Friday, October 17, 2014

The Man From Earth - வசனங்களினால் ஒரு பிரம்மாண்டம் !

ஒரு பிரம்மாண்டமான சயன்ஸ் பிக்சன் ஹாலிவூட் திரைப்படம் எப்படி இருக்கவேண்டும்? ஆயிரம் கோடி பட்ஜெட், பறந்து, உடைந்து, நொருங்கும் கட்டடங்கள், வாகனங்கள்... அசரவைக்கும் சிஜி வேர்க்ஸ், ஐமேக்ஸ், 3 டி தொழில்நுட்பங்கள்... etc etc... இவையெல்லாம் இருந்தால்தான் ஒரு படம் பிரம்மாண்டமாக தெரியும் இல்லையா? ஆனால் மேலே சொன்ன எந்தவித வஸ்துவும் இல்லாமல் மிகப்பெரிய பிரம்மாண்டத்தையே காட்டியிருக்கிறார்கள் 2007 இல். அட்டகாசமான திரைக்கதையை மட்டுமே கொண்டு பிரம்மாண்டம் காட்டிய அந்த திரைப்படம் The Man From Earth. திரைக்கதை என்பதை விட வசனங்கள்தான் இந்த படத்தின் பிரதானம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். கோட்பாடுகளை விவாதித்தல் என்னும் லைனில் திரைப்படம் நகர்கிறது.

ராஜேஷின் விமர்சனத்தை படித்துவிட்டு படத்தை டவுன்லோட் பண்ணி ஃபோர்வேட் பண்ணி பார்த்தேன். ஐந்துபேர் ஒரு அறையில் உட்கார்ந்து படம் முழுவதும் சும்மா பேசிக்கொண்டிருக்கிறார்கள். சலித்து போய் அப்படியே வைத்துவிட்டேன். பார்ப்பதற்கு எதுவுமில்லை என்று ஒரு நேரம் வந்தபோது சரி பார்த்து தொலைவோம் என்று Man From Earth ஐ ப்ளே பண்ணினேன். முதல் ஐந்து நிமிடங்கள்தான் படம் சாதாரணமாக போய்க்கொண்டிருந்தது. அதன் பின்னர்தான் ஆரம்பித்தது அதகளம்.... சும்மா பின்னியெடுத்துவிட்டார்கள். சயன்ஸ் பிக்சன் திரைப்படங்கள் என்றால் ஏலியன்கள், விண்வெளி, புதிய கிரகங்கள், டைம் ட்ராவல், கிராபிக்ஸ் ஜந்துக்களின் தாக்குதல்கள், உலக அழிவுகள் போன்ற கிளிஷேக்களை பார்த்து போரடித்துப்போனவர்களுக்கு இந்த திரைப்படம் முற்றுமுழுதாக ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது.

அப்படி என்னதான் இருக்கிறது படத்தில் ?... கதையை மேலோட்டமாக தெரிந்துகொள்வதால் இந்த படம் எந்த சுவாரஷ்ய குறைவையும் ஏற்படுத்திவிடப்போவதில்லை என்பதால் ஸ்பாய்லர் பற்றிய பயத்தை விட்டு படியுங்கள் :). கதை, ஜோன் ஓல்ட்மேன் என்னும் புரொபசர் ஒருவர் ஊரை காலி செய்துகொண்டு கிளம்ப தயாராகிறார். தமது பத்துவருட நன்பனுக்கு விடை கொடுத்து அனுப்ப வருகிறார்கள் ஜோனின் நண்பர்கள் ஐந்துபேர். இவர்கள் ஒன்றும் சாதாரண நண்பர்கள் அல்ல. ஒரு பயோலொஜிஸ்ட், ஒரு ஹிஸ்டோரியன், ஒரு ஆர்க்கியோலொஜிஸ்ட், ஒரு அந்ரபோலொஜிஸ்ட், ஒரு சைக்கியாரிஸ்ட், ஒரு மாணவி. எல்லோரும் வந்துவிட்டார்கள். ஜோனின் பயணம் குறித்த கேள்வி எழும்புகிறது. பத்து வருடங்களுக்கு முன் நண்பனாக வந்து சேர்ந்த ஜோன் இப்போது ஏன் போகிறேன் என்றும் சொல்லாமல் எங்கு செல்கிறார் என்ற கேள்வி நண்பர்களிடையே எழுகிறது. மழுப்பலாகவே பதிலளித்துவரும் ஜோன் சிறிது நேரத்திற்கு பின் தனது நண்பர்களை நோக்கி ஒரு கேள்வியை வீசுகிறார்.  “கற்காலத்தில் இருந்து இன்றுவரை பதின்நான்கு ஆயிரம் ஆண்டுகளாக ஒரு மனிதன் வசித்து வந்தால் அவன் எப்படி இருப்பான்?” ஒவ்வொருவரும் தமது துறை சார்ந்து இதற்கான பதிலை சொல்கிறார்கள். 

அடுத்த அதிர்ச்சியை எடுத்து வீசுகிறார் ஜோன். “நான் 14 ஆயிரம் ஆண்டுகளாக வசித்துவரும் Caveman”. கேள்வியுடன் சாதாரணமாகவே ஆரம்பித்த ஜோன் காஷுவலாக சொல்லும் வசனம் அறையிலிருப்பவர்களை எதிர்பாராத அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. "I had a chance to sail with Columbus, Only I'm not the adventurous type. I was pretty sure the Earth was round, but at that point, I still thought he might fall off an edge someplace..." என ஜோன் சொல்வதில் அதிர்ச்சியாகும் நண்பர்கள் பின் அதை சமாளித்து விளையாட்டாக எடுத்துக்கொண்டு, விளையாட்டாகவே தொடர எண்ணி சில கேள்விகளை கேட்கிறார்கள். ”தொடர்ச்சியாக நான் ஒரு இடத்தில் தங்கும்போது எனக்கு வயதாவதில்லை என்பதை என்னை சுற்றியிருப்பவர்கள் கண்டுகொள்கிறார்கள். அதனால்தான் பத்துவருடங்களுக்கு ஒரு தடவை என் அடையாளத்தையும் இடத்தையும் மாற்றிக்கொள்கிறேன்” என்னும் ஜோனின் பதில் ஜோன் ஒரு Caveman என்பதையும் ஜோன் எங்கு, ஏன் செல்கிறான் என்ற கேள்விக்கான பதிலையும் முடிச்சுப்போடுகிறது. தொடர்ந்து வரும் ஜோனின் பதில்கள் நண்பர்களை மாத்திரமல்ல நம்மளையும் அதிர்ச்சியுடன் வாய்பிளக்க வைக்கிறது. ஒருவேளை ஜோன் மனரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறாரோ என சந்தேகம் கொள்பவர்கள் தொடர்ச்சியாக கேள்விகளை தொடுக்கிறார்கள். ஒவ்வொரு கேள்விக்கும் ஜோனிடம் இருந்து வரும் பதில்கள் சாதாரண பதில்கள் அல்ல. பல்லாயிரம் ஆண்டுகால மனிதகுல நம்பிக்கையின் ஆணிவேரையே தகர்த்தெறியும் பதில்கள் அவை. ஜோனின் பதில்களை நம்ப முடியாமல் போனாலும் விஞ்ஞான,  அறிவியல் ரீதியாகவோ அல்லது வரலாற்று, மத ரீதியாகவோ பொய் என்று நிரூபிக்கமுடியாமல் திண்டாடிப்போகிறார்கள் அத்துறை சார்ந்த பேராசிரியர்கள். கூடவே இத்துறை சார் ஆதாரங்களுடன் ஜோனின் பதில்கள் பொருந்திப்போகின்றன என்பதும் அதிர்ச்சியாகவிருக்கிறது.

நாம் கடவுள் என்று நினைத்து, அதீத நம்பிக்கை   கொண்டு வழிபடும் ஒருவர், அவருடைய பெயரில் மதம், நம்பிக்கைகள் கட்டியெழுப்பப்பட்டு, அந்த நம்பிக்கைகளின் வழி உலகம் பயணித்துக்கொண்டிருக்கையில் அவர் கடவுளே இல்லை, நம்மை போல சாதாரண மனிதர் என்று தெரிய வந்தால் எம் நிலமை எப்படி இருக்கும்? அதிலும் அவர் சொன்ன வாக்காக நாம் பின்பற்றிக்கொண்டிருப்பவைகளில் பெரும்பாலானவை அவர் சொன்னதில்லை என தெரிய வந்தால்? அந்த ஆயிரம் ஆண்டுகால நம்பிக்கை சிதறும்போது எல்லாம் எமது கைவிட்டுப்போன ஒரு வெறுப்பான மனநிலைக்கு வந்திவிடுவோமில்லையா?

ஒரு வெறுமையான சூழலில் Fire Place இல் மூட்டப்பட்டு மெதுவாக எரிந்து கொண்டிருக்கும் நெருப்பின் அருகில் அனைவரும் அமர்ந்திருக்க,  பின்னணியில் பீத்தோவனின் சிம்பொனி இசை ஒலிக்க... ஜோன் மெதுவாக கடவுள் பற்றிய தன் உரையாடலை ஆரம்பிப்பார். இது ஒரு கற்பனையாக கட்டமைக்கப்பட்ட திரைப்படம் என்ற உண்மையை மறந்து நாமும் அதே மனநிலையில் கதிரையில் உட்கார்ந்திருப்போம். ஏற்கனவே நம்பமுடியாத பல விசயங்களை நம்பவேண்டிய கட்டாயத்தில் அனைவரும் அதிர்ச்சியாகியிருக்க, கடவுள் பற்றி ஆரம்பித்த உரையாடல் அதிர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்ல.... ஏடித் மெல்ல கண் கலங்க..  சான்சே இல்லை. படத்தின் அந்த காட்சி ஏற்படுத்திய சூழ்நிலையும், அங்கிருந்தவர்களின் உணர்ச்சியும், அவர்களின் உணர்ச்சி வெளிப்பாடு பார்வையாளனுக்குள் கடத்தப்பட்ட விதமும்... என்னை பொறுத்தவரை படத்தின் உச்சக்கட்ட காட்சி அது.



ஒரே ஒரு அறை. அதற்குள் ஆறு நபர்கள். இரண்டு தடவைகள் மாத்திரமே வாசலுக்கு வரும் கேமரா ஏனைய நேரங்களில் அறைக்குள்ளாகவே ஒரு சில கோணங்களில் அசைந்துகொண்டிருக்கிறது. அவ்வளவு சிறப்பான ஒளிப்பதிவும் இல்லை, பின்னணி இசையும் சிறப்பாக இல்லை. ஆரம்பத்தில் சொன்னதுபோல எந்தவிதமான பிரம்மாண்டங்கள் இல்லை. 2007 படம் வந்திருந்தாலும் 80 - 90 வெளிவந்த திரைப்படங்கள் போன்ற பிக்ஸர் குவாலிட்டி, நுட்பங்கள் அற்ற சாதாரண எடிட்டிங் என முதல் பத்து நிமிடங்கள் படத்தின் லோட் பட்ஜெட் தொழில்நுட்பங்கள் தெளிவாக தெரிந்தாலும் அதன்பின்னர் இவற்றை பற்றி யோசிக்கவே பார்வையாளனுக்கு நேரம் கொடுக்காமல் நகர்கிறது படம். படத்தில் பலமாக இருப்பதெல்லாம் வசனம், வசனம், வசனம் மட்டுமே. ஆனால் எவற்றாலும் தரமுடியாத சுவாரஷ்யத்தை வசனத்தால் மட்டும் தந்திருக்கிறார்கள். விவாதத்திற்கு வலுவூட்டும் வகையிலான பாத்திர வடிவமைப்புகள், ஒரிஜினாலிட்டி அதிகமான கதைக்களம் என படத்தோடு சேர்த்து நம்மையும் கட்டிப்போடுகிறது The Man From Earth. கிளிஷேக்கள் அற்ற முற்றிலும் புதிய களத்துடனான படத்தை பார்க்க விரும்பும் சயன்ஸ் பிக்ஸன் ரசிகர்கள் அல்லது சினிமா ரசிகர்கள் அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படம் இது.

சரி, இந்த படத்தை பார்க்கலாம் என்று முடிவு செய்துவிட்டீர்களா? அப்படியாயின் சில முன்னேற்பாடுகளை சொல்கிறேன். வரலாறு அறிவியல் ஆகியவற்றில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா? இல்லாவிட்டாலும் பரவாயில்லை. படம் சுவாரசியமாகவே இருக்கும். இருந்தால் சுவாரசியம் இன்னும் சற்று அதிகமாக இருக்கும். இரண்டாவது பொழுதுபோக்காக படம் பார்க்கும் நபரா நீங்கள்? படம் பார்க்கும்போதே உணவுகள் கொறிப்பது, செல்போன் பேசுவது, பக்கத்தில் இருப்பவருடன் உரையாடுவது போன்ற பல செயல்களில் ஈடுபடுபவரா? Sorry Guys. இந்த படம் ஒவ்வொரு ஃப்ரேமும் பார்க்கவேண்டியது. ஒவ்வொரு வசனமும் கேட்கவேண்டியது. ஆகவே முழு கவனத்தையும் படத்தில் வைத்திருங்கள் ! நிச்சயம் புதியதொரு அனுபவத்தை பெறுவீர்கள். இந்த திரைப்படம் உங்களை நிறையவே சிந்திக்க வைக்கும்.

1 comment:

  1. நாளை வலைச்சரத்தில் [ http://blogintamil.blogspot.in]உங்கள் வலைத்தளத்தை அறிமுகபப்டுத்துகிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன்
    மனோ சாமிநாதன்

    ReplyDelete

Blog Archive

Followers

Powered by Blogger.
Copyright © சிறகுகள் |