Saturday, March 26, 2016

”ஈழத்து சினிமா” - கோடம்பாக்கத்தின் பிரதியாக்க கனவு !

இலங்கையை பொறுத்தவரை சிங்கள சினிமா ஓரளவு பலமான கட்டமைப்புடன் இயங்க ஆரம்பித்து பலகாலம் ஆகிவிட்டது என்றே சொல்லலாம். குறுகியதொரு பரப்பை களமாக கொண்ட வணிக சினிமாவும் சரி, சர்வதேச பார்வையாளர்களை இலக்காக கொண்ட உலகசினிமாவிலும் சரி சிங்கள சினிமா நன்றாக கால் பதித்துக்கொண்டுள்ளதோடு தொடர்ச்சியான இயக்க நிலையிலும் உள்ளது.

தமிழ் சினிமாவின் நிலை என்னவாக இருக்கிறது? புலிகளின் காலத்தில் பிரச்சார படங்களை தாண்டி சர்வதேச பார்வையாளர்களுக்கான  திரைப்பட முயற்சிகள் எடுக்கப்படவில்லை ஆயினும், திரைப்படத்துறை சார்ந்த தெளிவான திட்டமிடலும், நகர்வும் இருந்தது. வெளிநாட்டு திரைப்படங்கள் (தென்னிந்திய சினிமா உள்ளடங்கலாக) முற்றிலுமாக தடை செய்யப்பட்டோ அல்லது மிக இறுக்காமான தரக்கட்டுப்பாட்டுக்கு உட்பட்டோதான் வெளியிடப்பட்டன. அதற்கு மாற்றீடாக புலிகளாலேயே முதலீடு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட ஏராளமான திரைப்படங்களும் குறும்படங்களும் பெருமளவில் மக்களின் வரவேற்பை பெற்றிருந்தன. ஈழசினிமா என்ற கனவுக்கான நல்லதொரு களம் இக்காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையை, 1979 இல் நிகழ்ந்த ஈரான் இஸ்லாமிய புரட்சிக்கு பின்னரான ஈரானிய சினிமாத்துறையின் சூழ்நிலையோடு ஒப்பிடுவது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். ஈரான் அரசும், புலிகளும் கலைத்துறையின், முக்கியமாக சினிமாவின் தாக்கத்தையும், தேவையையும் நன்றாகவே புரிந்துகொண்டிருந்தார்கள். அதன் காரணமாகத்தான் ஒரு புறம் போர் நிகழ்ந்துகொண்டிருந்தாலும் சினிமாவுக்கான ஆதரவை தீவிரப்படுத்தியிருந்தார்கள். இருப்பினும், புலிகளால் பிரச்சார சினிமா என்ற வகையை தாண்டி வெளியே வரமுடியாமல் போன காரணத்தினால்தான் ஈரானிய சினிமா எட்டிய உச்சத்தை அவ்வளவு இலகுவில் அடைய முடியாமல் போய்விட்டது. புலிகளுக்கு பின்னரான காலத்தில், ஈழத்து தமிழ் சினிமாத்துறையை முதலில் இருந்து ஆரம்பிக்கவேண்டிய தேவை ஏற்பட்டதற்கும் இந்த  சூழ்நிலையின் தாக்கம்தான் அதிகமாக இருக்கமுடியும்.

தற்போது வரையறைகளோ, கட்டுப்பாடுகளோ அற்ற, முற்றிலும் சுதந்திரமான வெளியொன்று ஈழத்திலுள்ள திரைப்படத்துறை இளைஞர்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இத்தகைய சுதந்திரத்தின் வெளிப்பாடுகள் எத்தகையது என்பதை நாம் கண்ணுற்றபடியேதான் இருக்கிறோம். இப்பதிவின் பேசுபொருள் திரைப்படங்களின் உள்ளடக்கம் என்பதல்லாமல் திரைப்பட தயாரிப்பு பற்றியது என்பதால் அதை ஒருபுறம் வைத்துவிடுவோம். புலிகளின் காலத்தில் திரைப்படங்களுக்கென போதியளவு நிதி மற்றும் ஏனைய வளங்கள் புலிகளாலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. தற்போது, தயாரிப்பு என்பது நிர்வாக அமைப்பிலிருந்து தனிநபர் கைகளுக்கு மாறியதன் பின்னர், அதன் நோக்கமும், கையாளும் திறனும் முற்றிலுமாக வேறோர் பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. சற்று தெளிவாக சொல்லவேண்டுமானால், நல்லதொரு சினிமா துறை என்பதை விட இன்னுமொரு கோடம்பாக்கத்தை உருவாக்கும் பாதையில்தான் அது பயணிக்க ஆரம்பித்திருக்கிறது.

ஒரு பகுதி இளைஞர்கள் திரைப்படங்கள் மீதான ஆர்வத்தால் சொந்த முதலீட்டில் குறும்படங்களை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறார்கள். ஓரளவு புதிய முயற்சிகளிலும், ரசனைக்கேற்ற படங்களையும் கொடுப்பவர்களாகவும் இவர்களை அடையாளம் காணலாம். இவர்களுடைய ஆகக்கூடிய முதலீடு என்பது முப்பதாயிரம் ரூபாவுடன் முடிவடைகிறது. இன்னொரு பகுதியினர், புலம்பெயர் தேசத்திலிருந்தோ அல்லது ஈழத்தில் சிறு முதலாளிகளிடம் இருந்தோ முதலீட்டை பெற்றுக்கொள்கிறார்கள். கோடம்பாக்க மீள் உற்பத்தி என்ற கனவு இந்த வகையினரிடம் இருந்தே உற்பத்தியாகிறது. திரைப்படத்தின் கதை, தயாரிப்பில் ஆரம்பித்து இயக்குனர், நடிகர், நடிகை போன்றோரின் நடையுடை பாவனைகள் வரை கோடம்பாக்கம் பிரதி செய்யப்படுகிறது. ஈழத்து விஜய்களும், அஜித்களும், தனுஷ்களும் உருவாகுகிறார்கள். தமக்கான நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கிக்கொள்வதாக கற்பனைக்குள் புரள்கிறார்கள். இப்படியானதொரு மாயையான புகழ், கடந்த இரண்டுவருட காலத்தில் ஈழத்து சினிமாவை மோசமானதொரு நிலைக்குள் சிக்கவைத்திருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

மேற்கூறிய போலி அந்தஸ்துகள் எதுவுமில்லாமல், நல்ல கதை ஒன்றிற்கான தயாரிப்பாளரை பெற்றுக்கொள்வது மிக கடினமானதொரு செயல் என்னுமளவில்தான் இன்றைய ஈழத்தமிழ் சினிமா துறை இருக்கிறது. அப்படியே ஒருவர் முன்வந்தாலும், அவரது விருப்பத்துக்கு இணங்கி கதையில் சில நகைச்சுவைகளையும், சண்டைக்காட்சிகள் மற்றும் பாடல்களையும் இணைக்கவோ, தயாரிப்பாளரின் விருப்பத்திற்குரிய நடிகையை படத்தில் சேர்த்துக்கொள்ளவோ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இருந்துதான் நாம் “நமது சினிமா” பற்றி பேசவேண்டியிருக்கிறது.  நடிப்பையே அறியாத ஒருவர் நடிகை என்னும் பெயரில் நாளொன்றுக்கு பத்தாயிரம் சம்பளமாக பெற்றுக்கொண்டிருக்க, நல்ல கதையொன்றை வைத்திருப்பவன் இருபதாயிரம் ரூபா முதலீட்டை பெற்றுக்கொள்ளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் இருந்துதான் எமது “ஈரானிய சினிமா” இலக்கை கனவுகாண வேண்டியுள்ளது.

ஆக, கனவு ஈரானிய சினிமாவாகவும், நகர்வு கோடம்பாக்க சினிமாவாகவும் இயங்க ஆரம்பித்திருக்கும் எமது சினிமா துறையின் எதிர்காலம் குறித்து பலமாகவே துயரப்படவேண்டியுள்ளது. வணிக சினிமா என்பது எமக்கு தேவையான ஒன்றுதான். தொழில்நுட்ப கலைஞர்களை தொடர்ச்சியான இயங்குநிலையில், பயிற்சியில் வைத்திருக்க, கலைத்திரைப்படங்களுக்கான முதலீடுகளை இலகுபடுத்த, மக்களின் களிப்பு மனநிலையை ஈடுசெய்ய, தொழில்துறையாக்குவதன் மூலம் இத்துறையில் ஈடுபடும் இளைஞர்களின் பொருளாதார தேவைகளை சரிசெய்ய என பல்வேறு காரணங்களுக்காக வணிக சினிமாவின் தேவையை நியாயப்படுத்தலாம். ஆனால் கோடம்பாக்க சினிமாவை பிரதி செய்வதன் மூலம் வணிக சினிமா என்ற நிலையை ஒருபோதும் அடைந்துவிடமுடியாது.

ஈழத்தில் இருந்து சர்வதேச களத்துக்கு சென்ற ஒரே படமாக இளங்கோராமின் “மௌன விழித்துளிகள்” குறும்படத்தை குறிப்பிடலாம். வியாபார ரீதியாக ஒரு மாற்றத்தை கொண்டுவந்த படமாக எதை சொல்லமுடியும்? ஐந்து முதல் பத்து இலட்சம் வரை முதலீடாக கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்கள் போட்ட முதலையாவது மீளப்பெற்றுக்கொள்கிறார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. பின் எப்படி வணிக சினிமா சாத்தியம்?

ஏன் ஈழத்து சினிமா இன்னொரு கோடம்பாக்கம் ஆகமுடியாது. அல்லது அப்படி ஆகுவதில் உள்ள ஆபத்து என்ன? அட, நம்ம பையன் விஜய் மாதிரி பண்ணுறான், அஜித் மாதிரி பண்ணுறான் என்று சுய இன்பம் காண்பதுடன் ஒரு துறை பலம்பெற்றுவிடமுடியுமா?

சினிமா துறையை பொறுத்தவரை அடித்தளம் இடுவதற்கும், தக்கவைத்துக்கொள்வதற்கும் “புதியன புனைதல்” அவசியமாகிறது. அதிலும், வர்த்தக நோக்கில் நகரும்போது இதன் அவசியம் கட்டாயமாகிறது. வெறுமனே கதை டெம்ப்ளேட்களையும் நட்சத்திர அந்தஸ்துக்களையும் போலியாக பிரதிசெய்வதன் மூலம் வர்த்தக சந்தையில் இடம்பிடித்துக்கொள்ளலாம் என்பது முகட்டுவளையை பார்த்து கனவு காண்பதற்கு மட்டுமே சாத்தியமானதாக இருக்கும்.

சிறிய கதை ஒன்று.. நான் சிறியவனாக இருந்த காலத்தில் என் தந்தையார் நெல் பயிரிட்டு விவசாயம் செய்தவர். அவர் நெல் விதைக்கும் காலத்தில், சில நெல்விதைகளை திருடி, வீட்டு கோடியில் குட்டியாக ஒரு வயல் செய்து விதைத்து விளையாடுவேன். காலப்போக்கில் அதில் பத்தோ பதினைந்தோ விதைகள் முளைத்திருக்கும். அதற்கு பசைளை இடவேண்டும், அறுவடை செய்யவேண்டும், சந்தையில் விற்கவேண்டும் என்றெல்லாம் தீவிரமான கனவு இருக்கும். அப்பாவை கூட்டிக்கொண்டுபோய் என் வயலை காட்டினால் அவர் சிரித்துக்கொண்டே முதுகில் தட்டிவிட்டு போய்விடுவார். அப்பாவை போலவே வயல் செய்து விற்க முனைந்த என் பரிதாபத்திற்குரிய கனவு அத்தோடு மறைந்து போய்விடும்.

இப்போ ஈழ சினிமாவுக்கு வருவோம் :) இந்திய சினிமாத்துறை என்பது நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆரம்பித்து அப்போதே பலமானதும், பரந்தளவுமான வியாபாரச்  சந்தையை கையகப்படுத்திக்கொண்டுள்ள துறை. மிகப்பலமான வலையமைப்பு அது. அப்படியான தளத்தில் கால்பதிக்க முயற்சிக்கும்போது எமக்கு ஒரு தனித்துவம் தேவைப்படுகிறது. எனது வயல் விளையாட்டை போல, அவர்களையே குழந்தைத்தனமாக பிரதிபண்ணிவிட்டு சந்தைப்படுத்த முயற்சிப்பதெல்லாம் சுத்த அபத்தம். வியாபாரம் என்பது தட்டிக்கொடுப்பதற்கெல்லாம் அப்பாற்பட்டது எனபதை புரிந்துகொள்ளவேண்டும். இதுவரை ஐந்தோ ஆறோ முழுநீள திரைப்படங்கள் ஈழத்தில் எடுக்கப்பட்டு திரையிடப்பட்டுமிருக்கின்றன. இவற்றில் எத்தனை முதலிட்ட காசையாவது திருப்ப பெற்றுக்கொண்டார்கள் என்று கேட்டு பார்த்தால் ஒருவரும் இல்லை என்பதுதான் பதில். இதில் என்ன பயன்? நாங்களும் இந்திய லெவல் என்று சுய இன்பம் கண்டதுதான் மிச்சம்.

ஒரு  திரைப்படத்தை முழுமையாக்கி அதை திரைக்கு கொண்டுவரும் வரைக்குமான செலவாக, ஆகக்குறைந்தது பன்னிரண்டு இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. (பணியாற்றுபவர்களின் ஊதியம் உள்ளடங்கலாக) இவ்வளவு பணம்,நேரம் செலவு செய்து எடுக்கும் படத்தை ஒன்றிரண்டு நாட்கள் ராஜாவிலோ, செல்லா தியேட்டரிலோ ஓட்டிவிடுவதுடன் எல்லாம் முடிந்துவிடுகிறது.  மிஞ்சி மிஞ்சி போனால் இரண்டு இலட்சத்தை திருப்ப பெறலாம். இதுவா வியாபாரம்?

ஏன் இந்த படங்களை சந்தைப்படுத்த முடியவில்லை என்றால், அவற்றின் பிரதி பண்ணப்பட்ட உள்ளடக்கங்கள்தான் காரணம். சந்தைவாய்ப்புக்கள் இல்லை என்பதெல்லாம் இயலாமையான பேச்சுக்கள்தான். சந்தை வாய்ப்புக்களை நாம்தான் உருவாக்கிக்கொள்ளவேண்டும். அதற்கு “புதியன புனைதல்” வேண்டும். என்னை பொறுத்தவரை லெனின் சிவத்தின் ”A Gun and a Ring" தமிழ்சினிமாவிலிருந்து முற்றிலிம் மாறுபட்ட, அதேநேரம் வர்த்தக சினிமாவுக்குரிய அத்தனை சாத்தியங்களையும் கொண்ட திரைப்படம். ஆனால் போதியளவான சந்தைப்படுத்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்படாமையால் வெற்றியடைய முடியவில்லை.

நாங்கள் சிறிய வயதிலிருந்தே கோடம்பாக்க சினிமாவுடன் வளர்ந்தவர்கள். எங்களுக்கு அப்படியான சினிமாக்கள்தான் பிடிக்கும் என்றால் வர்த்தக நோக்கை முற்றிலுமாக மறந்துவிட்டு சுய திருப்திக்காக சிலகாலம் படம் எடுத்துவிட்டு வேறு வேலைகளை பார்க்க ஆரம்பிக்கலாம். இல்லாவிட்டால் கோடம்பாக்க சினிமா இறக்குமதிகளை இங்கு தடைசெய்துவிடலாம். புலிகளும் அதைத்தான் செய்தார்கள். இஸ்லாமிய புரட்சியின் போது ஈரானிலும் அதைத்தான் செய்தார்கள். ஆனால் அதற்குரிய சூழ்நிலை இப்போது இல்லை என்பதுதான் யதார்த்தம்.



மதுரன் ரவீந்திரன்




2 comments:

  1. தேவையான ஆய்வு... இங்கு தொழில் பிரிப்பு என்றொரு பக்கம் குறித்து அதிகம் சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.. ஈழத்து சினிமா எனும் போது, திரைபட இயக்குனரே, நடிக்கவும், தயாரிக்கவும், சந்தைப்படுத்தவும், சில சமயம் பார்க்கவும், விமர்சிக்கவும் வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது ஒரு சுமை. ஒரு தனி நபர் இந்த எல்லா பணிகளையும் செய்யும் போது, அவரால் அதில் எந்த அளவு முழுமை காண முடியும் என்ற கேள்வி எழுகிறது. இங்கு இயக்குனர் அது சார்ந்த தொழிலை மட்டும் செய்வதும், மற்றமற்ற துறைகளும் தனித்தனியே தங்களின் துறை சார் பணிகளை செய்யவும் வேண்டும். அப்படி சந்தைப்படுத்தலுக்கென்று ஒரு துறை உருவாகும் போது, அதற்கான சந்தையும் உருவாகும். இதற்கு நீண்டகாலம் எடுக்கலாம். எனினும் சாத்தியமே...

    ReplyDelete
  2. யதார்த்தமான ஆய்வு...

    ReplyDelete

Blog Archive

Followers

Powered by Blogger.
Copyright © சிறகுகள் |