்படங்கள் பற்றிய பார்வை !


காட்சி ஊடகங்களின் பரிணாமம் காலத்திற்குக் காலம் மாற்றமடைந்து வருவதன் தொடர்ச்சியாக, தற்போதைய சூழலில் மக்களிடையே குறும்படங்களின் தாக்கம் அதிகரித்திருப்பதை அவதானிக்கமுடியும். திரைப்படங்களில் கையாளப்படும் மிகையதார்த்த மாயைகளைத் தவிர்த்து யதார்த்தத்தை முடிந்த அளவு சாத்தியமாக்கியதோடு, திரைப்படங்களில் இருந்து முற்றிலுமாக மாறுபட்ட திரைமொழியையும், செய்தி சொல்லல் உத்தியையும் கொண்டிருந்த குறும்படங்கள் கொஞ்சங் கொஞ்சமாக வெகுசனப்பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது ஆரோக்கியமானதொரு மாற்றம்தான். 


அதே வேளை இந்த மாற்றம் “திரைப்பட வியாபாரிகளையும்” தன்பக்கம் திரும்ப வைத்திருப்பது தான் சற்று ஆபத்தானது. இவர்கள் மக்களை இலகுவில் சுவாரசியப்படுத்திவிடவேண்டும் என்ற ஒற்றை நோக்கில் மிக குப்பையான உத்திகளை நுழைத்து குறும்படங்களின் வடிவங்களை சிதைக்க ஆரம்பித்துவிட்டார்கள். தமிழகத்தின் நாளைய இயக்குனர் ஆரம்பித்து வைத்த, குறும்படங்கள் என்பது திரைப்படங்களின் சிறிய வடிவம் என்ற சிந்தனையே தற்போது ஈழத்திலும் விரவிக்கிடப்பது கவலைக்குரியதே. 

உலகிற்குச் சொல்வதற்கு எங்களிடம் ஆயிரம் கதைகள், ஆயிரம் சம்பவங்கள் உண்டு. சமூகத்திடம் முன்வைக்கவேண்டிய பிரச்சினைகளும் எங்கள் வாழ்வில் உண்டு. இவற்றையெல்லாம் காட்சிப்புலத்தில் கொண்டுவரத் தனித்துவமான கதைசொல்லல் நுட்பமும் எம்மிடம் உண்டு. ஆனால் நாம் செய்யவில்லை. ஏன்? குறும்படம் என்ற கருத்தாக்கத்திலிருந்து மாறுபட்டு, பெண் கவர்ச்சி, மூன்றாம்தர நகைச்சுவைகள், கதாநாயக சாகசங்கள் என மலினமான உத்திகளையே ஈழத்துக் குறும்படங்களும் பின்தொடர்ந்து வருவதை அவதானிக்கலாம். அவற்றிலிருந்து விலகி எமது வாழ்வியல் பிரச்சினைகளை காட்சிப்புலத்தில் கொண்டுவரும் படைப்புகள் மிகக் குறைவாக, ஒரு சில படைப்பாளிகளிடம் இருந்தே வெளிவந்து கொண்டிருக்கின்றன. 

இவர்களுள் NS ஜனா குறிப்படத்தக்கதொருவர். போர் எமது வாழ்வில் ஏற்படுத்திப்போன காயங்களை இவரது குறும்படங்கள் ஆழமாகப் பிரதிபலிக்கும். அந்த வகையில் இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான இரு குறும்படங்கள் ஈழத்துத் திரையுலகில் முக்கியமானதொரு அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அந்தக் குறும்படங்கள் பற்றிச் சற்று விரிவாக நோக்கலாம்.

அஞ்ஞான வாசம் 



மகாபாரதத்தில் தர்மரும் அவரது சகோதரர்களும் சூதாடி கௌரவர்களிடம் தோற்றபின்னர் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் செய்யச் செல்கின்றனர். அதைத் தொடர்ந்து ஒரு வருடம் எவரும் அடையாளம் காண முடியாத அஞ்ஞாதவாசம் செல்கின்றனர்.. அதற்கும் இந்தக் குறும்படத்துக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது. 

ஆழி அமுதன் என்கிற போராளியின் மறைவுக்கு பின்னர் அவனது சொந்தங்களுக்கு இடையே நிகழும் வாழ்வியல் பிரச்சினைகளையே ண்ஸ் ஜனாவின் “அஞ்ஞான வாசம்” குறும்படம் பேசுகிறது. ஈழத்தில் நடைபெற்ற யுத்தம் ஒன்றில் ஆழி அமுதன் இறந்துவிட தனித்துப்போகிறாள் அவனது மனைவி கயல்விழி. அந்த சமயத்தில் குழந்தையோடு இருக்கும் அவளுக்கு மறுவாழ்வு கொடுக்க முன்வருகிறான் கயல்விழியின் தமையனுடைய நண்பன். எமது சமூகத்தில் இன்னமும் பெண்களின் மறுமணம் குறித்த தீர்க்கமான பார்வை யாரிடமும் இல்லை என்பதே உண்மை. அப்படி இருக்க குழந்தையோடு இருக்கும் பெண்ணைத் தமது மகன் திருமணம் செய்ய எந்தப் பெற்றோர்தான் விரும்புவர்? எதிர்ப்புடனேயே கயல்விழியைத் சதாபிரணவன் ஏற்று நடித்த பாத்திரம் திருமணம் செய்கிறார். 

வருடங்கள் கடந்துபோக, புதுக்குடியிருப்பு போரில் இறந்து போனதாகச் சொல்லப்பட்ட ஆழி அமுதனை பிரான்சில் வைத்து எதிர்பாராத சந்தர்ப்பத்தில் சதாபிரணவன் சந்திக்க நேர்கிறது. அவனோடு பேசும் சதாபிரணவன் அவனது அஞ்ஞான வாசத்தை பற்றி தெரிந்துகொள்கிறார். குடும்ப வாழ்வு தனக்கு சரிவராது என்று சொல்லும் ஆழி அமுதன் சதாபிரணவனிடம் விடைபெற்றுச் செல்கிறார். 

NS ஜனாவின் முதலாவது குறும்படமாக இருந்தபோதும், ஈழத்தின் யுத்த வாழ்வைச் சொல்லும் அருமையான கதைக்களம், சிறந்த இயக்கம் என மிக நேர்த்தியானதொரு குறும்படத்தை வழங்கியிருக்கிறார். ஒரு படத்தைச் சிறந்த படமாக அடையாளப்படுத்த கதை, திரைக்கதை என்பவற்றோடு மூன்றாவதாகப் பாத்திரத் தேர்வும் முக்கியமானது. நல்ல கதைகள் கூட பொருத்தமற்ற பாத்திரத்தேர்வுகள் மூலம் சறுக்குவது உண்டு. இங்கே NS ஜனா பாத்திரத்தேர்வில் கவனமெடுத்திருப்பதைக் குறும்படத்தில் அவதானிக்கலாம். மிக இயல்பான நடிப்பை அனைத்து நடிகர்களும் கொடுத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு, படத்தொகுப்பு போன்ற தொழிநுட்பத் துறைகளில் சிறந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். 

அதேவேளை பின்னணி இசை சற்று உறுத்தலாக இருப்பதைத் தவிர்த்திருக்கலாம். பெரும்பாலான ஈழத்துக் குறும்படங்கள் பின்னணி இசையில் கவனம் செலுத்துவதில்லை என்பது ஒரு குறையாகத்தான் இருக்கிறது. சதாபிரணவனும், ஆழி அமுதனும் சந்தித்துக்கொள்ளும் இறுதிக்காட்சி அற்புதமாக வந்திருக்கவேண்டிய ஒரு காட்சி. நீண்டதொரு தலைமறைவு வாழ்க்கைக்குப் பின் தன் மனைவியின் இந்நாள் கணவனையும், தனது குழந்தையையும் காணும் ஆழி அமுதனினதும், இறந்துபோனதாக நம்பியிருந்த தனது மனைவியின் முன்னாள் கணவனை நீண்ட காலத்துக்கு பின் சந்தித்த சதாபிரணவனதும் மனப்போராட்டங்களை இன்னும் ஆழமாகக் காட்சிப்படுத்தியிருக்கலாம். அப்படிச் செய்திருக்கும் பட்சத்தில் குறும்படத்தின் வலு இன்னமும் அதிகரித்திருக்கும். ஆனால் மிகச் சாதாரணமாக்க் கடந்து போகிறது அந்தக் காட்சி.

அதேபோல படத்தின் இறுதியில் முன்வைக்கப்பட்ட போராட்டம் பற்றிய கருத்துக்களை தவிர்த்திருக்கலாம். அவை, இது ஒரு மக்களின் வாழ்வியல் சார்ந்த குறும்படம் என்ற நிலையிலிருந்து மாறுபட்டு ஓர் இயக்கம் சார்ந்த பிரச்சார குறும்படம் என்ற பாதையில் “அஞ்ஞானவாசத்தை” நகர்த்திவிடுகிறது

ஏன் இஞ்ச வந்தனி? 



”ஏன் இஞ்ச வந்தனி” இது ஒன்றும் சாதாரண கேள்வியல்ல. ஒவ்வொரு ஈழத்தமிழனையும் துரத்திக்கொண்டிருக்கும் கேள்வி. இந்தக் கேள்வியைத்தான் தன் படைப்பின் மூலமாக முன்வைத்திருக்கிறார் NS ஜனா. 

ஈழத்தின் பங்கர் வாழ்வு ஒன்றுடன் ஆரம்பிக்கிறது ஒரு இளைஞனின் வாழ்க்கை. அல்லது “ஏன் இஞ்ச வந்தனி” என்ற கேள்வியின் துரத்தல். விமானத்தாக்குதல்களுக்குப் பயந்து பங்கருக்குள் பதுங்கியிருக்கும் குடும்பத்தில் தாயின் வயிற்றில் கருவாக இருக்கிறான் அந்த இளைஞன். போர் ஏற்படுத்திய கொடுமைகளோடும், தன் பிள்ளையும் இங்குதான் வாழவேண்டுமா என்ற விரக்தியோடும் தாய் கேட்கிறாள் “ஏன் இஞ்ச வந்தனி?”. தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்த அவன் சிறிது கால ஓட்டங்களுக்கு பின் அயலவரின் கிணற்றில் தண்ணீர் குடிக்க முயற்சிக்கையில் விரட்டப்படுகிறான். மத வேறுபாட்டால் பாடசாலையில் இருந்து விரட்டப்படுகின்றான். ராணுவத்தால் பிடிக்கப்பட்டு கொடூரமான சித்திரவதைகளுக்குள்ளாகி வெளியில் வந்து கொழும்பில் தங்கியிருக்கிறான் அந்த இளைஞன். மீண்டும் பொலிஸ் கைதுசெய்து சித்திரவதைக்குள்ளாக்க, அங்கிருந்து மீண்டு வெளிநாடு செல்கிறான். அங்கும் அதே கேள்வி. ஈழத்துக்குத் திருப்பி அனுப்பப்படும் அவனை முள்ளிவாய்க்காலில் வைத்து ராணுவம் மீண்டும் கேட்கிறது “ஏன் இஞ்ச வந்தனி?”. இளைஞனின் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் “ஏன் இஞ்ச வந்தனி?” என்ற கேள்வி துரத்திக்கொண்டே இருக்கிறது. கேள்வியால் ஒதுங்கி ஒதுங்கி இறுதியில் முள்ளிவாய்க்காலில் ஒதுங்குகிறான் அவன். 

இந்த குறும்படத்தை சிறந்ததொரு குறும்படமாகவும் அதேவேளை எமக்கானதொரு அடையாளப் படைப்பாகவும் மாற்றியமைந்திருப்பவை மூன்று விடயங்கள். முதலாவது குறும்படத்திற்கான கதை. சமீபகாலமாக வெளிவந்த குறும்படங்களில், குறிப்பாக எமது யுத்தம் சார்ந்த அழிவுகளை மையப்படுத்தி வந்த குறும்படங்களில் ஆகச்சிறந்த கதையைக் கொண்ட குறும்படமாக “ஏன் இஞ்ச வந்தனி?” குறும்படத்தைச் சொல்லலாம். கதையை எழுதிய சங்கர் நாராயணப்பிள்ளைக்கும் அதைக் குறும்படத்திற்காகத் தெரிந்தெடுத்த NS ஜனாவுக்கும் பாராட்டுகள். 

இரண்டாவது விடயம் குறும்படத்தின் இயக்கம். நேர்த்தியான காட்சியமைப்புகள், மிக இயல்பாக்க் கையாளப்பட்டிருக்கும் தொழில்நுட்பம் என ண்ஸ் ஜனாவின் உழைப்பு படத்தை மேம்படுத்தியிருக்கிறது. படத்தில் வரும் பல காட்சிகள் மனதைக் கனக்க வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. குறிப்பாக முள்ளிவாய்க்காலில் நிகழும் இறுதிக்காட்சி பார்ப்பவரைக் கலங்கவைத்துவிடும். கொன்று குவிக்கப்பட்ட பிணங்களின் மேல் நின்று மேற்குலகமும் இந்தியாவும் சிரித்துக்கொள்ள, அந்த இளைஞன் சுட்டு வீழ்த்தப்படுவான். மேற்குலகை வெள்ளையனும், இந்தியாவை காந்தி தாத்தாவும் பிரதிநிதித்துவப்படுத்தி நிற்க, தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்திய அந்த இளைஞன் மண் மீது சரிவான். பல சேதிகளை மிக நுட்பமாக வெளிப்படுத்திய சிறந்த காட்சியமைப்பு இது. 

அதேபோல மூன்றாவது விடயம் விஜிதன் சொக்கா. அஞ்ஞான வாசம் படத்திலும் சிறியதொரு காட்சியில் வந்து சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார். இக்குறும்படத்தில் பிரதான பாத்திரம் விஜிதன் சொக்காதான். மிகச்சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார். திரைக்கதையும் படத்தொகுப்பிலும் மேலும் கவனம் செலுத்தியிருக்கவேண்டும். ஒரு நிகழ்வை படமாக்கும்போது, அந்த நிகழ்வு சொல்லும் செய்தியின் வெளிப்பாட்டை எவ்வளவு நுணுக்கமாகத் திரைக்கதையாக்குகிறோம் என்பதில்தான் படைப்பின் வெற்றி இருக்கிறது. ”ஏன் இஞ்ச வந்தனி?” திரைக்கதையில் அந்த நுணுக்கம் தவறியிருக்கிறது. படமாக்கியதில் கொடுத்த உழைப்பை திரைக்கதை உருவாக்கத்தில் கொடுக்க தவறியிருக்கிறார் ஜனா.

நிறை குறைகள் இருந்தாலும் அவற்றைத்தாண்டி இந்த இரு குறும்படங்களும் எமக்கானதொரு படைப்புகள் என்பதில் சந்தேகமில்லை. எமது இழப்புகளை படைப்புக்களினூடாக முன் வைக்கத் தகுந்த வகையில் புலம்பெயர் தேசத்தில் நிலவும் சுதந்திரவெளியை இக்கலைஞர்கள் மிகச் சிறப்பாகவே கையாளுகிறார்கள். இந்த படைப்பு முயற்சிகள் விரைவிலேயே எமது சினிமாவைக் காத்திரமான பாதையில் கொண்டுசெல்லும் என்பது எம் எல்லோரதும் நம்பிக்கை.

ஆக்காட்டி சஞ்சிகைக்காக 
மதுரன் ரவீந்திரன்

2 comments:

  1. தொடர்ந்து எழுதுங்கள் அண்ணே :)

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்.. நன்றி . கண்டிப்பா எழுதுறேன் :)

      Delete

Blog Archive

Followers

Powered by Blogger.
Copyright © சிறகுகள் |