Sunday, October 8, 2017

சாவகச்சேரி to விசுவமடு - பயணக்கட்டுரை

”சாவகச்சேரியில் இருந்து விசுவமடுவரை சைக்கிள் பயணம் போகப்போகிறோம். விரும்பியவர்கள் இணைந்துகொள்ளுங்கள்” என்ற குமணனின் பேஸ்புக் பதிவை பார்த்ததுமே ”நாங்களும் போவமாடா..?” என்றான் கிரி. யோசிக்காமல் சரி என்றேன். எந்தவித முன்யோசனைகளும் இல்லாமல் எடுத்த முடிவு அது. இருந்தாலும் பயணம் தொடங்கிய வெள்ளிக்கிழமை காலை வரை நாம் போவது உறுதியற்றதாகவே இருந்தது.

கிரி திடீரென்று வரவில்லை என்பான். பின் திருப்பவும் வருகிறேன் என்பான். எனக்கு ஒரு சில வேலைகள் வந்தது. இந்த குழப்பங்களுக்கு மத்தியில் சைக்கிள் வேறு தயார் செய்யவில்லை. சுற்றியிருந்தவர்கள் எல்லாமே பயமுறுத்திக்கொண்டிருந்தார்கள்.

“பளை அல்லது ஆணையிறவு தாண்டமாட்டிங்கள்”
“இந்த சைக்கிள்ள எப்பிடி போகப்போறிங்கள். ஹாண்டில் எல்லாம் இப்பிடி ஆடுது?”
“கொஞ்சத்தூரம் போனதும் மஞ்சள் மஞ்சளா சத்தி எடுப்பிங்கள்...”
“கை கால் எல்லாம் பிடிச்சிரும். உப்பும், தேசிக்காயும் கொண்டு போங்கோ”

இவ்வாறாக ஏகப்பட்ட ஆலோசனைகளும், பயமுறுத்தல்களும். உயிரா போகுது. போய்த்தான் பார்ப்போம் என்று வெளிக்கிட்டாச்சு. போன வருசம் கழுவி பூட்டின சைக்கிள், ஒரு காத்துப்பம், அடுத்த நாளுக்கான உடை, ஒரு தண்ணீர் போத்தல்... இவ்வளவும்தான் கொண்டுபோனது. இதை தவிர ஏதும் நடந்தால் அவசர உதவிக்கென அங்கங்க ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு நண்பர்கள் மோட்டார் சைக்கிளோடு தயாராக இருக்க, சன்சிகனும் தனுஸும் மோட்டார் சைக்கிளில் கூடவே வருவார்கள். இதுதான் Backup.

காலை ஏழு மணிக்கு சாவகச்சேரியில் இருந்து பயணம் தொடங்குவதாக திட்டம். யாழ்ப்பாணத்தில் இருந்து 5.30 க்கு வெளிக்கிட்டோம். சரியாக 6.00 மணிக்கு சாவகச்சேரியை அடைந்து 7 மணிவரை காத்திருக்கவேண்டியதாகிவிட்டது. எங்கள் இரண்டு பேரை தவிர மிகுதி ஐந்து நண்பர்கள் பருத்தித்துறையில் இருந்து வரவேண்டும்.

சாவகச்சேரியில் - பயணம் தொடங்க சற்று முன்.

இதில் முக்கியமான விடயம்  எமக்கு எம் மீதுள்ள நம்பிக்கைதான். மற்றவர்கள் எங்கள் மீது எப்படியான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், மற்றவர்களுக்கு நாம் என்னவகையான நம்பிக்கையை ஏற்படுத்தப்போகிறோம் என்பதல்ல இந்த பயணத்தின் நோக்கம். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு 5 கிலோமீற்றர்களுக்குள்ளயே வேர்த்துக் களைக்க சைக்கிள் ஓடுற நானும் கிரியும் விசுவமடு வரைக்கும் போவம் எண்டு யாரும் நம்பிக்கை வைக்கமாட்டாங்கதான். எங்களுக்கே நம்பிக்கை வரேல்லத்தான். ஆனா அரை மணித்தியாலத்துக்குள்ள சாவகச்சேரிக்கு போய் சேர்ந்தது, அதுவும் துளி வியர்வை, களைப்பு இல்லாமல் போய் சேர்ந்தது பெரிய நம்பிக்கையை கொடுத்தது. அன்று மாலை 6.00 மணியளவில் தர்மபுரத்தில் இருந்து விசுவமடுவை நெருங்கிக்கொண்டிருந்தபோது நானும் கிரியும் அந்த நம்பிக்கை பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். இதுவரை எங்களைப் பற்றிய குறைவான மதிப்பீடே எங்களிடம் இருந்திருக்கிறது. இந்த பயணம் சரியான என்று சொல்லமுடியாவிட்டாலும் ஓரளவு எமது மதிப்பீடை சரிசெய்திருக்கிறது.  எம் நம்பிக்கை முழுமையடைந்திருந்தது.

7.30 அளவில் குமணனிடம் இருந்து அழைப்பு வந்தது. கச்சாய் வீதி தொடக்கத்தில் நிற்கிறம். வாங்கோ எண்டார். ஐந்து பேர் நின்றார்கள். எல்லாம் நம்மைப்போல சாதாரணமாகத்தான் வந்திருந்தார்கள். வாட்டப்பா மட்டும் தனித்து தெரிந்தார். அரைக்காட்சட்டை, தொப்பி, கூலிங் க்ளாஸ், காதில் இயர் போன், சப்பாத்து, போட்டிருந்த ரீ சேர்டுக்கு மேலால், இடுப்பை சுற்றி இன்னுமோர் ரீ சேர்ட், பிங் கலர் கியர் சைக்கிள், முன்னுக்கும் பின்னுக்குமாக இரண்டு தண்ணீர் போத்தல்கள்... பயணப்பையில் பாயும் தலகாணியும் வைத்திருந்திருக்கிறார் என்பதை விசுவமடு போய் சேர்ந்தபின் தான் தெரிந்துகொண்டோம். வாட்டப்பாவை பார்த்ததும் ஒரு பயம் “இந்தாள பாத்தாலே நல்லா ஓடுவார் எண்டு தெரியுது. நாங்கதான் முக்கப்போறம்”

நாம் எதிர்பார்த்து சென்றதுபோல பயணம் ஏ9 வீதியால் இருக்கவில்லை. முடிந்தவரை ஏ9 பாதையை தவிர்த்து உட்புறங்களால் செல்வதே குமணனின் திட்டமாக இருந்தது. இடங்கள் பார்ப்பதற்கும், சைக்கிள் பயணத்துக்கும் அதுதான் சரி  சாவகச்சேரியில் இருந்து விசுவமடு 60 கிலோமீற்றர்தான் என்றாலும் நம் பாதை 90 கிலோமீற்றராக இருந்தது. பயணம் தொடங்கியது. கச்சாய் வீதி சிறிது தூரம் சென்றதும் சிக்கல் கொடுக்க ஆரம்பித்தது. யாழ்ப்பாணம் to சாவகச்சேரி கார்பெற் வீதி என்பதால் பிரச்சினை இருக்கவில்லை. ஆனால் இங்கு அப்படி இல்லை. கிரவல், ஊரி, மணல் என்று பாதைகளின் அமைப்பு அடிக்கடி மாறிக்கொண்டிருந்தது. மணல் பிரதேசங்களில் சைக்கிள் புதைந்து, நகர மறுத்து முரண்டு பிடிக்கத்தொடங்கியது. எல்லோரும் கொஞ்ச கொஞ்ச இடைவெளியில் ஓடிக்கொண்டிருக்க, வாட்டப்பா மட்டும் மிக நீண்ட இடைவெளியில் பின்னால் வந்துகொண்டிருந்தார். “வாட்டப்பாவே இவ்வளவு மெதுவாக வாறார் எண்டால்.... மனுசன் பெருசா ஏதோ திட்டம் வச்சிருக்குது. முன்னுக்கு மெதுவா தொடங்கி பின்னால உச்சத்துக்கு வருவார். நாங்கதான் கஷ்டப்படப்போறம்...” பாதை கடினமாக இருந்தாலும் இருபுறமும் அடர்ந்திருந்த நாவல் மரங்களும் அது கொடுத்த நிழலும் அருமையாக இருந்தது. இடையில் கண்ணிவெடி அகற்றும் இடத்தில் ஓய்வெடுத்தோம்.

9.30 அளவில் பளைக்கு வந்துசேர்ந்தோம். ஒரு வீட்டு கதவை தட்டி தண்ணீர் போத்தல்களை நிரப்பிக்கொண்டு காற்றாலைகள் நிறுவப்பட்டிருந்த பிரதேசத்துக்கு சென்றோம். ”தம்பி... ஃபான் பூட்டியிருக்கிற தூரம் வரைக்கும் ரோட்டு இருக்குது. அங்கால ரோட் இல்லை. காட்டுப்பாதை. போனா செத்திருவிங்கள்” எண்டார் செக்கியூரிட்டி.

“பரவாயில்லை. நாங்க போறம்”

“சரி போய் சாவுங்கோ..” சலித்துக்கொண்டே பாதை மறிப்பை திறந்துவிட்டார் அவர். மொத்தம் பதினாறு காற்றாலைகள் ஆறு கிலோமீற்றர் தூரத்துக்குள் நிறுவப்பட்டிருந்தன. கிரவல் வீதி என்பதால் கஷ்டம் இருக்கவில்லை. பாதி வழியில் எங்கள் ரெஸ்கியூ ரீம் (சன்சிகன், தனுஸ்) அழைப்பில் வந்தது.

“எங்க நிக்கிறிங்க..?”
“பத்தாவது காற்றாலைக்கு பத்தில நிக்கிறம்”
“செக்கியூரிட்டி விட்டுட்டாரா? நாங்க எப்பிடி வாறது?”
“நீங்க வாங்க. எங்க போறிங்க எண்டு கேட்பார். சாகப்போறம் எண்டு சொல்லு. விட்டிருவார்”



அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து ரோல்ஸும், கிழங்கு ரொட்டியும் வாங்கி தந்துவிட்டு சென்றார்கள். அதற்கு மேல் மோட்டார் சைக்கிள் வரமுடியாது என்பதால் அவர்கள் ஆணையிறவில் போய் எமக்காக காத்திருக்க வேண்டும். இந்த பயணத்தில் ரெஸ்கியூ டீமின் பணி முக்கியமானது. என்னையும் வாட்டப்பாவையும் காட்டுக்குள் இருந்து மீட்டெடுத்தது, காணாமல் போன வாட்டப்பாவை தேடி மீட்டது என்ற இரு பெரிய சம்பவங்கள். தவிர மிகுதி நேரமெல்லாம் எங்களை போட்டோ எடுப்பது, பின் கடந்துபோய் எங்காவது பஸ் தரிப்பிடத்தில் ஓய்வெடுப்பது, நாம் அவர்களை கடந்துசெல்ல மீண்டும் பைக்கை எடுத்துக்கொண்டு எங்களை கடந்து போய் அடுத்த பஸ் தரிப்பிடத்தில் ஓய்வெடுப்பது.... இடையில் பழுதாகும் சைக்கிள்களை கொண்டுபோய் திருத்திக்கொண்டு வருவது என்று முக்கியமான களப்பணிகளை ஆற்றியிருந்தார்கள்.



செந்நிற கிரவல் ரோட் முடிந்து வெள்ளை வெளேரென்ற மணல் பாதை ஆரம்பித்தபோது சிறிது நேரம் கண்கள் கூசியது. அட்டகாசமா இருக்கே என்று ஆச்சரியத்தோடு ஆரம்பித்தால் பின்னர்தான் பிரச்சினை புரிந்தது. பத்து கிலோமீற்றருக்கும் அதிகமான அந்த சதுப்புநிலக்காட்டில் மணலில் புதைந்து புதைந்துதான் சைக்கிள் ஓடவேண்டும். இரண்டு கிலோமீற்றர் தாண்டவே சீவன் போனது. சைக்கிளில் ஏறி இரண்டு மிதி மிதிக்க அடுத்த மணல் கும்பி வந்து சைக்கிள் புதைந்து அசையாமல் நிற்கும். மறுபடி இறங்கி உருட்டவேண்டும். சும்மாவே வெயில் கொளுத்தும். இது காட்டு வெயில் வேறு. பத்து நிமிடத்துக்கு ஒரு முறை தொண்டை வரண்டது. கண்கள் தீப்பற்றியது போன்று எரிந்தது. நிரப்பி வந்த தண்ணீர் போத்தல்கள் வேறு விரைவாக முடியத்தொடங்கியது. பாதைகள் வேறு சரியாக தெரியவில்லை. உச்சக்கட்டமாக, நடுப்பகுதியை அடைந்தபோது பாதை இரண்டாக பிரிந்தது. எந்த பக்கம் திரும்புவது என்ற குழப்பம். இடப்பக்கமா வலப்பக்கமா? உச்சி வெய்யில் மண்டையை பிளந்தது. எல்லோரும் இடப்பக்கம் போகலாம் என்று முடிவெடுக்க வாட்டப்பா மாத்திரம் வலப்பக்கம்தான் போகவேண்டும் என்று அடம்பிடித்தார். ”கூகிள் மப்ல இந்த பக்கம் ரோட் இருக்கிறதா காட்டினது. இதுதான் கிட்டயும். இதாலயே போவம்” என்றார். சிக்கல் என்னவென்றால் சரியாக தெரிவு செய்யவேண்டும். போய் பாத்துவிட்டு திருப்ப எல்லாம் வரமுடியாது. பிழையான வழியை தெரிவுசெய்தால் பயணம் தொடரமுடியாமல் பாதியிலேயே கைவிடவேண்டியதுதான். வாட்டப்பா வலப்பக்கத்தை சொன்னதால் எல்லோரும் நம்பிக்கையோடு இடப்பக்கத்தை தெரிவு செய்தார்கள். ஆணையிறவில் ஏறியபோதுதான் சன்சிகன் சொன்னான், ”வலப்பக்கம் போனால் ஒரு கடல்நீரேரியோடு பாதை முடிகிறது. அங்கால போட் இருந்தாத்தான் போகலாம்”

ரோல்ஸை சாப்பிட்டு சற்று எனெர்ஜி ஏற்றிவிட்டு பயணம் தொடர்ந்தது. இடைக்கிடை ஐந்து நிமிட ஓய்வோடு தொடர்ந்தோம். சுகிர்தனின் சைக்கிள் பழுதடைந்துவிட்டதால் சுகிர்தனும், பராச்சும் நடந்தே வந்தார்கள். நடுவில் நானும் வாட்டப்பாவும் மெதுவாக செல்ல, முன்னே குமணன், கிரி, பச்சன் போய்க்கொண்டிருந்தார்கள். இடையில், நடந்துவந்த பராச்சும், சுகிர்தனும் காணாமல் போக, நின்று அவர்களை கூட்டிக்கொண்டுபோகலாம் என்று மரநிழல் ஒன்றில் ஒய்வுக்காக ஒதுங்கினோம். நல்ல குளுமையான காற்று வீசியது. சற்று கண்ணை மூடி படுத்துவிட்டு கண்களை திறந்தால் கண்ணுக்கு மேலே நாவல்பழம் தொங்கியது. நல்ல பெரிய சைஸ் நாவல் பழங்கள். படுத்திருந்தே கையால் பறிக்கலாம் என்னுமளவிற்கு பதிவாக தொங்கியது. பராச் ரீமும் வந்துவிட எல்லோரும் நாவல் பழங்களை புடுங்கி சாப்பிட்டேம். மரம் எல்லாம் நாவல் பழம் நிறைந்திருக்க வாட்டப்பா மட்டும் எறும்பு கூட்டுக்குள் கை விட்டு கடி வாங்கினார்.


பராச்சிடம் வோட்டர்மெலனும், அப்பிளும் பையில் இருப்பதாக சொன்னான். சாப்பிடுவோமா என்றேன். “இல்லை. அவங்களை விட்டுட்டு சாப்பிடுறது சரியில்லை. ரோட்டுக்கு ஏறினதும் எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவம்” என்றான்.

மீண்டும் பயணம். ரெண்டு கிலோமீற்றர் தாண்டவில்லை. தண்ணீர் கொஞ்சம்கூட இல்லை. முன்னால் போனவர்கள் மிச்சம் இருந்த தண்ணீர் போத்தலையும் கொண்டு வெகுதூரம் போய்விட்டார்கள். தொண்டை மட்டுமல்லாது மொத்த உடலுமே தண்ணீர் இல்லாது வரண்டுவிட்டது. இதற்கு மேல் ஒரு அடிகூட நகரமுடியாது, சற்று ஓய்வெடுக்கலாம் என்று பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சிறு மரம்கூட நிழல் கொடுக்க இல்லை. ஒரே ஒரு பற்றை மட்டும் தென்பட்டது. சிறிதளவான நிழல். பரவாயில்லை என சைக்கிளை ஓரமாக போட்டுவிட்டு பற்றைக்குள் தலையை நுழைத்துக்கொண்டு படுத்துவிட்டோம். நான், எனக்கு பக்கத்தில் வாட்டப்பா. சுகிர்தனும் பராச்சும் சிலநூறு மீற்றர்கள் பின்னுக்கு உட்கார்ந்திருந்தார்கள்.

அந்த நிழல் பெரும் வெக்கையாக இருந்தது. காற்று வேறு இல்லை. உடல் கொஞ்சம் கொஞ்சமாக சூடேறுவது தெரிந்தது. தண்ணீர் கண்டிப்பாக வேண்டும். வாட்டப்பா எதையும் நேரடியாக சொல்ல வெட்கப்பட்டார். அதனால் “உங்களுக்கு கை கால் குறண்டுதா?”, “தலை கொதிக்குதா?” என்று சந்தேகமாகவே கேட்பார். நான் ஓமென்றால் அவர் “எனக்கும்தான்” என்பார். காது அடைத்தது. பார்வை மங்கியது. தண்ணீர் அதிகமாக தேவைப்பட்டது.

வரும் வழியில் சிறிய நீர்த்தேக்கம் இருந்தது ஞாபகம் வந்தது. “அதுக்க போய் படுப்பமா வாட்டப்பா..” என்றேன். “நல்ல ஐடியாதான். ஆனா அதுவரைக்கும் நடந்து போகலாது. கஷ்டம்” என்றார். அது சரியெனப் பட்டது. அது இருந்தது ஒரு ஐம்பது மீற்றர் தொலைவில். தண்ணீர் இருந்தாலொழிய இனிமேல் ஒரு அடி வைக்கிறது கஷ்டம். உடனே சன்சிகன், குமணன் இருவருக்கும் கோல் பண்ணி நிலமையை சொன்னேன். இப்படித்தான் இருந்தது என் தகவல் பரிமாற்றம்

“தண்ணி வேணும், ஒரு அடி வைக்கேலா.. டெட் கண்டிசன்... சீக்கிரம் வாங்க..”

இடையில் ”த்ரீ வீலர் பிடிக்கேலுமெண்டா பிடிச்சுக்கொண்டு வர சொல்லுங்கோ. மெயின் ரோட் வரைக்கும் போவம்” எண்டார் வாட்டப்பா. கதைப்பதே கஷ்டமாகிவிட்டது. கண் இருண்டுகொண்டு வந்தது. இளைப்பாறி முடித்த பராச்சும், சுகிர்தனும் எங்களை கடந்து வோட்டர்மிலனை கொண்டுசென்றுகொண்டிருந்தார்கள். மயக்கம் நெருங்கிக்கொண்டிருந்தது. பதினைந்து நிமிடங்களுக்குள் ரெஸ்கியூ ரீமிலிருந்து சன்சிகன் தண்ணீர் போத்தலோடு சைக்கிளில் வந்து இறங்கினான். ஐந்து லீட்டர் தண்ணீரை இருவரும் குடித்துவிட்டு எழும்பி நின்றபோது தலை சுற்றியது.

“உங்களுக்கு தலை சுத்துறமாதிரி இருக்கா..” என்றார் வாட்டப்பா.

மீண்டும் சைக்கிளை மிதித்து ஆணையிறவில் ஏறினோம். ரெயில் பாதைக்கு அருகில் இருந்த மரநிழல் ஒன்றில் முன்னால் சென்ற நண்பர்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து ஓய்வெடுத்தோம். சுகிர்தனின் சைக்கிளை மோட்டார் சைக்கிளில் ஏற்றி திருத்துவதற்கு அனுப்பிவிட்டு, நாங்கள் பயணம் தொடர்ந்தோம்.


ஆணையிறவில் இருக்கும் இராணுவத்தினரின் கடையில் ஆளுக்கு ஒரு பழச்சாறு குடித்துவிட்டு, அடுத்த ஓய்வு பரந்தன் சந்தியில் என்று சபதம் எடுத்துவிட்டு தொடர்ந்தாலும் துரதிஷ்ட வசமாக இடையில் மூன்று இடங்களில் ஓய்வு எடுக்கவேண்டியதாகிற்று. ஏற்கனவே காட்டுக்குள் அலைந்ததில் மொத்த எனெர்ஜியும் அழிக்கப்பட்டிருந்தது. ஆணையிறவில் எதிர்க்காற்று வேறு. எனக்கோ தொடந்து போகலாம் என்று நம்பிக்கையே போயிற்று. இடையில் திரும்பி போகலாம் என்று முடிவெடுத்தேன். “நீ வராமல் நாங்கள் போகமாட்டம்” என்றார்கள் நண்பர்கள். சரி என்று முக்கி தக்கி பரந்தனை சென்றடைந்து பரந்தன் சந்தியின் நடுவில் குப்பை கூழங்களோடு இருந்த மரநிழல் ஒன்றில் மல்லாக்க படுத்தோம். மக்கள் விநோதமாக பார்த்துக்கொண்டு சென்றார்கள். நாங்கள் ஓரளவு சமாளித்து சென்றுகொண்டிருக்க, வாட்டப்பா எங்களுக்கு பின்னால் ஒரு கிலோமீற்றர் இடைவெளியில் முக்கி தக்கி வந்துகொண்டிருப்பார்.

”நீங்கள் கோவித்தாலும் பரவாயில்லை. கிளிநொச்சி வரைக்கும் வந்திட்டு நாங்க யாழ்ப்பாணம் திரும்பப்போறம்” என்று உறுதியாக முடிவெடுத்தார்கள் வாட்டப்பாவும், பச்சனும். எனக்கும் அவர்களது முடிவில் உடன்பாடு இருந்தது. பரந்தன் சந்தியில் ஒரு சோடாவும், பாதி மிதிவெடியும் சாப்பிட எனர்ஜி திரும்பியது. அதன் பின் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. கிரியும் நானும் பெரியதொரு இடைவெளியில் முன்னுக்கு சென்றுகொண்டிருப்போம். மற்றவர்கள் பின்னால் வர, வாட்டப்பா மட்டும் கண்ணுக்கு தெரியமாட்டார். கிளிநொச்சி சென்று, வட்டக்கச்சி பக்கமாக திரும்பினோம். காலையில் ஆரம்பித்தபோது இருந்த அதே எனர்ஜியுடன் 11 கிலோமீற்றர் தூரத்தை இருபது நிமிடங்களில் கடந்து, வட்டக்கச்சி மகாவித்தியலயத்துக்கருகில் மற்றவர்களுக்காக காத்திருந்தோம். மற்றவர்கள் எம்மை கடந்துபோனார்கள். வாட்டப்பாவை காணவில்லை. சரி, வாட்டப்பாவை கூட்டிக்கொண்டு போகலாம் என்றால் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியும் ஆளை காணவில்லை. “வாட்டப்பாவை காணோம்” என்ற தகவல் பரவ, உடனடியாக ரெஸ்கியூ ரீமை அனுப்பினோம். சில நிமிடங்களில் அழைத்து வந்தார்கள். நடந்தது இதுதான். வாட்டப்பா களைப்புற்று மரம் ஒன்றில் சைக்கிளை சாத்திவிட்டு ஓய்வெடுத்திருக்கிறார். சைக்கிள் வழுக்கி விழுந்து செயின் உடைந்திருக்கிறது. அப்படித்தான் சொன்னார்.

மாலை 5.30க்கு புளியம்போக்கனையில் ப்ளேன்ரீ குடித்துவிட்டு - ஒரு ப்ளேன்ரீ பத்து ரூபாதான் - ஆறு மணிக்கு விசுவமடுவை அடைந்தோம்.



விசுவமடு பெயர்ப்பலகையை பார்த்ததும் நானும் கிரியும் கைகளை கோர்த்துக்கொண்டு உயர்த்தி வெற்றிக்கூச்சலிட்டோம். டியூசன் முடிந்து போய்க்கொண்டிருந்த பிள்ளைகள் வினோதமாக பார்த்தார்கள். மக்கள் அப்படித்தான். திரும்பி பார்த்தால் ஒரு கிலோமீற்றர் இடைவெளியில் மற்றவர்கள் வந்துகொண்டிருந்தார்கள்.

விசுவமடுவில்
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிக்கிட்டதால், மொத்தமாக பார்க்கையில் 120 கிலோமீற்றர்களுக்கும் அதிகமாகவே பயணித்திருந்தோம். கிட்டத்தட்ட யாழில் இருந்து வவுனியா போகும் தூரம். இடையில் குறிஞ்சாத்தீவு சதுப்புக்காட்டில் சிக்கி திணறியதில் நிறைய தூரம் செலவாகிவிட்டது. அதோடு அந்த பயணத்தூரத்தை கிலோமீற்றர் கணக்கில் மட்டும் சொல்லிவிடமுடியாது. சைக்கிளை புதைத்து ஓடவிடாமல் இழுத்த மணலின் கொடுமையையும் சேர்த்தே அளவிடவேண்டும்.

விசுவமடுவில் தங்கிறது திங்கிறதுக்கான ஏற்பாடுகளை செய்திருந்த குமணனின் நண்பர் வர தாமதமாகியதால் விசுமடு சந்தி ஆட்டோ ஸ்ராண்டில் உட்கார்ந்திருந்தோம். பசிவேறு வயிற்றை புரட்டியது. அதிகம் சாப்பிட்டால் ஓடுவது கஷ்டம் என்று இரண்டு மூன்று ரோல்ஸ், பழச்சாறூகள் மட்டுமே எடுத்திருந்தோம்.

ஏழு மணியளவில் நண்பர் வந்து அழைத்துச்சென்றார். விசுவமடு சந்தியில் இருந்து இரண்டு கிலோமீற்றர்கள் உள்ளே செல்லவேண்டும். எங்களுக்கென்று தனியாக ஒரு வீடு ஒதுக்கி தரப்பட்டது. போய் குளித்துவிட்டு வந்து உட்கார குமணன் புல்லாங்குழல் வாசிக்க தொடங்கினார். அற்புதமான இசை ஆசுவாசப்படுத்தியது. சாப்பாடு வந்தது. திறந்தால் சோறும் நாட்டுக்கோழி குழம்பும். ப்பா... வாயில் வைக்க சுவை அப்படியே நின்றது. அந்த நண்பர் வேறு ரொம்ப நல்லவராக இருந்தார். கேட்டதெல்லாம் உடனுக்குடன் வாங்கி வந்தார். இரவு பாடல், உரையாடல் என அட்டகாசமாக கழிந்தது.

பன்னிரெண்டு மணிக்குமேல் எல்லோரும் தூங்கிவிட எனக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. தோள், கைகள் செமையாக வலியெடுத்தது. தூக்கம் வராமல் புரண்டு படுத்துப்பார்த்துவிட்டு ஒரு கட்டத்தில் எழுந்து உட்கார்ந்துவிட்டேன். சிறிது நேரம் சுவரோடு சாய்ந்து, சிறிது நேரம் கட்டிலில் சாய்ந்து என உட்கார்வதை கூட விதம் விதமாக செய்துகொண்டிருந்தேன். கடைசியாக மூன்று மணி இருக்கும், கட்டிலில் தலகணியை போட்டுவிட்டு அதில் தலை சாய்த்து உட்கார்ந்திருந்தேன். இப்படி துன்பப்பட்டுக்கொண்டிருந்தபோது திடீரென்று கண்விழித்த கிரி தன் மொபைலை எடுத்து என்னிடம் தந்து “இதில டேட்டா இருக்கு, ஏதாவது வீடியோ பார்...” என்றான். இவ்வளவு அன்பா என்று கண் கலங்க ஆரம்பிக்கும்போது தலகணியை புடுங்கிக்கொண்டான். நல்லவேளை கண்ணீரை வேஸ்ட் ஆக்கவில்லை.

அதிலும் பெரிய சம்பவம், குமணனின் போஸ்டில் யாரோ ஒருவர் முப்பது வருடங்களுக்கு முன்னர் பிரபலமாக இருந்த “வெளிக்கிடடி விசுவமடுவுக்கு” நாடகத்தை பற்றி எழுதியிருந்தார். தூக்கத்தில் இருந்த கிரியை எழுப்பி அதைப்பற்றி சொன்னேன். படுத்திருந்தபடியே தலையை மட்டும் தூக்கி, கிட்டத்தட்ட பதினைந்து நிமிடமாக அந்த நாடகம் பற்றி பிரசங்கம் செய்துவிட்டு அடுத்த செக்கனே தூங்கிப்போனான்.

அடுத்தநாள், யாராவது ஒருவர் கொண்டுவந்த சைக்கிள் அனைத்தையும் ஒரு பட்டாவில் ஏற்றி கிளிநொச்சிக்கு கொண்டுபோய் அங்கிருந்து ட்ரெயினில் ஏற்றி அனுப்பிவிட, நாமெல்லாம் பஸ் எடுத்து ஊருக்கு திரும்புவதாக திட்டம். வாட்டப்பாதான் பொருத்தமான ஆள் என்பதால் அவரே சைக்கிள் பார்சல் பண்ணும் திட்டத்தை கையில் எடுத்திருந்தார். சிக்கல் என்னவென்றால், ட்ரெயினில் பார்சல் போடுவதாக இருந்தால் சைக்கிளுக்கு நம்பர் ப்ளேட் வேணும் என்றுவிட்டார்கள். சத்தியசோதனை தருணம் அது. எந்த பஸ்சிலும் கரியர் இல்லை என்பதால் சைக்கிள் ஏற்றமுடியாது. திரும்பவும் ஓடி யாழ்ப்பாணம் வரமுடியாது. இறுதியாக ஒரு பட்டாக்காரர் குறைந்த செலவில் யாழ்ப்பாணம் கொண்டுபோய் விடுவதாக ஒத்துக்கொண்டார்.


காலை விசுவமடு நண்பரின் வீட்டில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த காலை வெய்யிலில் விசுவமடுவின் ரம்மியம் முழுமையாக வெளிப்பட்டது. விசுவமடுவுக்கென்று தனியான மண்வாசம் ஒன்று உண்டு. எட்டு வயதுவரை அந்த வாசத்துடனேயே வாழ்ந்திருக்கிறேன். அந்த வாசம் இழந்த எனர்ஜியை முழுமையாக திருப்பி தந்தது. மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு சைக்கிளில் போய்விடலாம் என்ற உற்சாகம் ஏற்பட்டது. அந்த மண்வாசத்தோடு, இருபுறமும் வாய்க்கால்களில் நீரோடும் பாதைகளில் பயணித்தோம். இரு புறமுமே அடர்ந்து வளர்ந்த மரங்களும் தோப்புக்களுமாய்.... அவற்றுக்கிடையே குட்டி குட்டியான வீடுகள். அந்த அழகை அனுபவிக்க எமக்கிருந்த சில மணிநேரங்கள் போதவில்லை.

எல்லா இடமுமே ஒருகாலத்தில் எனக்கு பழக்கப்பட்டதாக நினைவிருந்தது. ஒரு குட்டிப்பயலாக அங்கெல்லாம் ஓடித்திரிந்திருக்கிறேன். நண்பரின் வீடு இருந்த இடம்கூட நினைவில் இருப்பதாக படுகிறது. அப்பம்மாவோடு ஜம்புக்காய் புடுங்க அந்த இடத்திற்கு நான் வந்திருக்கிறேன். என் நண்பர்கள் நினைவுக்கு வந்தார்கள். “தாரணி”. என் சிறுவயது தோழி. அல்லது என் முதல் காதலி. அவளோடுதான் தினமும் பள்ளிக்கூடம் வந்திருக்கிறேன். அந்த பகுதியெங்கும் அவளோடுதான் ஓடி விளையாடியிருக்கிறேன். விவரம் தெரியாமலே நான் அப்பாவாகவும் அவள் அம்மாவாகவும் வேடம் கொண்டு விளையாடியிருக்கிறோம். திடீரென்று ஒருநாள் அவள் காணாமல் போனாள். அவள் யாழ்ப்பாணம் போய்விட்டதாக சொன்னார்கள். 98 இல் நாங்களும் யாழ்ப்பாணத்துக்கு வந்துசேர்ந்தோம். நீண்ட காலங்களின் பின் அவள் தன் குடும்பத்தோடு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள். வளர்ந்து பருவப்பெண் ஆகியிருந்தாள். என்னை பார்த்து வெட்கத்தோடு சிரித்தாள். எதுவுமே கதைக்காமல் வெட்கத்தோடு இருந்தாள். போய்விட்டாள். பின் அவளை சந்திக்கவே இல்லை.

“விசுவமடு - வன்னியின் ஆலப்புழா” என்றேன். கிரி ஒத்துக்கொண்டான். நண்பரின் வீட்டில் அட்டகாசமான ஒரு தேநீர் தந்தார்கள். அதை குடித்து முடித்ததும் உணவு பரிமாறப்பட்டது. அரிசிமா புட்டும், சம்பலும் கூடவே நெத்தலி பொரியலும். என்னை கேட்டால் அன்றைய சைக்கிள் பயணத்தை விட நண்பரின் வீட்டு சாப்பாடுதான் மிகப்பெரிய அனுபவம் என்பேன்.

சாப்பிடும்போதே வாட்டப்பா தன் விபத்து கதைகளை சொல்ல ஆரம்பித்தார்.

விபத்து 01

வாட்டப்பா கொழும்பு ரெயில்வே ஸ்டேசனில் தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறார். ரெயில் புறப்பட்டுவிட்டது. மின்னல்வேகத்தில் ஓடி ரெயிலை நெருங்கி பாய்ந்திருக்கிறார். அவர் பாய்ந்த நேரமாக பார்த்து ப்ளாட்போம் முடிந்துவிட, சடாரென கீழே விழுந்து காலை முறித்திருக்கிறார்.

விபத்து 02

வீதி ஓரத்தில் வாட்டப்பா தொலைபேசியில் கதைத்துக்கொண்டு நின்றிருக்கிறார். அதால் போன வான்காரன் வானை வாட்டப்பாவின் கால் பெருவிரலில் ஏற்றிக்கொண்டு போய்விட்டான். விரல் முறிந்துவிட்டது.

விபத்து 03

மோட்டார் சைக்கிளில் போன வாட்டப்பா நிறுத்தியிருந்த வாகனத்தின் மீது மோதியிருக்கிறார். வைத்தியசாலையில் வாட்டப்பாவின் தந்தை “மகனே இந்த பைக்கை விற்றுவிடு” என சொல்ல, கோபமடைந்த வாட்டப்பா “போங்கப்பா.. இது எனக்கு ராசியான பைக்” என்று சொல்லியிருக்கிறார்.

வாட்டப்பாவின் கதைகளோடு செம கலகலப்பாக உணவு உண்டோம். குழந்தை மனசுக்காரன் அவர். இனி எந்த பயணமானாலும் அதில் வாட்டப்பா கட்டாயம் இருக்கவேண்டும் என்பது எல்லோரதும் ஒருமித்த தீர்மாணமாக இருந்தது. 

உணவை முடித்துவிட்டு விசுவமடு சந்தி நோக்கி பயணித்தோம். இடையில் விசுவமடு மகாவித்தியாலத்தை கடந்துசெல்லும்போது நாஸ்டால்ஜியா தாக்கியது. அந்த பள்ளிக்கூடத்தில்தான் மூன்றாம் ஆண்டுவரை நான் படித்தேன். நீரோடிக்கொண்டிருக்கும் வாய்க்கால்களும், மரத்தோப்புக்களும் சூழ்ந்த இடம் அது.  நான் ஓடித்திரிந்த இடங்கள், விளையாட்டு மைதானம், விளையாட்டு போட்டிகளில் நடந்த சம்பவங்கள் எல்லாம் ஞாபகத்தில் வந்தது.

சந்தியில் பட்டா ரெடியாக நின்றது. சைக்கிள்களை ஏற்றி முடிய இடம் போதவில்லை. ட்ரைவருக்கு பக்கத்தில் கிரியும், சைக்கிள்களுக்கு மேல் பச்சனும், வாட்டப்பாவும் இருக்க நான் பின்பக்கத்தில் ஏறி அமர்ந்துகொண்டேன். மிகுதி நண்பர்கள் பஸ்சில் ஏறி வந்தார்கள்.


மாம்பழம் சந்தியில் இறங்கியதோடு நம் பயணம் முடிவுக்கு வந்தது. பருத்தித்துறை நண்பர்கள் குமணன், வாட்டப்பா, பச்சன் மூன்றுபேரும் திருப்பவும் கொடிகாமத்தில் இருந்து பருத்தித்துறைக்கு சைக்கிளில்தான் போய் சேர்ந்ததாக தொலைபேசியில் சொன்னார்கள்.

அடுத்த பயணம் நடந்தே போவது என்ற திட்டமிடலுடன் இப்பயணம் முடிந்தது. தொடரும் ;)

2 comments:

  1. அருமை,தம்பி......../////அரியாலையில்/மாம்பழம் சந்தியில் வசிக்கும் உங்களுக்கு விசுவமடு போய்த் தான்,வெளிக்கிடடி விசுவமடுவுக்கு நாடகம் பற்றித் தெரிந்திருக்கிறது......இலங்கையின் பல பாகங்களிலும்,ஏன் பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் கூட ஒரு தடவை மேடையேறியிருக்கிறது.அந்த திடீர் நாடக மன்றமே நாம் தான்.

    ReplyDelete
  2. அருமை மச்சி ஒரு நல்ல மிதிவண்டி பயணத்தை தவறவிட்ட கவலை அதிகமாகவே இருந்தாலும் நானும் கூடவே வந்த உணர்வு வாசிக்கும் போதும் இப்போதும் இருக்கு

    ReplyDelete

Blog Archive

Followers

Powered by Blogger.
Copyright © சிறகுகள் |