திரைப்படங்களை பொழுதுபோக்கு என்ற ஓர் தளத்தினூடாக மட்டும் அணுகிவிடமுடியாது. இயக்குனரும் சரி ரசிகனும் சரி ஒரு திரைப்படத்தை, அதன் பின்னால் கட்டமைக்கப்பட்டுள்ள கலை, இலக்கியம், சமூகம், அரசியல் என்ற பல்தளத்தினூடாக தரிசிக்கவேண்டும். வெகுஜன சினிமா என்ற போர்வையில் நுழைந்துகொள்ளும் அபத்த சிந்தனைகளை இத்தகைய பார்வையொன்றின் மூலமே பிரித்தரிய முடியும். அந்த கடமையைத்தான் இந்த தொகுப்பிலுள்ள 10 விமர்சனங்கள் மூலம் முன்னெடுத்திருக்கிறார் கௌதம சித்தார்த்தன்.
சமீபகாலமாக “நல்ல சினிமா”வாக அறிவுஜீவிகளால் கொண்டாடப்பட்ட திரைப்படங்களின் பின்னால் உள்ள நுண்ணரசியல்கள், இந்த திரைப்படங்களினூடாக அதிகாரவர்க்கங்கள் மக்களிடையே சிந்தனை சிதைப்பை மேற்கொண்ட விதம், சூதுகவ்வும் மாதிரியான சாதாரன படங்கள் தமிழ்சினிமாவை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தும் உச்சங்களாக கொண்டாடப்பட்டதன் பின்னணியில் உள்ள அரசியல்... என பல்வேறு விதமான அரசியல்கள் இந்த விமர்சனங்கள் மூலமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
அதேபோல பாலச்சந்தர், மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றவர்களால் கலைத்தன்மையோடு வடிவமைக்கபட்டு வந்த தமிழ்சினிமா அதன்பின்வந்த பாக்கியராஜ், பாண்டியராஜன் போன்றவர்களின் மேலோட்டமான மசாலாக்களாலும் குப்பை காமெடிகளாலும் சிதைக்கப்பட்ட விதம் குறித்து விலாவரியாக எழுதப்பட்டிருக்கிறது.
ஒரு விசயத்தை அவதானித்துப்பாருங்கள். தமிழ்சினிமாவில் நகைச்சுவை என்பது முற்றுமுழுதாக ஒழிந்தே போய்விட்டது. அந்த பரப்பை தற்போது அபத்தமான கேலிகளும் கிண்டல்களும் மாத்திரமே பிடித்துக்கொண்டிருக்கின்றன. சந்திரபாபு, நாகேசுக்கு பிறகு இந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்ற வரலாற்றை மிக தெளிவாக பதிவுசெய்கிறார் கௌதம சித்தார்த்தன். உலகமயமாக்கல் அனைத்து துறைகளினதும் தீவிரத்தை இலகுபடுத்தியிருக்கிறது. ரொம்ப இலகுபடுத்தி மக்களின் தேடலை மட்டுப்படுத்தியிருக்கிறது. கேலி, கிண்டல்கள் மூலம் மக்களை ஒரு ஜாலியான மனநிலையில் பேணவே விரும்புகிறது. அதன்மூலம் அதிகாரவர்க்கத்துக்கு எதிராக மக்களின் கிளர்ச்சியை மட்டுப்படுத்தியிருக்கிறது. புத்தகம் இதை ஆழமாக பதிவு செய்திருக்கிறது.
நிறைய விசயங்களை நியாயமாக பதிவுசெய்த கௌதம சித்தார்த்தன் சூதுகவ்வும் நொன் லினியர் திரைக்கதை என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். நொன் லினியர் பற்றிய விளக்கத்தையும் கொடுத்திருந்தால் என்னைபோன்ற அடிமட்ட வாசகர்களுக்கு உதவியாக இருந்திருக்கும். நுண்ணரசியல்களை நுணுக்கமாக பதிவுசெய்தவர் கமலை நல்ல கலைஞனாக முன்னிறுத்த முனைந்திருக்கிறாரோ என்று தோன்றுகிறது :P
இதை தவிர்த்து, அனைவரும் அவசியமாக வாசிக்கவேண்டிய நூல். பெரும்பாண்மையான கட்டுரைகள் ஏற்கனவே தீராநதியில் வெளியாகி வலைத்தளத்திலும் வெளியாகியிருந்தது. புதிதாக எதிர்பார்த்ததால் எனக்கு சற்று ஏமாற்றம்தான். ஆனால் இது ஒரு அவசியமான புத்தகம். கண்டிப்பாக படிக்கவும்.
0 Comments:
Post a Comment