Wednesday, June 20, 2018

ஞாபகச்சுவரில் அடுக்கப்படும் நிகழ்காலக்குறிப்புகள்

வயலின் இசைத்துக்கொண்டிருக்கிறது. சுற்றிலும் பெய்துகொண்டிருந்த மழையிலிருந்து கடற்காற்றின் வாசனை வீசுகிறது. பொழிந்துகொண்டிருந்த நீரின் ஓசையை ஊடறுத்து வயலின் இசைக்கிறது. மெல்ல மெல்ல மழையின் ஒலி அமிழ்ந்துபோக வயலின் மிதந்து பரவுகிறது.

ஒன்றரை வயதில் இது நடந்திருக்கலாம். ரெண்டாம் குறுக்குத்தெருவில் வசித்ததாக இப்போது ஞாபகம். சித்தப்பா வந்து கப்பல் வந்திருப்பதாக சொல்கிறார். பார்க்கவேண்டும் என்று அடம்பிடித்து அவர் சைக்கிளில் அமர்ந்துகொள்கிறேன். ஒன்றரை வருடங்கள் மட்டுமே உலகப் பரிச்சயம் உள்ள அந்த சிறுவனின் கண்களில் அப்பயணம் நிகழ்ந்த இரவின் காட்சிகள் விரிகின்றன. பெற்றோல்மக்ஸ் விளக்கு வைக்கப்பட்ட கடைகள், இருளும் ஒளியும் கலந்து தீட்டப்பட்டு நடமாடும் மனிதர்கள், அவர்களின் முகங்கள், உரையாடல்கள், உடல்மொழிகள், இவை வெளிப்படுத்தும் வெவ்வேறு உணர்வுகள், லாம்பு வெளிச்சத்தோடு நகரும் உணவு நிரப்பப்பட்ட தள்ளு வண்டிகள்... எல்லாமே பேராச்சரியமாக நிகழ்ந்துகொண்டிருந்தது அன்றைய இரவு. மழை மெதுவாக தூறிக்கொண்டிருந்தது.

“அந்தா... கப்பல்”. சித்தப்பா எதையோ காட்டுகிறார். சைக்கிளின் முன் கரியரில் உட்கார்ந்தவாறே பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு முன் இருளின் வர்ணத்தில் நீர் பரந்திருக்கிறது. அலைகளின் ஓசை நீண்டு ஒலிக்க, வெகு தொலைவில் வெளிச்சம் ஒன்று தெரிகிறது. அப்போதையை நினைவுகளின் படி, கடலுக்கு நடுவே மிதக்கும் கிணறு ஒன்றும் அந்த கிணற்றினுள்ளே கப்பல் ஒன்று நிற்பதாகவும் தெரிகிறது. கப்பல் ஒரு சிறிய வீட்டின் வடிவத்தினை ஒத்திருக்கிறது. நினைவுகளில் கப்பலின் வடிவம் சற்று சிதைந்தே இருக்கிறது.

வயலின் இசைத்துக்கொண்டிருக்கிறது. இப்போதும் நான் அந்த கப்பலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். நேர்சரி படிக்கும்போது என்னோடு கை கோர்த்து திரிந்த, பக்கத்து வீட்டு சுமிதா இரண்டாம் குறுக்குத்தெருவில் நடந்து திரிகிறாள். அவள் அப்போது வைத்திருந்த சிவப்பு வர்ண புத்தகப் பையை இப்போதும் முதுகில் கொழுவியிருக்கிறாள். பனை ஓலைத்தொப்பியுடன் அந்த தெருவில் அவள் ஒய்யாரமாக நடந்துகொண்டிருக்கிறாள். தூறிக்கொண்டிருக்கும் மழையை தன் முகங்களால் எதிர்கொள்கிறாள். துளிகளை முத்தமிடுகிறாள். கடற்காற்று என் நாசியை தீண்டுகிறது.

மழை தூறிக்கொண்டிருந்த ஒரு நாளில் நாமெல்லாம் புறப்பட்டிருந்தோம். எல்லோருமெ... அந்த வீதியில் என் நினைவுகளில் இருந்த எல்லோருமே... சூட்கேசுகள், பைகள் சகிதம் பயணம் தொடங்கியது. அவ்வளவு கூட்டத்துடனான பெரும் பயணத்தை முதன்முதல் பார்க்கிறேன். ஆச்சரியம் கொட்டிக்கிடந்தது. மழை பொழிந்துகொண்டிருந்த தருணத்தில் வரிசையில் காத்திருந்தது போலவும், மயங்கி விழுந்திருந்த ஒரு அக்காவுக்கு அவர் குடும்பத்தவர் குடைபிடித்துக்கொண்டே நீர் கொடுத்தது போலவும் காட்சிகள் நினைவுகளில் பதிந்திருக்கின்றன. மழைநாளொன்றில் நிகழ்ந்த முதல் கடல் பயணமாக அது இருந்தது. சுற்றிலும் இருள் மட்டுமே சூழந்த அந்த பயணம் குளிர்காற்றோடும், படகின் அசைவோடும் நிகழ்ந்திருந்தது.

வயலின் இசை மெல்ல அமைதியடைகிறது. பின் அந்த இசை நின்றுவிட மழை ஆரம்பிக்கிறது. மழைநீர் பொழிவதும், மண்ணோடு மோதுவதும் பின் வழிந்தோடுவதுமான ஒலிகள் சூழலெங்கும் பரவியிருக்கிறது. மழையின் ஒலியில் ஒரு இசைக்கோர்ப்பு நிகழ்கிறது. மண்ணில் விழும் நீர், வீட்டு கூரையில், வாழை மரத்தின் இலைகளில், வேப்ப மரத்தில், கிடங்குகளில் நிரம்பியிருந்த இன்னோர் மழைநீரின் மேல் என வெவ்வேறு ஒலிகள் கோர்வையாகி இசையாகிறது. உன்னதம்...!

அதன் பின் பூமி அழியத்தொடங்குகிறது. அங்குமிங்குமாக மின்னல் வெட்டுகிறது. என்றுமில்லாத பேரொலியுடன் இடி இடிக்கிறது. நிலம் வெடித்துப் பிளர்ந்து எழுகிறது. பெருமழை பெய்கிறது. எங்கும் நிலம் வெடித்து அதிரும் ஒலிகள் தீப்பிழம்புகளின் காட்சியோடு வந்து சேர்கிறது. இவ்வளவு பிரம்மாண்டமாக அழிய வேண்டுமானால் பூமி எத்தனை பெரிதாக இருந்திருக்கவேண்டும். ஆச்சரியமாக இருக்கிறது. நாம் அமர்ந்திருந்த நிலத்தை தவிர்ந்த உலகம் அழிந்துகொண்டிருக்கிறது.

நண்பர்கள் கேக் ஒன்றை வெட்டுவதற்காக தயார் செய்கிறார்கள். மின்னல் வெட்டுகிறது. இப்போது மழையின் சாரல் நம்மீதும் தெறிக்க ஆரம்பிக்கிறது. மிக உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடலை தொடர்கிறோம். நாளை பிறக்கப்போகும் புதிய உலகத்தை தரிசிக்கும் ஆவல் அந்த ஆறு மனிதர்களிடத்திலும் நிறைந்திருந்தது. புதிய ஆதாம், ஏவாளை சந்திக்கப்போவதும், அவர்களுக்கு மொழியை கற்றுக்கொடுக்கப்போவதுமான கனவுகள் என்னை சுற்றிலும் நிறைந்திருக்கிறது.பின் மெல்ல மெல்ல பேரழிவு அடங்கிப்போயிற்று.

சைக்கிளை வீதியில் இறக்குகிறேன். புதிதாய் பிறந்திருந்தது உலகம். புதிய மனிதர்கள் அமைதியாக உறங்கிப்போயிருந்தார்கள். மழைநீரில் கழுவி விடப்பட்டிருந்த வீதிகளும் மரங்களும் கட்டடங்களும் மஞ்சள் விளக்கொளியில் பளபளத்துக்கொண்டிருந்தன. குளிர்ந்த கடற்காற்று வீசியது. மண்டூகங்களின் ஒலி ஏதோ ஒன்றை நினைவுபடுத்திக்கொண்டிருந்தது.

இப்போது வயலின் என் காதுகளில் இசைக்கத்தொடங்கியிருந்தது.

***
லிண்ட்சே...! கிறிஸ்துவ சஞ்சிகைகளில் வரும் வண்ண ஓவியங்களாய் பொழிந்துகிடக்கிறது ஏதன் தோட்டம். உன் கரங்களை பற்றியவாறு மரக்கதிரை ஒன்றில் உட்கார்ந்திருக்கிறேன். நாம் கீழிருந்த மரம் பூக்களை தவிர்த்து உன் வயலின் இசையை கொட்டிக்கொண்டிருந்தது. அந்த இசை பல வண்ணங்களாய், வடிவங்களாய் நம்மைச்சுற்றி மிக மெதுவாய் பறந்துகொண்டிருக்கிறது. 

கண்களை மூடியவாறு என் தோள்களில் சாய்ந்திருந்தாய். உன் உடல் அவ்வளவு மென்மையாக, குளிர்ந்திருந்தது. 

"நான் இப்போதெல்லாம் இசைப்பதை நிறுத்திவிட்டேன்" என்றாய். "உன் காதலால் நான் நிறைக்கப்பட்டிருக்கிறேன். என்னுள் இசை முற்றிலுமாய் தீர்ந்துபோய் காதல் நிரப்பப்பட்டிருக்கிறது. அது பொங்கிப் பிரவகிக்கிறது. வயலினை மீட்டும்போது அது என்னுள் நிறைந்துபோயிருக்கும் காதலையே இசைக்கிறது" என்கிறாய். 

"என்னை சுற்றிலும் காதல் மட்டுமே நிறைந்திருக்கிறது. நான் காதலின் குழந்தை" என்றும் சொல்கிறாய். இப்போது சொரிந்துகொண்டிருந்த இசை துகள்களை பார்க்கிறேன். துகள்கள் எல்லாம் பல வர்ண மழைத்துளிகளின் வடிவம் பெற்றிருக்கின்றன. வயலின் இசை வர்ண மழையாய் பொழிகிறது. அது நம்மீதும் பொழிகிறது. நீ சொன்னதுபோலவே அது காதலாக மட்டுமே இருக்கிறது. 

லிண்ட்சே...! என் காதலியே...! 

உன் உடல் ஒளியாய் மிதக்கிறது. முதலில் நீ இசையாய் உருக்கொள்கிறாய். பின் காதலாகிறாய். காதலுக்கான உன் வடிவம் உன் நிஜ வடிவத்தையே ஒத்திருக்கிறது. ஒத்திருக்கிறது என்ன. நீ நீயாகவே வடிவம் கொண்டிருக்கிறாய். 

நாம் முத்தமிட்டுக்கொண்டபோது உன் குரல் ஹம்மிங்காய், கோரஸாய் நமக்கு பின்னிருந்து இசைமீட்டியது. நீ ஆயிரம் லிண்ட்சேக்களாய் உருக்கொண்டு ஆயிரம் வயலின்களில் இசைமீட்டுகிறாய். அந்த இசை மிதந்து செல்லும் நதியைப்போல நம்மைச்சுற்றி பரவுகிறது. 

இப்போது என்னில் இருந்து விலகி, உன் வயலினை எடுத்து மீட்டத்தொடங்குகிறாய். இசை பெருவெள்ளமாய், பேரன்பாய் பாய்கிறது. அந்த இசையோடு நாமும் கரைந்து, நீருருக்கொண்டு பாய்கிறோம். ஒரு கணம் எகிப்து நதிக்கரையோரத்திலும், இன்னொருகணம் பனிபடர்ந்த மலைச்சிகரங்களிலும், அடர்ந்த வனங்களிலும் நீ இசைமீட்டிக்கொண்டிருக்கிறாய். உன்னை அணைத்தவாறே நான் இசையை கொண்டாடிக்கொண்டிருக்கிறேன். 

நாமும், இசையும், அன்பும் மட்டுமே நிறைந்திருந்த ஏதன் தோட்டம் அத்தனை அழகாய் பரந்திருந்தது.

***

அது என் பால்யகாலத்து நினைவொன்றின் எச்சமாகவோ அல்லது என் பதின்மங்களில் கண்ட கனவொன்றாகவோ இருக்கலாம். எதுவோ.. இப்போது அது அடிக்கடி என் நினைவுகளில் தொற்றிக்கொள்கிறது. பின்னிரவுகளில், எங்கோ ஓர் தூரத்தில் ஒலிக்கும் தொன்னூறுகளின் ஒலிபெருக்கிப் பாடல்கள் என்னை இலகுவாக அந்த நினைவுகளுக்கு கடத்தி சென்றுவிடுகிறது.

புகார்மூட்டத்தின் மத்தியில் சொற்பமே எஞ்சியிருக்கும் காட்சி அது. சுற்றிலும் புகார் சூழ்ந்திருக்கும் பெருவயல். நடுவே நீண்டுசெல்லும் மண்பாதையொன்றின் முடிவில் சிறு குடிசை. தன் லுமாலா சைக்கிளை மிதித்தபடி அப்பாவும், முன்னே நானும், கரியரில் அம்மாவும் அமர்ந்திருக்க, விஞ்ஞான புனைவுகளின் Loop போன்று அந்த பயணம் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. நாங்கள் ஏதோவொரு இலக்கை பற்றிய கனவுடன் பயணித்துக்கொண்டேயிருக்கிறோம்.

இப்போது வயல் வேறொன்றாக மாறியிருக்கிறது. அரிவு வெட்டப்பட்டு ஆங்காங்கே வைக்கோல்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. வயலை சுற்றியிருந்த வேலி, மாமரங்கள், பனைகள் எல்லாம் என் சொந்த ஊரைப்போலவே அந்த இடமும் இருப்பதாக நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறது. அடியோடு வெட்டப்பட்ட நெற்பயிரின் எச்சங்கள் கால்களை புண்படுத்துவது பற்றிய கவலையின்றி நானும் அவளும் ஓடிக்கொண்டிருக்கிறோம். அப்போது ஏழோ, எட்டோ வயதிருக்கலாம் நமக்கு.

திடீரென என் நகச்சுட்டு வந்த கைகளை பற்றிக்கொள்கிறாள். “நோகுதா..?” கேட்கும்போது அத்தனை அன்பையும், பரிவையும் அவள் முகத்தில் காணமுடிகிறது. ”நாங்க கலியாணம் கட்டுவமா..?” எந்த தயக்கமும் இல்லாமல்தான் அவள் கேட்கிறாள். நான் கோபத்தோடு விலகிச் செல்வதும், பின்னர் நாமிருவரும் மாமரமொன்றின் நிழலில் இருந்து படித்துக்கொண்டிருப்பதுமான நினைவுகளை புகார் சூழ்ந்திருந்தது.

இந்த நினைவுகளின் முடிவில் ஏதோவொரு இனம்புரியாத உணர்வின் சுழற்சியில் சிக்கிக்கொள்வதை உணரமுடிகிறது. ஏக்கம், கிளர்ச்சி, துக்கம் என பலவிதமாக என்னை புரட்டுகிறது இந்த நினைவுகள்.

ஆச்சரியம் என்னவென்றால் சாதாரண சமயங்களில் இந்த நினைவுகளை என்னால் மீட்டிக்கொள்ளமுடியாமல் இருப்பதுதான். எங்கோ தூரத்தில் ஒலிக்கும் தொன்னூறுகளின் ஒலிபெருக்கி பாடல்கள் மட்டுமே அந்த நினைவுகளின்பால் என்னை பயணிக்கவைக்கின்றன.

***
ஏதோ ஒரு அடையாளம் சொல்லமுடியாத போதையில் இருக்கிறேன். நிச்சயமாக அது மது போதையல்ல. நான் இயங்குவதே மிக இயல்பற்றதாகவும், கிறுக்குத்தனமாகவும் இருக்கிறது. மூளை தெளிவாகவே இருப்பதாக நம்புகிறேன். என்னை சுற்றிலும் நடப்பதை நூறு வீதம் தெளிவுடன் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. அதனால்தான் இது மது அல்ல என்கிறேன். என்னை தவிர்த்த புறவுலகின் அசைவுகள் யாவும் இதுவரை நடந்திராத விநோத முறையில் நிகழ்கிறது. என் முதுகுக்கு பின்னால் நிலத்திலிருந்து பெருவெடிப்புடன் பிரம்மாண்டமான தூண்கள் கிளர்ந்தெழுகின்றன. புகைத்துக்கொண்டிருக்கும் சிகரட்டின் புகை சிறுசிறு கற்களாக மாறி, தொண்டையை குத்தி அடிவயிறுவரை பயணப்படுவதை உணரமுடிகிறது. நேரம் கடந்துகொண்டிருக்க, புறவுலகின் இயக்கங்கள் மெல்ல மெல்ல வேகம் குறைந்து, அனைத்தும் உறைநிலை ஒன்றை நோக்கி நகர்வதை உணரக்கூடியதாக இருந்தது. ஆக, கஞ்சாவோ, அபினோ, ஹெரோயினோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் மது போதையல்ல. யாரோ திட்டமிட்டு எனக்கு இதை செய்திருக்கவேண்டும்.

வேண்டாம். இதிலிருந்து வெளிவரவேண்டும். தீரத்துடன் எழ முயற்சித்து... மெல்ல எழுந்து நிற்க, பாதத்திற்கு அடியில் பூமி சரிவாக மாறுகிறது. என் உச்சந்தலைமீது விழுந்துவிடும்போல் தோன்றுகிறது வீட்டின் கூரை. மீண்டும் சுவரை பற்றிப்பிடித்து சாய்ந்து, அமர்ந்துகொள்கிறேன். சொல்லமுடியாத பயமும், வெறுப்பும் என்னை சூழ்ந்துகொள்கிறது.

சொல்லப்போனால் அது ஒருவகையில் எனக்கு பிடித்திருக்கவும் செய்கிறது. எப்போதும் ஒரேமாதிரியாக பார்த்து பழக்கப்பட்ட என் அதே சூழல் தற்போது ஆச்சரியத்தை கொட்டி, யாரோ ஒரு சிறுவனின் விஸ்தரமான கனவுலகைப் போல என் முன்னே பரந்து விரிகிறது. நாளங்களின் வழியே குபுகுபுவென பாயும் இரத்தத்தின் ஸ்பரிசத்தையும், ஒலியையும் உணரும் தருணம்தான் எத்தனை கொண்டாட்டத்திற்குரியதாகிறது. அவ்வப்போது சரிந்தோ, பறந்தோ, தலைமேல் விழப்போவதாக பாசாங்கு காட்டியோ என நிலையற்றதொரு வடிவத்துக்கு மாறிவிட்ட அறையின் சுவர்தான் எத்தனை கிளர்ச்சியை உண்டாக்குகிறது. ஆனால் ஏதோ ஒன்று குறைவதாக உணர்கிறேன். ஏதோ ஒரு வெற்றிடம்.

அதோ... எனக்கு சற்று முன்னால் அசரவைக்கும் அழகுடன் பெண்ணொருத்தி உட்கார்ந்திருக்கிறாள். ஒருகாலை மடித்து அணைத்துக்கொண்டு, முழங்காலின் மேல் நாடியை புதைத்தவாறு என்னை பார்த்துக்கொண்டிருக்கிறாள். அந்த பார்வை அத்தனை காமத்தையும் அள்ளிக்கொட்டுகிறது. இதுவரை உணர்ந்த வெற்றிடம் அவளின் இல்லாமையாகத்தான் இருக்கவேண்டும். அவள் உடலை சுற்றியிருந்த மெல்லியதொரு துணி வெளிக்காட்டும் அழகுகள் என்னை கிறங்கடிக்கிறது.

உண்மைதான். இந்த போதை, காமம்... உலகின் உன்னதமான கொண்டாட்டங்கள் இரண்டும் எனக்கு இப்போதே வேண்டும். இந்த போதை தீரும் முன்னே பெண்ணுடலையும் கொண்டாடவேண்டும். அவள் வாய்திறந்து ஏதும் பேசியதாக நினைவில்லை. முதலில் தொட்டுணர்ந்தோம். பின் முத்தமிட்டு, பின்னி பிணைந்து, அந்த மென்மையான தோல்களோடு இடைவெளியற்று உராய்ந்து, முகர்ந்து, உள்நுழைந்து, மூச்சுவாங்கி முத்தமிட்டு.... இறுதியில் உச்சத்தை நெருங்குகையில்.... என்ன இது?? !

சற்றுமுன் மென்மையாக சுண்டியிழுந்த அந்த பெண்ணுடலின் தோல்கள் பார்க்கும்போதே சுருக்கம் விழ ஆரம்பிக்கிறது. சதைகள் தொய்ந்து, கன்னம் உட்குவிய, முடிகள் நரைத்தபடியே ஒவ்வொன்றாய் கழன்று விழ ஆரம்பிக்கிறது. ஈரலிப்பாய், பசபசப்பாக இருந்ததெல்லாம் சற்றும் காணச் சகிக்கமுடியாமல் உருமாறிக்கொண்டிருக்க, அந்த பேரழகி மெதுவாக சுருண்டு விழுகிறாள். சற்றுமுன் வனப்பாய் இருந்த அவளுடலின் பகுதியெங்கும் வாடித் தொய்ந்துபோன சதையை துழைத்துக்கொண்டு புழுக்கள் நெழிய ஆரம்பித்தன.

இப்போது போதை அருவருப்பக மாறுகிறது. வேண்டாம். இதிலிருந்து வெளிவரவேண்டும். மீண்டும் எழ முயற்சிக்க.... இல்லை.. இல்லை.. யாரோ எனக்கு சதிசெய்கிறார்கள். தேநீரிலோ, தண்ணீரிலோ நான் அருந்தும் ஏதோ ஒன்றில் எனக்கான கஞ்சாவோ அபினோ ஹெரோயினோ கலக்கப்பட்டிருக்கிறது. நான் உட்கார்ந்திருந்த கட்டில் இப்போது சற்று சரிகிறது... விழுந்துவிடுவேனோ என்ற அச்சத்தில், கட்டிலின் விளிம்பை பற்றிக்கொள்ளலாம் என திரும்ப, அந்த பெண்ணுடலின் உள்விழுந்த கண்கள் இப்போதும் என்னை அழைந்துக்கொண்டிருந்தது.

- ”புதிய சொல்” இதழிற்காக

0 Comments:

Post a Comment

Blog Archive

Followers

Powered by Blogger.
Copyright © சிறகுகள் |