Friday, June 28, 2013

கொத்துரொட்டி - Time to lead

என்ன வேலையாக இருந்தாலும் வாரத்தில் ஒரு தடவை கொத்துரொட்டி சாப்பிடுவதற்காக நண்பர்களுடன் புறப்பட்டுவிடுவது வாடிக்கையாகிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு போதையாகவே ஆகிவிட்டது இந்த கொத்துரொட்டி மோகம். நம்ம நண்பர்கள் அனைவரும் கொத்துரொட்டி பிரியர்கள் என்பதாலும் வாரத்துக்கு ஒருவர் என்ற ரீதியில் கொத்துரொட்டிக்கு ஸ்பான்ஸர் பண்ணுவதாலும் இன்றுவரை வெற்றிகரமாக தொடர்கிறது எங்கள் கொத்துரொட்டி பயணம் :) வெற்றிகரமாக என்றாலும் அவ்வப்போது சில சிக்கல்களையும், சில இலியானா சிக்கன்காரர்களையும் சந்திப்பதும், அதன் பின்னர் கொத்துரொட்டியே வேண்டாம் என்று முடிவெடுப்பதும், வாரமுடிவில்  தீர்மாணத்தை மாற்றி புதிய கொத்துரொட்டி கடை தேடுவதும் வழமை. சேட்டை படம் பார்த்தவர்களுக்கு இலியானா சிக்கன் என்றால் என்ன என்று புரிந்திருக்கும் :) 


இதில் உள்ள மிகப்பெரிய சிக்கல்... கொத்துரொட்டிக்கு சரியான இடத்தை தேர்ந்தெடுப்பதுதான். இங்கு மூலைக்கொரு கொத்துரொட்டிக்கடை இருக்கும். ஆனால் எல்லாவற்றிலும் போய் உட்கார்ந்திடமுடியாது. முதலில் சரியான கடையை தெரிவுசெய்யவேண்டும். முக்கியமான விடயம், கடை தெரிவு செய்யும்போது சனிக்கிழமையாக பார்த்து தெரிவுசெய்யவேண்டும். காரணம் சாம்பிள் பார்த்து சரிவரவில்லை என்றால் எப்படியாவது மறுநாள் காலை ஓப்பன் ஆகும் ஷட்டர் மாலைக்கு பின்னர்தான் குளோஸ் ஆகும். ஆகவே தெரிவை சனிக்கிழமைகளில் மேற்கொண்டால்தான் ஞாயிறு லீவு தினமாகையால் சமாளிக்கமுடியும். அடுத்து ஒரு கடையை சிறப்பானது என்று தெரிவுசெய்வதற்கு மூன்று றூல்ஸ் பின்பற்றவேண்டும்

  1. கடைக்குள் நுழையும்போது கூட்டத்தை நோட்டமிடவேண்டும் - கூட்டம் அதிகமாக இருந்தால் கொத்துரொட்டி குறைவாக வரும். கூட்டம் குறைவாக இருந்தால் கடையில் ஏதோ குறைபாடு என்று அர்த்தம்.
  2. கொத்துரொட்டி போடுபவரை நோட்டமிடவேண்டும் - இலியானா சிக்கன்காரரை போல இருந்தால் உடனடியாக இடத்தை காலிபண்ணிடவேண்டும். முக்கியமான விடயம் சுத்தம் 100 வீதம் இருக்கனும் என்று எதிர்பார்க்கக்கூடாது. அப்படி பார்த்தால் கொத்துரொட்டி சாப்பிடமுடியாது.
  3. அடுத்து உள்ளே நுழைந்து ஓடர் கொடுக்கனும். ப்ளேட் வந்ததும் ப்ளேட்டில் இருக்கும் கொத்துரொட்டியின் அளவை அவதானிக்கனும். அதற்கு பின்னர் சுவையை பரிசோதிக்கனும். சுவை 70 வீதப்படியும், கொத்துரொட்டியின் அளவு 90 வீதமும் இருக்கனும்.

இந்த மூன்றும் சரியாக இருந்தால் அந்த கடை எங்கள் ஆஸ்தான கொத்துரொட்டி தலமாக தெரிவுசெய்யப்படும். அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரு கடை எப்போதுமே பெர்ஃபக்டா இருப்பதில்லை. இப்படித்தான் டவுனில் இருக்கும் ஒரு முஸ்லிம் கொத்துக்கடையில் சில நாட்கள் சாப்பிட்டு வந்தோம். திடீரென்று ஒரு நாள் கொத்தில் வறுக்கப்பட்ட நிலையில் ஒரு வண்டு. ”ஐயையோ... அது வண்டா... போன வாரம்கூட ஏதோ நறு நறுன்னு கடிபட்டிச்சுடா, நான்கூட ஏதோ புது ஐட்டம் கொத்துரொட்டியில மிக்ஸ் பண்ணியிருக்கிறாங்கன்னு நினைச்சு சாப்பிட்டுட்டேண்டா” என்றான் நம்மகூட வந்த ஒரு பக்கி. அப்ப பாருங்களேன்....

இதற்கு முதல் யாழ். பிரதான வீதியில் உள்ள ஒரு கடைதான் எங்கள் ஆஸ்தான கொத்துரொட்டி தலமாக இருந்தது. மேலே சொன்ன மூன்று றூல்ஸும் 100 வீதம் சரியாக இருந்த கடை அது. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, கடந்த ஒரு மாதமாக கடை பூட்டியபடியே இருக்கிறது. கடையை நிரந்தரமாக மூடிவிட்டார்கள் என்று யோசித்தபோது நண்பன் ஒரு குண்டை தூக்கி போட்டானே பாருங்கள்... “மச்சி... கடை பூட்டுறதெண்டால் கடையின் போட் எல்லாம் கழட்டிடுவாங்கள். ஆனா இங்க போட் அப்பிடியே இருக்குது. சோ P.H.I ல பிடிபட்டு இப்போ கேஸ் நடந்துகொண்டிருக்கு போல...” என்று சொன்னது மட்டுமில்லால் ஒரு வருடத்துக்கு முன்னர் ஒரு கடையில் ஆட்டிறைச்சி என்று சொல்லி நாய் இறைச்சியை கொடுத்து P.H.I யில் பிடிபட்டு வழக்கு நடந்த சம்பவம் ஒன்றையும் நினைவுபடுத்திவிட்டான் பிக்காலிப்பய. அடிவயித்தில நெருப்பை எரிய வச்சுட்டான். 

இந்த கஷ்டங்களை எல்லாம் தாண்டி மறுபடி ஆஸ்தான தலத்தை தேடும் படலத்தை தொடர்ந்தோம். கச்சேரிக்கு பக்கத்தில இருக்கிற கடையில கொத்துரொட்டி நல்லா இருக்குதாம் என்று ஒரு பேச்சு காதுக்கு வர, சரி ஒரு தடவை போய்த்தான் பார்ப்பமே என்று போனோம்... முன்னுக்கே கொத்துரொட்டி போடுறவர் தரிசனம்தான். சேட்டை படத்தில இவர்தான் நடிச்சிருப்பாரோ என்று யோசிக்குமளவிற்கு அந்தாளை உரிச்சு வச்சமாதிரியே ஒரு கெட் அப்பு... கூடவே பயபுள்ளை கையை கீழ் பக்கமா சொறிஞ்சிட்டு இருந்தாரா... ஓடினோம், ஓடினோம்... வீட்டு வாசல்வரையே ஓடினோம்னா பாத்துக்கோங்க. அப்படியே கொத்துரொட்டி இல்லாமல் ஒருவாரம் கடந்துபோக மறுபடி கடை தேடி கெளம்பினோம். முந்தி இருந்த பல கடைகள் பூட்டியாச்சு... பலத்த ஏமாற்றம். அப்போதான் ஒருத்தன் சொன்னான் ‘மச்சி.. நாம சாப்பிட்டு சாப்பிட்டு யாழ்ப்பாணத்தில கொத்துரொட்டியை அழிக்கிறோம்டா”. பைக்ல பின்னாடி இருந்தவன் “டைம் டூ லீட் மச்சி” அப்பிடின்னான். விஜய் ரசிகன் எங்கிறதால ட்ரெயிலரை பற்றி பேசுறானோ, பிக்காலி என்ன நேரத்தில என்ன பேசுறான் என்று கடுப்பாகி அசிங்கமா திட்ட ஆரம்பிக்கும்போது

 “இல்லடா மச்சி.. கொத்துரொட்டி கடை குறைஞ்சிட்டு வருதில்ல... இதுதான் சரியான டைம்... நாமளே ஒரு கொத்து கடை ஆரம்பிச்சிட்டா என்ன? டைம் டூ லீட் மச்சி”

“ஆமாண்டா... கொத்துக்கடை ஆரம்பிக்கிறோம் டுபாக்கூர் சாப்பாட்டுக்கடை என்று பேரு வைக்கிறோம்... நம்ம மட்டுமே உட்கார்ந்து சாப்பிடுறோம்” என்னா ப்ளானு :P

அப்புறம் சின்னக்கடை ஏரியாவுக்கு போனோம். ஒரு கடையை செலக்ட் பண்ணி உள்ள நுழைஞ்சோம். எல்லாம் சுத்தமாவே இருக்கிறமாதிரி ஒரு ஃபீல் வர.. சாப்பிடலாம் என்று ஓடர் கொடுத்தோம்... கொத்துரொட்டி போடுறவன், ரொட்டியை கொத்திக்கொண்டே நெற்றியில் வந்த வியர்வையை கொத்துரொட்டி போட்ட அதே கையால் வழித்தார். வழிக்கும்போது வியர்வைத்துளி சிலது ரொட்டியிலும் விழுந்தது. அதை பார்த்துக்கொண்டிருந்த நம்ம நிலை எப்பிடி இருந்திருக்கும்... டைம் ஆச்சு.. பார்சல் பண்ணி தாங்க என்று சொல்லி வாங்கி அதை வரும்வழியில் நாய்க்கு போடும்படி ஆகிவிட்டது.

வீட்டுக்கு வந்து எல்லோரும் ஒரு சபதம் எடுத்துக்கிட்டோம்... இதுக்குமேலும் கொத்துரொட்டிக்கு கடைக்கு போறதில்லை... சாப்பிடனும்னு தோணினா நாமளே போட்டு சாப்பிடுறோம்.


8 comments:

  1. நாங்க அங்க இருந்தப்போ (பத்து வருஷம் முன்னாடி) முதலல் கேகேஎஸ் ரோட் ஹோட்டல் ரஹமான் போயிட்டிருந்தோம். அப்பத்தான் மெயின் ஸ்ட்ரீட்ல ஒரு கடை அறிமுகமாச்சு (நீங்க சொல்றதும் அதுவா இருக்கலாம்) அதே டைம்ல, மட்டன் கொத்துக்கு விக்னா நல்லாருந்திச்சு (இப்போ இடம்மாறி சாப்பாடும் நல்லா இல்ல). 2010ல வந்தப்போ ரோலக்ஸ் பேக்கரிக்கு பக்கத்தில ஒரு கடை நல்லாருந்திச்சு..

    எல்லாம் ஒரு காலம்.. அப்பல்லாம் யாராவது நண்பனுக்கு பிறந்தநாள் எண்டா முதல்ல பின்னேரத்தில றியோ போய் ரோல்ஸ், ஐஸ்க்ரீம்! இரவுக்கு கொத்துரொட்டி - அதான் எங்க பார்ட்டி!

    ReplyDelete
  2. ரஹமான் ஹோட்டல் இப்போ வேறு ஒருத்தருக்கு கைமாறிடிச்சு.. அதில இருந்து கொத்து அவ்வளவா நல்லா இல்ல. அதால அதையும் இப்போ கட் பண்ணியாச்சு.தாஜ் ஹோட்டலுக்கும் அதே நிலைதான் :(

    ReplyDelete
  3. எதுக்கும் பார்சலாவே வாங்குங்கோ,தம்பிங்களா!

    ReplyDelete
  4. Subramaniam Yogarasa// ஹா ஹா அதுகூட டேஞ்சர்தான் யோகா ஐயா

    ReplyDelete
  5. கொத்துப் பரோட்டா சாப்பிடுவதில் இம்புட்டு இருக்கா...

    அது சரி.

    ReplyDelete
  6. இதுக்குதான் எங்கட ஊருக்கு கொத்துகடைக்கு வரோணும் என்கிறது

    ReplyDelete
  7. சே. குமார் said...//

    ஆமாங்க.... இது சிலபல,,, இன்னும் இருக்கு :D

    ReplyDelete
  8. Shanmugan Murugavel said...//
    :D அவ்வளவு சுத்தமாவா இருக்கு... கூடாதே :D

    ReplyDelete

Blog Archive

Followers

Powered by Blogger.
Copyright © சிறகுகள் |