Monday, January 21, 2019

ஈழசினிமாவின் மாற்று சிந்தனைகள் குறித்த உரையாடல் - சதாபிரணவனை முன்வைத்து !

இலங்கை தமிழ் சினிமா அதன் படைப்பு நிலை சார்ந்தும், அரசியல் சார்ந்தும் நீண்ட விவாதங்களையும் உரையாடல்களையும் வேண்டி நிற்கும் நேரம் இது.  போருக்கு முன்னரான காலம், விடுதலைப்புலிகளின் நிதர்சனம், போருக்கு பிந்தைய காலம் என மூன்று காலப்பகுதிகளில் மூன்று வேறுபட்ட தன்மைகளுடன் இலங்கை தமிழ் சினிமாவின் பரிமானம் அமைந்திருந்தாலும் எமது அயல் சினிமாவான சிங்கள சினிமாவோடு ஒப்பிடுகையில் பாரியதொரு தேக்க நிலையை எமது சினிமா கொண்டிருப்பதை அவதானிக்க முடியும்.

விடுதலைப்புலிகளின் காலத்தில் எழுந்த சினிமாக்கள் எமது தனித்துவமான அடையாளங்களை கொண்டிருந்தாலும், பெரும்பாண்மையாக புலிகளின் போராட்டம் தொடர்பான பிரச்சார திரைப்படங்களாகவே அமைந்துபோனதால் அது எமது சமூகத்தை தாண்டியோ அல்லது புலிகளின் காலத்தை தாண்டியோ நிலைபெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியதாகிற்று. அதே நேரம் புலிகளுக்கு முந்தைய, பிந்தைய கால சினிமாக்கள் தென்னிந்திய சினிமாவின் இலங்கை மீள்பதிவாகவே வந்துகொண்டிருக்கும் அவலம்தான் நடந்தது, நடந்துகொண்டிருக்கிறது. 

பெரும்பாண்மையானதொரு இளைஞர் சமூகம் சினிமா குறித்த பிரக்ஞைகள் அற்று தென்னிந்திய அபத்தங்களை மீள் பதிப்பு செய்துகொண்டிருக்கும் இதே இலங்கை தமிழ் சினிமா களத்தில், அவற்றிலிருந்து முற்றிலுமாக விலகி, சினிமா பற்றிய தெளிவான கருதுகோள்களுடன் எமது கதைகளை எமது சமூகத்தை தாண்டியும் கொண்டு செல்லும் கலைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களது சினிமா குறித்த கருதுகோள் என்னவாக இருக்கிறது, சினிமாவை எப்படி முன்நகர்த்திச் செல்கிறார்கள் என்ற கேள்விகள் மூலமாக எமது உரையாடலை முன்னெடுத்து செல்வது என்பது காத்திரமானதொரு நிகழ்வாக இருக்கும்.

சதா பிரணவன்

புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்ட சதாபிரணவனின் இயற்பெயர் சிவகாந்தன். சதாசிவம் என்ற தந்தையின் பெயரையும் பிரணவசொரூபி என்ற தாயின் பெயரையும் இணைத்து சதாபிரணவன் ஆகியிருக்கிறார். போர்க்காலத்தில் புலம்பெயர்ந்து பிரான்ஸ் செல்லும் சதாபிரணவனின் கவனத்தை சினிமா ஈர்த்துக்கொள்கிறது.  இயல்பிலேயே சினிமா மீது தீவிர நாட்டம் கொண்டவர்  சதா. அத்தகையதொரு சினிமா மோகமும், ஐரோப்பிய நாடுகளில் இலகுவாக கைவசமான தொழில்நுட்ப வசதிகளும் சினிமா துறையில் சதாபிரணவனது நுழைவை இலகுவாக்கிவிடுகின்றன. அவரது சினிமாத்துறையின் ஆரம்பம் என்பது சினிமா மீது கொண்ட தீவிரமான மோகத்தால் மாத்திரமே நிகழ்கிறது. தான் சார்ந்த சமூகத்தின் கதைகளை வெளி உலகிற்கு சொல்லும் ஊடகமாக சினிமாவை பாவிக்கவேண்டும் என்ற இலக்கு அதன் பின்னரான காலத்திலேயே அவரது எண்ணக்கருவாக வளர்கிறது. சதாபிரணவனின் குறும்படங்களில் இந்த வளர்ச்சி போக்கினை அவதானிக்கமுடியும். அந்தவகையில் சதாபிரணவனிடம் சினிமா பற்றிய தெளிந்த சிந்தனையும், நேர்மையும் இருக்கிறது. அதுவே அவரை சிறந்ததொரு படைப்பாளிக்கான பாதையில் இட்டுச்செல்வதையும் மறுக்கமுடியாது.

தன்னை சுற்றியுள்ள மக்களின் வாழ்வியலை, அரசியலும் போரும் அவர்களின் வாழ்வில் செலுத்தும் தாக்கங்களை கதைகளாக சொல்கிறார் இவர். புலம்பெயர்ந்து வாழும் இளைஞர் சமூகத்தில் தற்போது ஏற்பட்டு வரும் குறும்பட மோகம் பற்றி பேச விளைந்த இவரது “தினப்பயணம்” குறும்படம் அந்த ஒற்றை கதையினூடே, வழிப்பறிகள் குறித்து தினம் தினம் பயந்துகொண்டே பயணம் செய்யும் நம் மக்களின் அவலங்களையும், அந்த நேரத்திலும் தம்மிடையேயான அரசியல் வேறுபாடுகளால் பிளவுண்டு கிடப்பதையும் எள்ளலாக காட்சிப்புலத்தில் கொண்டுவருகிறது. அதேபோல ஈழத்தில் சித்திரவதைக்குள்ளான ஒரு இளைஞனும், அவனை சித்திரவதைக்குள்ளாக்கிய ஒட்டுக்குழுவை சேர்ந்தவன் ஒருவனும் நீண்ட இடைவெளியின் பின் புலம்பெயர் நாடொன்றில் சந்தித்துக்கொள்ளும் நிகழ்வையும், அவர்களுக்கிடையிலான உணர்வு வெளிப்பாட்டையும் அற்புதமாக காட்சிப்படுத்திய “போராளிக்கு இட்ட பெயர்” முதலான குறும்படங்கள் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களிடையே நிகழும் அவலங்களையும், அரசியல்களையும் திரைப்படைப்பாக வெளிக்கொண்டு வருகின்றன. ஈழத்தில், இராணுவத்தின் பிடியிலிருக்கும் குடும்பம் ஒன்று அனுபவிக்கும் கொடூர நிகழ்வொன்றை காட்சிப்புலத்தில் கொண்டு அதனூடே ஒட்டுமொத்த போரின் அவலங்களையும் நிமிட நேரத்தில் பதிவுசெய்து சென்ற “God is Dead” குறும்படம் சதாபிரணவனின் படைப்புக்களில் ஆகச்சிறந்த படைப்பாக அடையாளம் காணப்பட்டது. ஆக, எமது மக்களை பாதிக்கும் அரசியல், எமது மக்களுக்கிடையே நிகழும் அரசியல் ஆகியவையே சதாபிரணவனது கதையின் மையப்பொருளாக இருப்பதை காணலாம். 

குறும்படங்களுக்காக கதைகளை தெரிவுசெய்யும் முறையில் தேர்ந்ததொரு இயக்குனருக்கான பாங்கினை அவதானிக்கமுடியும். ”பல கதைகளின் கரு எப்போதும் தோன்றிக்கொண்டேதான் இருக்கும் சில தினங்கள் கூட நிலைகாமல் போனவை பல அதில் அடங்கும்” என சொல்லும் சதாபிரணவன் தனது அனுபவத்திலிருந்து ஒரு நிகழ்வை இவ்வாறு சொல்கிறார். “அந்த அந்த கால மனநிலையை பொறுத்தே ஒரு கதை உருப்பெறுகிறது. உதாரணமாக "இன்றிருப்பத்தேழு" கதை அந்த காலகட்டத்தின், எனது மனச்சிதைவின் பதிவு .அந்த பதிவை குறும்படம் என்று கூட சொல்லமுடியாது.ஒரு படைப்பாளியாக எனக்கு முக்கியமாக இருந்தாலும் அது ஒரு பதிவு அவ்வளவுதான்.”

தான் சார்ந்த சமூகத்தின் போராட்டம் குறித்து எவ்வித அக்கறையுமற்று வாழும் வெளிநாட்டு குடும்பம் ஒன்றின் கதையை சொன்ன “விடுதலை” குறும்படத்தோடு ஆரம்பித்து இதுவரை ஏழு குறும்படங்களை இயக்கியுள்ளார் சதா. இவற்றில் God is dead குறும்படம் பிரான்ஸ் மொபைல் குறும்பட போட்டி மற்றும் கொரியா மொபைல் குறும்பட போட்டி ஆகியவற்றில் சிறந்த குறும்படமாக முதலிடம் பெற்றுக்கொண்டது. சினிமாவை வெறுமனே பொழுதுபோக்கு ஊடகமாக கடந்துபோய்விடக்கூடாது, எமது கதைகளை சர்வதேசத்திடம் சொல்வதற்குரிய காத்திரமான ஊடகமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற சதாபிரணவனின் கனவுக்கு கிடைத்த முதல் வெற்றி அது. 

தனது கதைகளோடு, வேறு எழுத்தாளர்களின் கதைகளையும் குறும்படமாக இயக்குவதற்கு தயங்குவதில்லை சதாபிரணவன். செரஸ் குறும்படத்தின் மூலம் எழுத்தாளர் ஷோபாசக்தியோடு இணைந்து பணியாற்றியுள்ளார். ஷோபாசக்தியின் கதை ஒன்றை திரைப்படமாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

சதாபிரணவனுக்கு எந்தவொரு கட்சியோ இயக்கமோ சாராத தெளிந்ததோர் அரசியல் பார்வை உண்டு. அது முற்று முழுதாக மக்கள் நலன்சார்ந்த அரசியல். இயக்க உள்முரன்பாடுகளை பேசி, தீவிர தமிழ் தேசியவாதிகளின் விமர்சனத்துக்குள்ளான  “போராளிக்கு இட்ட பெயர்” குறூம்படத்தையும், அதே தேசியவாதிகளால் பாராட்டப்பட்ட God is Dead என்னும் பின் போர்ச்சூழல் குறும்படம் ஒன்றையும் சதாபிரணவனால் கொடுக்கமுடிகிறது என்றால் அது அவரது மக்கள் நலன்சார்ந்த அரசியல் பார்வையி வெளிப்பாடாகவே இருக்கமுடியும். இந்த அரசியல்தான் தீவிர புலி எதிர்ப்பாளரான ஷோபாசக்தியோடு இணைந்து வேலை செய்யவும், அதேநேரம் அவரால் “புலிக்குட்டி” என அழைக்கப்படுவதுமானதொரு சூழ்நிலையை சதாபிரணவனுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

குறும்படங்கள் மூலம் குறிப்பிடத்தக்கதொரு மாற்றத்தை ஈழசினிமாவில் நிகழ்த்திக்கொண்டிருந்த சதாபிரணவன் விரைவில் முழுநீள திரைப்படங்களை இயக்கவுள்ளார். மிக நீண்டதொரு மாற்றத்தையும் சக கலைஞர்களுக்கு கற்றுக்கொள்வதற்கான இடைவெளிகளையும் அவரது திரைப்படங்கள் ஏற்படுத்தும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

புதியசொல் சஞ்சிகைக்காக
மதுரன் ரவீந்திரன்

0 Comments:

Post a Comment

Blog Archive

Followers

Powered by Blogger.
Copyright © சிறகுகள் |