Monday, October 13, 2014

Kon - Tiki - ஒரு சாதனையாளனின் பயணம் !

Kon - Tiki ஓர் உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக கொண்ட நோர்வேயியன் திரைப்படம். Thor Heyerdal என்னும் ஆராய்ச்சியாளனின் polynesia நாட்டை நோக்கிய பயணம்தான் Kon Tiki என்னும் இந்த திரைப்படம். தோர் தனது பயணத்தை பற்றி எழுதிய கட்டுரை 50 மில்லியன் பிரதிகள் விற்று தீர்ந்ததாகவும் பல்வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டதாகவும், பயணம் குறித்த தோரின் ஆவணப்படம் 1951 ஆம் ஆண்டு சிறந்த ஆவணப்படத்துக்கான அக்கடமி விருதினை பெற்றுக்கொண்டதாகவும் இணையத்தகவல்கள் சொல்கின்றன.

இப்போது நாம் 2012 இல் வெளிவந்த திரைப்படத்துக்கு வருவோம். படத்தின் கதை, Thor Heyerdal என்னும் ஆயாய்ச்சியாளர் polynesia என்னும் நாட்டை முதன் முதலில் சென்றடைந்தது தென் அமெரிக்கர்கள்தான் என்ற கோட்பாட்டை பலமாக நம்புகிறார். அதை உறுதிசெய்து புத்தகமாக வெளியிட வேண்டுமானால் polynesia விற்கு செல்லவேண்டும்.

ஆனால் இந்த பயணத்துக்கு ஆதரவளிக்க யாருமே முன்வரவில்லை. காரணம் தென் அமெரிக்காவின் பெருவில் இருந்து polynesia வுக்கு செல்லவேண்டுமானால் அண்ணளவாக 4300 மைல் தூரத்தை பசுபிக் பெருங்கடலினூடாக கடந்தாகவேண்டும். அன்றைய காலப்பகுதியில் இத்தனை தூரத்தை கடந்து செல்வதற்கான வசதிகள் இருக்கவில்லை. அதனால் Thor சொல்லும் கதைகளை நம்ப மறுக்கும் புத்தக வெளியீட்டாளர்கள் இந்த பயணத்துக்கு உதவி செய்யமுடியாது என மறுத்துவிடுகிறார்கள். இதேவேளை Tiki இனத்தவர்கள் சாதாரண கட்டுமரங்கள் மூலமாகவே பசுபிக் பெருங்கடலை கடந்தார்கள் என்ற தோரின் நம்பிக்கையை சுட்டிக்காட்டுகிறார் தோர் இறுதியாக சந்திக்கும் புத்தக வெளியீட்டாளர் ஒருவர். தோரின் மூளையில் பொறி தட்டுகிறது. “நாம் ஏன் கட்டுமரத்தின் மூலமாக பயணிக்கமுடியாது” என்ற கேள்வி மறுபடியும் கடலோடிகளின் உதவியை நாட வைக்கிறது. பலரின் மறுப்புக்கு பின்னர் ஐந்து பேர்கள் கொண்ட குழுவை தயார் செய்கிறார் தோர்.

கட்டுமரம் தயாராகிறது. எப்படியென்றால், அன்றைய காலப்பகுதியின் நவீன தொழில்நுட்பங்கள் எதுவுமற்று ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் Tiki இனத்தவர்கள் பயன்படுத்திய அதே கட்டுமாணத்தில் கட்டுமரம் தயார் செய்யப்படுகிறது. இது அபாயமானது என்ற மற்றவர்களின் சொல்லை விட Tiki இனத்தவரின் மீதும் அசைக்கமுடியாத நம்பிக்கை வைக்கும் தோர், நிச்சம் இது ஆபத்தை ஏற்படுத்தாது என உறுதியாக சொல்கிறார். பயணம் ஆரம்பிக்கிறது.   பெருவில் இருந்து 4300 மைகள் தூரத்தை நோக்கிய பயணம், அபாயங்கள் நிறைந்த பசுபிக் பெருங்கடலினூடாக....!

தோருக்கு நோர்வேயில் மனைவியும் இரு பிள்ளைகளும் இருக்கிறார்கள். அவர்கள் மீதான அன்பையும் மீறி, பசுபிக் பயணத்தில் இருக்கக்கூடிய அபாயங்களை எதிர்நோக்கி செல்லும் தோருக்கு இருக்கக்கூடியதெல்லாம் தனது இலட்சியத்தின் மீது கொண்ட வெறித்தனமான நம்பிக்கை மட்டுமே. இந்த பயணத்தின் நடுவில் வரப்போகும் அபாயங்கள், கட்டுமரம் உண்டாக்கக்கூடிய ஆபத்துக்கள், 4300 மைல் கடல் பயணத்தின்போது தேவைப்படும் உணவு, நீர்... எதுபற்றியும் தோர் கவலைகொள்ளவில்லை. ஒரே சிந்தனை, அது polynesia வை அடையவேண்டும், தனது கோட்பாட்டை நிரூபிக்கவேண்டும் என்பது மட்டுமே. தோரின் குணாதிசயமே நோக்கத்தில் இருக்கக்கூடிய ஆபத்துக்களை பார்ப்பதை விட இலக்கை அடைவது பற்றி சிந்திப்பது, செயல்படுவதுதான். படத்தின் ஆரம்ப காட்சியில் சிறுவன் தோர் சக நண்பர்களின் எச்சரிக்கையை மீறி அபயாகரமான ஆற்றின் பனிக்கட்டி மேல் தாவுவதில் இருந்து வெளிப்படுத்தப்படும் தோரின் குணாதிசயம், பசுபிக் கடலை கடப்பதற்கான வெறித்தனமான முயற்சியில், அந்த முயற்சியில் சந்திக்கும் அபாயங்களில் பார்வையாளனையும் படத்துடன் கட்டிப்போட்டுவிடுகிறது.

இடையில் கடற்புயலில் சிக்கி கட்டுமரம் சற்று நிலைகுலைய ஆரம்பிக்கும்போது தோரின் நண்பன் ஹெர்மன் தன்னுடன் கொண்டுவந்த கம்பிகளை எடுத்துக்கொண்டு அவற்றை உபயோகித்து கட்டுமரத்தை பலப்பிக்குமாறு தோரை வேண்டுகிறான்.  ஆனால் Tiki மக்களின் கட்டுமாணம் அசைக்கமுடியாதது, அவர்களின் பயண வழியை பின்பற்றுவது ஆபத்தில்லாதது என்ற தன் கோட்பாட்டில் அதீத நம்பிக்கை வைத்திருக்கும் தோர் ஹெர்மனின் வேண்டுகோளை நிராகரித்துவிடுகிறான். இறுதியில் வெற்றியும் பெறுகிறான்.

வெற்றி என்பது இலகுவானதல்ல. இலக்கை அடைவதற்கு ஓர் வெறித்தனமான ஆர்வம் வேண்டும். பைத்தியக்காரத்தனமான வெறித்தனம் வேண்டும். Kon Tiki யை பார்த்துமுடித்தபோது மனதில் தோன்றும் எண்ணம் இதுதான். Biography திரைப்படங்கள் ஒரு பொஸிடிவான சிந்தனையை பார்வையாளனுக்குள் தூண்டிவிடும். அதனாலேயே இந்த ஜேனர் திரைப்படங்கள் என்னை அதிகம் கவர்ந்துவிடுவதுண்டு. அந்த வகையிலும் Kon Tiki என்னை அதிகமாக கவர்ந்துவிட்டது.

அபாயம் நிறைந்த கடல் பயணம் என்ற லைனில் Life of Pi திரைப்படத்துடன் Kon Tiki ஒன்றுபட்டாலும் இரண்டுமே சற்று வேறுபடுகிறது. Life of Pi முற்றிலும் ஃபேண்டசி திரைப்படமாக நகர, Kon Tiki உண்மை சம்பவத்தை கொண்ட யதார்த்த திரைப்படமாக நகர்கிறது. என்னை பொறுத்தவரை Life of Pi ஐ விட கடல் பயணத்தின் அனுபவத்தை Kon Tiki சிறப்பாகவே சொல்லியிருக்கிறது. Adventure பிரியர்கள் தவறவிடக்கூடாத ஒரு படம்.

0 Comments:

Post a Comment

Blog Archive

Followers

Powered by Blogger.
Copyright © சிறகுகள் |