ஈழத்து பேச்சுவழக்கில் பிரபலமான, ஆனால் தற்போது அருகிவரும் ஒரு சொல், “துலைக்கோ போறியள்”. ஒருவர் புறப்படும்போது அல்லது எங்கேயாவது சென்றுகொண்டிருக்கும்போது “எங்கே போறீங்க?” என்று கேட்பது அபசகுனம் என்பதற்காக, அச்சொல்லுக்கு பதிலாக உபயோகிக்கப்படும் மங்களச் சொல்லே “துலைக்கோ போறியள்”. கிட்டத்தட்ட இன்றைய சந்ததியினரிடத்தில் அருகிப்போய்விட்ட இந்த சொல்லை தலைப்பாக கொண்டு மதி.சுதாவின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது “துலைக்கோ போறியள்” குறும்படம்.
ஈழத்தில் இருந்து, குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இருந்து குறும்படங்கள் எடுக்க முயற்சிப்பவர்கள் ஆரம்பத்திலேயே தடுமாறும் விடயம், படத்தில் உபயோகிக்கப்போகும் மொழிவழக்கு. இந்திய தமிழை உபயோகிப்பதா? ஈழத்து தமிழை உபயோகிப்பதா?, தென் இந்திய சினிமாக்கள் மூலம் இந்திய தமிழ் உச்சரிப்புக்கு பழக்கப்பட்டுவிட்ட ஈழத்து சினிமா ரசிகர்கள், குறும்படங்களிளில் முற்றுமுழுதான ஈழத்து உச்சரிப்பை புகுத்தினால் ஏற்றுக்கொள்வார்களா? என்ற குழப்பங்களில், இறுதியில் இரண்டு உச்சரிப்புக்களையும் கலந்து சறுக்கிவிடுவார்கள். ஆனால் இந்த குழப்பங்களை எல்லாம் ஓரம் தள்ளிவிட்டு, எமது வாழ்வனுபவத்தை சொல்லப்போகும் படைப்பு எமது மொழிவழக்கிலேயே இருக்கவேண்டும் என்று, படம் முழுக்க அழகான ஈழத்து மொழிவழக்கை உபயோகித்து வெற்றியும் கண்டிருக்கிறார் ம.தி.சுதா.
திருட்டு, குறும்படத்தின் மையக்கரு. ஒரு திருடன், அவனது நூதனமான, சிரிப்பை வரவழைக்கும் திருட்டு சம்பவத்தையும் மையமாக கொண்டு, ஈழத்து மக்களின் முக்கியமான பிரச்சினைகள் சிலவற்றையும் நகைச்சுவையூடே எடுத்துச்சொல்லியிருக்கிறார் ம.தி.சுதா. ஈழத்தமிழரின் பொருளாதார வளர்ச்சியின் ஆணிவேர்கள் புலம்பெயர் தமிழர்கள்தான் என்பது மாற்றுக்கருத்து இல்லாத உண்மை. ஆயினும் இன்னொரு புறம் புலத்து தமிழரின் பெருமளவிலான உழைப்பு மூட நம்பிக்கைகளின்பால் விரயமாகிக்கொண்டிருக்கிறது என்பது கசப்பான உண்மை. வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்கள், வசதியற்ற பாடசாலைகள், தொழில்நுட்ப அறிவில் பின்தங்கிய மாணவர்கள், இளைஞர்கள் என இன்னமும் முன்னேற்றவேண்டிய விடயங்கள் இருக்கும்போது அவற்றை விடுத்து, கோயில் திருவிழாக்கள், திருவிழாக்களில் தடல்புடல் கேளிக்கைகள், அநாவசிய செலவுகள் என்று பெருந்தொகையான பணம் வீண்விரயமாகிக்கொண்டிருக்கிறது. இவையெல்லாம் கடவுள் மீது கொண்ட பக்தியினால் அல்லாமல், மறுதினம் தன் சமூகத்தின் முன் “நான் இவ்வளவு செய்திருக்கிறேன்” என்று மார்தட்டி தம் கௌரவத்தை நிலைநாட்டுவதற்கான செலவுகள் என்பதுதான் வேதனைக்குரியது. குறும்படத்தில் வெளிநாட்டில் இருந்து ஊர் வந்த நபரும், சைக்கிள் திருத்துபவரும் சந்திக்கும் ஒரே காட்சியில் இவ்வளவு விடயத்தையும் எடுத்து சொன்ன விதம் பாராட்டத்தக்கது. அதை விட இன்னொரு முக்கியமான விடயம், புலம்பெயர் தமிழர்கள் இங்கு கடைகள், சுப்பர் மார்கெட் என முதலீடு செய்கிறார்கள். இவர்களுடைய முதலீடு பெரிய அளவில் இருப்பதால் வியாபாரமும் தரமாக இருக்கிறது. இவற்றின் மூலம் நுகர்வோர் ஓரளவு பயனடைந்தாலும், இவர்களது பெரிய முதலீட்டுடன் போட்டிபோடமுடியாத உள்ளூர் வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்படுகிறார்கள். இந்த விடயத்தையும் சிறு உரையாடல் மூலம் தொட்டு சென்றிருக்கிறார் மதி.சுதா.
இவற்றை விட குறும்படத்தில் பல சுவாரசியமான விடயங்கள் இருக்கின்றன. ஆரம்பக்காட்சியில் பல் விளக்குவது, தலைமுடி கோதுவது ரகளையான காட்சி. நம்மூர் “கட்டாக்காலி” இளைஞர்களின் செயல்களை அப்படியே ஞாபகப்படுத்தியது மதி.சுதாவின் பாத்திரமும், நடிப்பும். ஆரம்பக் காட்சியில் கள்ளு சீவுபவரிடம் சைக்கிளை திருடுவதில் இருந்து ஏரம்பு ஐயாவிடம் நூதனமாக கதிரைகளை திருடுவது வரை, மதி.சுதா நன்றாக நடித்திருக்கிறார்.
குறும்படத்தின் குறைகள் என்று பார்க்கப்போனால், பெரிதாக எதையும் சொல்லிவிடமுடியாது. பத்து நிமிட குறும்படத்தில் தான் சொல்லவந்த கருத்தை சரியாகவே சொல்லிவிட்டார் மதி.சுதா. சாதி பார்க்கும் ஏரம்பு ஐயா முதலில் தனியான பாத்திரத்தில் மதி.சுதாவுக்கு தண்ணீர் கொடுப்பது, பின்னர் தொலைபேசி வாங்க வரும்போது கதிரையை துடைக்க சொல்வதும், துடைக்காமல் நின்ற மதி.சுதாவை உதைந்து விழுத்துவதும், மதி.சுதா கீழே விழுந்ததும் ஓடிவந்து எழும்ப உதவி செய்து மன்னிப்பு கேட்பதும் ஒன்றுக்கொன்று முரணாக தெரிகிறது. அதன்மூலம் படத்தை இயக்கிய மதி.சுதா சொல்லவருவது என்ன என்று புரியவில்லை. சோடா எடுக்க ஏரம்பு ஐயா வீட்டின் உள்ளே சென்றதும், மதி.சுதா கதிரைகளை திருடிச்செல்லும் காட்சி வரவேண்டும் என்பதற்காக மேற்கூறிய காட்சிகள் வலிந்து திணிக்கப்பட்டதுபோலவே தோன்றுகிறது. பின்னணி இசை நன்றாக இருந்தாலும் படம் நெடுகிலும் வந்து எரிச்சலூட்டுகிறது. காமெரா சில காட்சிகளில் பாத்திரங்களை விட்டுவிட்டு பின்னணியை Focus பண்ணுகிறது.
”இது ஒருவனுக்கான கேள்வி அல்ல, ஒரு சமூகத்துக்கான கேள்வி” என்ற அடைமொழியுடன் சமூகத்தை நோக்கி பல கேள்விகளை வெற்றிகரமாக முன்வைத்துள்ளார் மதி.சுதா.
நன்றியுடன்
மதுரன்
ஏரம்பு ஐயா காலால் உதைப்பதும்,பின்னர் கைதூக்கி விடுவதும்,ம.தி.சுதா மேல் உள்ள பயம் காரணமாக.ஏரம்பு ஐய்யா வீட்டுக்கு வெளிநாட்டிலிருந்து வந்தவரை சுதா அழைத்துச் சென்று,சண்டிக் கட்டுடன் கெத்தாக கதிரையில் உட்கார்வதிலிருந்தே முரண் வெளித் தெரிகிறதே?///கடேசிக் காட்சியில் சுதாவை அடித்தவரை நான் சந்தித்து நாலு அப்பு 'அப்ப' வேண்டும்,ஹ!ஹ!!ஹா!!!
ReplyDelete