Monday, May 11, 2015

மாற்றத்தை நோக்கிய பாதையில் ஈழத்து சினிமா துறை !

இலங்கை தமிழ் சினிமாவின் இன்றைய நிலை என்ன? நேற்று ஆரம்பித்திருக்கும் குறும்பட அலைகளுக்குள் இந்த கேள்விக்கான பதிலை தேடுவது நியாயமில்லை என்பதால் சற்று முன்னோக்கிய நிலவரத்தையும் பார்ப்போம். 90க்கு முற்பட்ட எமது திரைப்படங்கள் எவையும் தற்போது ஆவணப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அதனால் அவற்றை ஆராட்சிக்கு உட்படுத்துவது நமக்கு இயலாத நிலையில் அன்றைய சினிமா ஆர்வலர்களின் தரவுகளையே நாடவேண்டியுள்ளது. அவர்களது பதிவுகளின்படி தென்னிந்திய சினிமாவையே நம்மவர்கள் இங்கிருந்து மறுபதிப்பு செய்துகொண்டிருந்ததாக அறியமுடிகிறது. 90 இற்கு பின்னர் நிதர்சனத்தில் இருந்து எமது மண்வாசனையுடன் திரைப்படங்கள் உருவாகிக்கொண்டிருந்தாலும் பெரும்பாலும் அவை பிரச்சார சினிமா வகைக்குள்ளேயே சேர்ந்துகொள்கின்றன. ஆக, எமக்கான ஒரு சினிமா சமீபகாலமாகத்தான் மெல்ல மெல்ல தவழ ஆரம்பித்து மிக மெதுவாகவே நகர்ந்துகொண்டிருக்கிறது. வருடத்துக்கு சராசரியாக 40-50 குறும்படங்கள் வெளிவந்துகொண்டிருந்தாலும் தனித்துவமான மாற்றம் என்பது ஒன்றிரண்டு குறும்படங்களுடனேயே சுருங்கிக்கொண்டிருக்கிறது. அதன் காரணம் என்ன? இதற்கான பதிலை அறிந்துகொள்ள முன் இன்னும் சில விசயங்களை தெரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது.

சாதாரணமாக இலங்கையில் குறும்பட, திரைப்பட முயற்சிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இளைஞர்களிடம் “ஏன் உங்களால் சிறந்ததொரு படைப்பை கொடுக்கமுடியவில்லை” என்ற கேள்வியை முன்வைத்து பாருங்கள். எங்களிடம் போதிய வளம் இல்லை என்ற மனனம் உங்கள் முன் ஒப்பிக்கப்படும். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன். தயாரிப்பாளர் என்ற ஒரு விடயத்தை தவிர, ஒரு நல்ல சினிமாவை கொடுப்பதற்கான அத்தனை வளங்களும் இங்கு உண்டு. அதுதான் பூரணமான உண்மை. ஆனால் இத்துறையில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் இந்த உண்மையை உணர்ந்துகொள்ளமுடியாமல் இருக்கிறமைக்கு காரணம், அவர்கள் ஹாலிவூட், இந்திய சாகச சினிமாக்களையே தமது இலக்குகளாக நிர்ணயித்துக்கொண்டிருக்கின்றமைதான். சினிமா அல்லது எமக்கான தனித்துவமான சினிமா குறித்த சிந்தனைப்போக்குகள் இவர்களிடம் இல்லை. முதல் பந்தியில் விட்டு சென்ற கேள்விக்கும் பதில் இதுதான். நம் இளைஞர்கள் மீண்டும் ஒருமுறை இந்தியசினிமாவை மறுபதிப்பு செய்ய முயற்சித்துவருகிறார்கள். இவற்றிலிருந்து விதிவிலக்காக  வரும் ஒருசில படைப்புகள் மட்டுமே மூச்சிரைத்தபடி ”எமக்கான சினிமாவை” நோக்கி நடக்க ஆரம்பித்திருக்கின்றன. புலம்பெயர் தேசத்தில் பிரான்ஸ், கனடா நாடுகளில் இருந்து ஓரளவு தனித்துவமான குறும்படங்கள், திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றமையை அவதானிக்க முடிகிறது. இருப்பினும் கட்டுரையின் நோக்கம் இலங்கையில் இருந்து வெளிவரும் குறும்படங்கள் ஆதலால், கடந்த ஒரு வருட காலத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களிலும், தமிழ் விமர்சக வட்டங்களிலும் பெரிதும் கருத்தாடலுக்கு உட்படுத்தப்பட்ட இரு குறும்படங்களை பற்றிம், ஏனைய குறும்படங்களில் இருந்து அவை எவ்வாறு தனித்து நிற்கின்றன என்பதை பற்றியும் பார்க்கலாம்.

சூனியவளையம்


குடிப்பழக்கம், புகைத்தல் மட்டும்தான் போதையல்ல. இவற்றைவிடவும் ஆபத்தான போதைப்பழக்கங்களும் உண்டு என்று சிறப்பான திரைக்கதையமைப்பின் ஊடாக சொன்ன “கராளம்” மூலம் கவனிக்க வைத்தவர் மகிழ்தரன். அவரது இரண்டாவது குறும்படமாக வெளிவந்திருக்கிறது “சூனியவளையம்”. சூனியவளையத்தின் பேசுபொருள் சற்று நுணுக்கமானது. சமூக ஏற்றத்தாழ்வுகளை நேரெதிர் பார்வையில் அணுகுகின்றது.

சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டவர்களாக, சமூகத்தின் கேலி, கிண்டல்களுக்கு உட்பட்டவர்களாக வாழ்ந்துவரும் ஒரு மக்கள்கூட்டம், இரகசிய அமைப்பு ஒன்றின் கீழ் இணைகிறார்கள். அவர்களது நோக்கம் சமூகத்தில் இருந்து பிரிந்து செல்வதோ அல்லது தம்மை ஒதுக்கும் சமூகத்தை எதிர்ப்பதோ அல்ல. மாறாக அந்த சமூகத்தை தம்மோடு அரவணைத்துக்கொள்வது. எப்படி? சமூகத்தில் ஒருவன் பாதிக்கப்பட்டவனாக, ஏனையவர்களிடம் இருந்து வேறுபட்டவனாக இருக்கும்போதுதான் அவன் சமூகத்தால் ஒதுக்கப்படுவான். இதுதான் சமூகத்தின் நிஜம். ஆனால் அவனுக்கு இருக்கும் குறைபாடு சமூகத்தில் அனைவரிடமும் பரவிவிட்டால் அனைவரும் சமமாகிவிடுவார்கள். அனைவருமே பாதிக்கப்பட்டவர்களாக இருக்கும்போது அந்த குறைபாடு சகஜமாகிவிடும். யாரும் சமூகத்தால் ஒதுக்கப்படமாட்டார்கள். இவ்வாறானதொரு கருத்தியலோடு இயங்கிவரும் அவ் அமைப்பு மெல்ல மெல்ல சமூகத்தில் ஊடுருவுகின்றது. புறக்கணிக்கப்பட்ட எயிட்ஸ் நோயாளிகள் மூலம் அனைவரிடமும் எயிட்ஸ் பரப்பப்படுகிறது. குறைகள் மேலும் மேலும் பரவிக்கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் அந்த அமைப்பின் தலைவன் பொலிஸில் பிடிபட்டுக்கொள்கிறான். ஆனால் செயற்பாடுகள் நிற்கவே இல்லை. பல ஆயிரம் புறக்கணிக்கப்பட்டவர்களூடாக ஒரு கட்டற்ற அமைப்பாக சமூகத்தில் நுழைந்துகொண்டிருக்கிறது அவ் ஆபத்து.

சமூகத்தால் ஒதுக்கப்பட்டவர்கள் குறித்த ஏராளமான படைப்புகள் வெளிவந்திருந்தபோதும், தனித்துவமானதொரு கதைசொல்லல் முறை மூலம் புதிதுபட்டிருக்கிறது “சூனியவளையம்”. காரணம், ஒதுக்கப்பட்டவர்கள் சார்பான அனுதாப கோரிக்கையை சமூகத்திடம் முன்வைக்கவில்லை. மாறாக அவர்களை ஒதுக்கி, தாழ்வுச்சிக்கலுக்குள் தள்ளிவிடுவதன் மூலம் சமூகம் எதிர்நோக்கக்கூடிய அபாயங்களை எச்சரிக்கையாக முன்வைத்திருக்கிறார் மகிழ்தரன். படத்தில் வரும் ரகசிய அமைப்பினர் பற்றிய அறிமுகங்களை எமக்கு தெரியாமலேயே சில இடங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவை கதையின் போக்கிலிருந்து பார்வையாளனை நழுவ விடாமலும், பின்னால் வரப்போகும் சில கேள்விகளுக்கான பதில்களாகவும் அமைந்திருக்கும். மிக நேர்த்தியான கதை சொல்லல் வடிவம், அதற்கு ஒத்துழைக்கும் தொழிநுட்ப உபயோகம் என சிறந்ததொரு குறும்படமாக வெளிவந்திருக்கிறது “சூனியவளையம்”.

அகமுகி



இவ்வருடம் சஞ்சிகனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கிறது ”அகமுகி” குறும்படம். நல்லது, கெட்டது என்ற இரு புள்ளிகளுக்கிடையே போராட்டத்துடன் நகர்ந்துகொண்டிருக்கிறது சமூகம். பெரும்பாண்மையானவர்கள் நல்லவர்களாக இருக்கவேண்டும் என்ற விருப்பில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் சூழ்நிலை என்ற வில்லன் அவர்களை பார்த்து சிரித்தபடியே இருக்கிறது. சந்தர்ப்பம் பார்த்து தடம் மாற்றுகிறது. அப்படியான சூழ்நிலைகளால் மனச்சாட்சியை கொன்று வாழும் ஒருவனைப்பற்றி சொல்லமுனைகிறது “அகமுகி”. லீசிங் அடிப்படையில் வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனமொன்றில், பணம் கட்டாதவர்களிடம் இருந்து வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியை செய்துவருகிறான் கமல். ஒரு சந்தர்ப்பத்தில் ஊனமுற்றவர் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட வாகனமொன்றை அவசரமாக பறிமுதல் செய்யவேண்டிய நிலை. முகாமையாளரின் அழுத்தம் காரணமாக மனச்சாட்சிக்கு விரோதமாக அந்த காரியத்தை செய்து முடிக்கிறான். இப்படி தனது வாழ்வுத்தேவைக்கும் மனச்சாட்சிக்குமிடையில் சிக்கிக்கொள்ளும் கமலின் போராட்டமே குறும்படத்தின் கதை.

இங்கு கமல், முகாமையாளர் இருவருமே நல்லவர்கள்தான். முதலாளித்துவம் இருவருக்கும் முன் சூழ்நிலையாக வந்து தடுத்துக்கொள்கிறது. முதலாளிகளின் அழுத்தத்துக்கு இருவருமே அடிபணியவேண்டி ஏற்படுகிறது. முகாமையாளருடனான தொலைபேசி அழைப்பில் “சேர்.. நீங்கதானே அவருக்கு டைம் கொடுத்திங்க. இப்ப உடனடியா பறிக்க சொன்னா எப்பிடி சேர்..?” என்ற வாதத்தை முன்வைப்பான் கமல். சிறிதுநேர அமைதிக்கு பின் துப்பாக்கி சுடும் ஒலி ஒன்று தொலைபேசிவழி கேட்கும். அடுத்த விநாடி “இல்லை நீங்க பறிச்சிடுங்க” என்று அழுத்தமாக சொல்வார் முகாமையாளர். இந்த காட்சியை புரிந்துகொள்வதற்கு துப்பாக்கி ஒலியின் சேதியை புரிந்துகொள்ளல் அவசியமாகிறது. இங்கு மனச்சாட்சிகள் அடிக்கடி கொலை செய்யப்படுகின்றன. ஒவ்வொரு சூழ்நிலையிலும் கமல் தன் மனச்சாட்சியை கொல்கிறான். இந்த கொலைகளின் குறியீடாக அவ்வப்போது துப்பாக்கி ஒலி வந்துபோகிறது. இந்த காட்சியில் முகாமையாளரின் நிலையை அந்த துப்பாக்கி சத்தம் தெளிவாக விளக்கிவிடுகிறது. முதலாளித்துவ உலகம் சுரண்டலை மட்டுமே தன்னகத்தில் கொண்டிருக்கிறது. இங்கு மனச்சாட்சியை கொன்று புதைத்தால்தான் முன்னேற முடியும். இறுதிக்காட்சியில் அரைவாசி கிழிந்து தொங்கும் தெரேசா படமும் அந்த சேதியைத்தான் உணர்த்தி நிற்கிறது.

குறும்படத்தின் கதை ஒரு நேர்கோட்டில் பயணிக்கவில்லை. மாறாக நொன் லினியர் என்னும் திரைக்கதை உத்தி இங்கு கையாளப்பட்டிருக்கிறது. இலங்கையில் இருந்து நொன் லினியர் வடிவத்தில் வெளிவந்திருக்கும் முதல் குறும்படம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது (பிரான்சில் சதாபிரணவனின் “போராளிக்கு இட்ட பெயர்” குறும்படமும் நொன் லினியர் திரைக்கதை வடிவத்தில் வெளிவந்திருந்தது). அதேபோல நமது மனச்சாட்சி நம்மைப்போலவேதான் இருக்கவேண்டும் என்ற திரைப்பட மரபுகளும் நியாயமாக உடைக்கப்பட்டிருக்கின்றன. இந்த குறும்படத்தின் மூலமாக சஞ்சிகனின் இலக்கிய தேடல் அடையாளப்படுத்தப்படுகிறது. கூடவே இயக்குனர்களுக்கு இலக்கிய பரிச்சயம் எத்தனை அவசியம் என்பதையும் உணர்த்தி நிற்கிறது.

இந்த இரண்டு குறும்படங்களிலும் பொதுவாக சில கூறுகளை அவதானிக்கமுடியும். இரண்டுமே சமுக சிக்கல்களை புதுமையான திரைக்கதை மூலம் அணுகியிருக்கின்றன. அதோடு திரைப்படங்கள் குறித்த சில பொதுப்புத்திகளை, மரபுரீதியான திரைக்கதை வடிவங்களை தர்க்கரீதியோடு உடைத்திருக்கிறார்கள். சூனியவளையம் நேரெதிராக சொல்லப்படும் கதையையும், அகமுகி ஒழுங்கற்ற கதைசொல்லல் உத்தியையும் கையாண்டிருப்பதை அவதானிக்கமுடியும். அதேவேளை இந்த உத்திகள் மிக அவதானமாகவும் கதையின் தேவை கருதியும் உபயோகிக்கப்பட்டிருப்பதை காணலாம். மிக முக்கியமாக இரண்டு குறும்படங்களுமே வேற்று பிரதேச சினிமாக்களின் சார்புநிலை அற்று தனித்துவத்தோடு வந்திருக்கின்றன.

இந்த இரு குறும்படங்களோடு மூன்றாவதாக “அப்பால்” என்ற ஒரு குறும்படத்தையும் பார்க்கவேண்டியிருக்கிறது. இந்த குறும்படத்தை மாதவன் இயக்கியிருந்தார். தனது முன்னைய குறும்படங்களில் இந்திய பிரதிபலிப்புக்களை கொண்டிருந்தாலும் “அப்பால்” மூலம் சற்று கவனிக்கவைத்திருக்கிறார் மாதவன். ”நாம் எமக்காக, எமது சுயத்துடன் வாழப்போகிறோமா அல்லது சமூகத்தின் திருப்திக்காக வாழப்போகிறோமா” என்ற கேள்வியை முன்வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது இக்குறும்படம். நல்ல கருத்தை சிறப்பாக படமாக்கியிருப்பினும் கருத்து குறித்த ஆழமான தேடலற்று சுருங்கியிருக்கிறது குறும்படம்.

கடந்தவருடம் வெளியான சுமார் 40 குறும்படங்களில் இந்த மூன்று குறும்படங்கள் மட்டுமே தனித்துவமான அடையாளத்துடன் வெளியாகியிருக்கின்றன என்பது வருத்தமான செய்திதான். இதற்கு முன்னைய காலப்பகுதியை எடுத்துக்கொண்டாலும் மிக குறைந்தளவு அடையாள குறும்படங்களே வெளிவந்திருக்கின்றன. இருப்பினும் இந்த படங்களினூடாக எமக்கான ஒரு சினிமா முன்னகர ஆரம்பித்திருப்பது மகிழ்ச்சிதான்.

ஆக்காட்டி சஞ்சிகைக்காக
மதுரன்

0 Comments:

Post a Comment

Blog Archive

Followers

Powered by Blogger.
Copyright © சிறகுகள் |