Friday, May 1, 2015

Food Inc - உணவுப்பழக்கங்கள் மீதான மல்டிநேஷனல் கம்பெனிகளின் ஆதிக்கம் !

இந்த Fast food மோகம் என்றது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரை இரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. சிறுவகள் கூட I Like Fast Food என்று அசால்டாக சொல்லுவார்கள். நம்ம பக்கம், கொழும்பில் என்னமாதிரி என்று தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் 2010 இற்கு பின்னரே KFC மாதிரியான கார்பரேட் கம்பனிகளின் Fast Food கள் கடை விரிக்க ஆரம்பித்தன. இன்றைய நிலையில் யாழ்ப்பாணம் KFC யில் போய் சாப்பிட்டு வருவது என்பதுபெரியதொரு கௌரவம். நடுத்தர வர்க்கத்துக்கும் சற்று மேல் நிலையில் இருப்பவர்களாலேயே இங்கு சாப்பிடமுடியும் என்பது இன்னொரு தகவல். சரி, இவ்வளவு பணம் கொடுத்து சாப்பிட்டுவிட்டு பெருமைப்படுகிறோம் என்பதை தாண்டி இந்த சாப்பாடு எப்படி செய்யப்படுகிறது, என்னவகையான வியாதிகளை எங்களுக்குள் திணித்துவிடுகிறது, இந்த கார்பரேட் கம்பனிகள் எப்படி உங்களையெல்லாம் அடிமையாக்க முயற்சிக்கிறார்கள் என்பது பற்றி யாரும் சிந்திப்பதாக இல்லை. அவர்கள் எல்லாரும் கண்டிப்பாக Food,INC என்ற இந்த ஆவணப்படத்தை பார்க்கவேண்டியவர்கள் ஆகிறார்கள்.
”எங்களது உணவுப்பழக்கவழக்கங்கள் 10,000 ஆண்டுகளில் மாறியதைவிட விரைவாக கடந்த 50 ஆண்டுகளில் மாற்றமடைந்திருக்கிறது” என்ற அதிர்ச்சியான தகவலோடு ஆரம்பித்து, மேற்கத்தைய நாடுகளில் தலைவிரித்தாடும் ஃபாஸ்ட் ஃபுட் மோகத்தையும், அதன் மூலமான மல்டி நேஷனல் கம்பனிகளின் ஆதிக்கத்தையும் போட்டுடைத்திருக்கிறது இந்த ஆவணப்படம். இறைச்சி உற்பத்தி, தானியவகை உற்பத்தி, மல்டி நேஷனல் கம்பெனிகளின் ஆதிக்கம் என்னும் மூன்று தலைப்புக்களின் கீழ் பிரிக்கப்பட்டிருக்கிறது படம். 

மிகவும் கிளீனாக பேக் பண்ணப்பட்டு, கவர்ச்சியான லேபிள்களுடன் சுப்பர்மார்கெட்டில் விற்பனைக்கு வரும் இறைச்சிகளின் உற்பத்தி பண்ணைகளை என்றாவது பார்த்திருக்கிறீர்களா? இல்லை. ஏனென்றால் இவற்றை பற்றி தெரிந்துகொள்ள முதலாளிகளான மல்டிநேஷனல் கம்பெனிகள் உங்களை அனுமதிக்காது. தெரிந்துகொண்டால் நீங்கள் தொடர்ந்தும் இவற்றை உண்ணமாட்டீர்கள்!! KFC யில் நீங்கள் சுவைத்து கடிக்கும் ஒரு சிக்கன் எப்படி உற்பத்தியாகிறது என்று தெரியுமா உங்களுக்கு? சிக்கன்கள் வெறும் 45 நாட்களில் அதீத வளர்ச்சியடைய வைக்க ஏராளமான கெமிக்கல்ஸ் இந்த பண்ணைகளில் பாவிக்கப்படுகிறது.  சூரிய வெளிச்சம் காட்டாமலேயே வளர்க்கப்படும் இந்த சிக்கன்கள் கெமிக்கல்ஸால் ஊதி பெருத்து நெஞ்சு சதை இறுகி, மூச்சுவிடமுடியாமல் தலைகீழாக கிடந்து கஸ்டப்படும் காட்சியெல்லாம் கொடூரம். அதைவிட இந்த சிக்கன்கள் இரண்டு அடி நடக்கக்கூட முடியாமல் விழுந்துவிடுகின்றன. அந்தளவு உடற்பாரம். அத்தனையும் கெமிக்கல்ஸ். அதைவிட தினம் தினம் செத்துவிழும் சிக்கன்களை அள்ளி கொட்டுவது, தகரக்கூம்பிற்குள் உடலை நுழைத்துவிட்டு தலையை வெட்டுவது எல்லாமே கொடுமை. அதைப்போலவே படுக்கவோ, அசையவோ இடமில்லாமல் 24 மணிநேரமும்  தமது சாணிக்குள்ளேயே நிற்கும் மாடுகள், பன்றிகள்... அவை கொல்லப்படும் கொடூரமான முறைகள்.....

இரண்டாவது, தானிய உற்பத்திகள். அமெரிக்காவின் அதிகமான விளைநிலங்கள் சோள உற்பத்திக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்பது ஒரு அவசியமான தகவல். இப்படி அளவுக்கதிகமாக உற்பத்தி செய்யப்படும் சோளம் நீங்கள் உண்ணும், குடிக்கும் அத்தனை உணவுப்பொருட்களிலும் சேர்க்கப்படுகின்றன. எஞ்சியவை பண்ணைகளிலுள்ள கோழி, ஆடு, மாடு, பன்றிகளுக்கு தீவனங்களாக போகின்றன



ஆக, தினமும் பெருமளவிலான சோளம் மனித உடலில் சேர்ந்துகொண்டிருக்கிறது. விளைவு... 27.8 வீதமான அமெரிக்க வாழ் மக்கள் Diabetes ஆல் பாதிக்கப்பட்டிருப்பதாக ஆய்வுகள் சொல்கிறது.

நாங்கள் KFC அல்லது mcdonalds பக்கமே போவதில்லை, அதனால் ஆபத்தில்லை என்று நினைக்கிறீர்களா? உங்களுக்கும் ஒரு அரிய தகவலை இவ் ஆவணப்படம் சொல்கிறது. அமெரிக்காவில் இருக்கக்கூடிய சராசரி சுப்பர் மார்கெட் ஒன்றில் அண்ணளவாக 47,000 வகையான உணவுப்பொருட்கள் விற்பனைக்கு இருக்கின்றன. இந்த 47 ஆயிரம் உணவுப்பொருட்களும் மிஞ்சி மிஞ்சி போனால் மூன்று அல்லது நான்கு மல்டிநேஷனல் கம்பெனிகளின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கின்றன. இவையும் மேற்சொன்னபடி கெமிக்கல்ஸ் ஊட்டப்பட இறைச்சிகளில் இருந்தும், சோளத்திலிருந்தும் உற்பத்தியாகி வருபவைதான். உங்கள் உணவுப்பழக்கவழக்கங்கள் மீதான முதலாளித்துவ கம்பனிகளின் ஆதிக்கம் இப்போது புரிகிறதா? 

சரி, இவற்றுக்கெதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாதா என்றால் இரண்டு காரணங்கள் இங்கே தடையாக இருக்கும். ஒன்று முதலாளிகள் தமக்குள் ஒற்றுமையாகத்தான் இருப்பார்கள். நீதி துறையை கைக்குள் வைத்துள்ள அரச முதலாளித்துவத்தின் பின்னணியோடு இவர்கள் இயங்கும்போது வேறு யார் தட்டி கேட்கமுடியும்? இரண்டாவது பயம். பொதுவாக இந்த உணவுப்பொருள் ஒன்றை எதிர்த்தாலோ, கேலிபண்ணினாலோ உங்களை தூக்கி உள்ளே போட்டுவிடுவார்கள். கோர்ட் கேஸ் என்று  நடுத்தெருவுக்கு உங்களை இழுத்துவிடுவார்கள். இதெல்லாம் உங்களிடமிருந்து பணம் பிடுங்க அல்ல. உங்களிடம் இருக்கும் மொத்த பணமே அவர்களுக்கு அற்பம்தான். மாறாக பயம். எதிர்த்தால் நடுத்தெருவுக்கு வந்திவிடுவோம் என்ற பயம் இருக்கனும். 

மூன்று நாட்கள் தொடர்ந்து பர்கர் சாப்பிட்ட பத்து வயது பையன் இறந்துபோய்விடுகிறான். தாய் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்கிறார். அவர் கேட்டதெல்லாம் “தவறு எங்களில்தான். மன்னித்துவிடுங்கள். இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்கிறோம்” என்ற ஒரு மன்னிப்பு வார்த்தையைத்தான். அதைக்கூட கொடுக்க மறுத்த அந்த நிறுவனத்துக்கு எதிராக அந்த தாயால் எதுவும் செய்யமுடியவில்லை. இன்னொரு பக்கம் விவசாயிகளை அடிமைகளாக்கி வைத்திருக்கிறார்கள் இந்த மல்ரிநேஷனல் கம்பெனிகள். சோள பயிரிடுகைக்கான காப்பிரைட்சை இவர்கள் வாங்கி வைத்திருக்கிறார்கள். இதனால் இவர்களிடம் அனுமதி பெற்று, இவர்கள் கொடுக்கும் விதைகள், உரங்களை கொண்டு இவர்கள் சொல்கிறபடியே பயிரிடவேண்டிய கட்டாயம் விவசாயிகளுக்கு. மீறி எதுவுமே செய்யமுடியாது. இதே நிலைதான் பன்றி, ஆடு, மாடு, கோழி பண்ணை வைத்திருப்பவர்களுக்கும். இந்த மல்டிநேஷனல் கம்பெனிகளுடன் ஒப்பந்த அடிப்படையிலேயே தொழில் செய்யமுடியும். ஆனால் அவர்களது நிபந்தனைகள் இறுக்கமானவை. பண்ணையாளர்கள் பணக்காரர்களாகிவிடக்கூடாது என்பதில் இவர்களது நிபந்தனைகள் அவதானமாக இருக்கும். மாதா மாதம் பண்ணையில் புதிப்பித்தல்கள், புதிய வசதிகள் என்று கட்டாயத்தின் பேரில் பெருமளவு பணம் செலவழிக்க வைக்கப்படுகிறார்கள் பண்ணையாளர்கள்.

பண்ணையாளர்களும், விவசாயிகளும் தமது கட்டுப்பாடுக்குள் இருந்து விலகிவிடக்கூடாது என்பதில் அவதானமாக இருக்கும் இந்த மல்டிநேஷனல் கம்பெனிகள் இவர்களை 24 மணிநேரமும் கண்காணிக்கவே ஆட்களை வைத்திருக்கிறார்கள். ஏதாவது தெரியவந்தால் இவர்களின் கதி அதோ கதிதான். 

இந்த ஆவணப்படம் கூட பல சிக்கல்களுக்கு மத்தியில்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. அவசியம் பாருங்கள். உங்கள் உணவுப்பழக்கவழக்கம் நிச்சயம் மாறும்.

ட்ரெயிலர்

2 comments:

  1. நல்ல செறிவான தவல்கள்கொண்ட பதிவு..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ :)

      Delete

Blog Archive

Followers

Powered by Blogger.
Copyright © சிறகுகள் |