Saturday, September 5, 2015

With you without you - ஒரு பார்வை !

கடந்த வருடம் வெளிநாடுகளில் திரையிடப்பட்டதிலிருந்து தரமானதொரு சினிமாவாக புத்திஜீவிகளால் கொண்டாடப்பட்டு வந்தத with you without you திரைப்படத்தை நேற்று யாழ் சர்வதேச திரைப்பட விழாவில் பார்க்கமுடிந்தது. தாஸ்தவேஸ்கியின்  குறுநாவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு பிரசன்ன விதானகே இந்த திரைப்படத்தை எடுத்திருந்தார்.

படம் பார்த்து முடிந்தபோது என்னிடம் ஒரே ஒரு கேள்விதான் இருந்தது. “கொண்டாடுவதற்கு இந்த படம் எந்த வகையில் தகுதி பெறுகிறது??” நீண்டநேரம் அசையாமல் இருக்கும் கமெராவும், மெதுவாக நகரும் திரைக்கதையும் ஒரு படத்தை நல்லதொரு கலைத்திரைப்படம் என்று வரையறுத்துவிட போதுமானதாக இருக்கிறதா ?

தன் அப்பாவி சகோதரர்களை கொலை செய்தவர்களும், தன் இன பெண்களை மோசமான பாலியல் வல்லுறவுக்கு உட்பத்தியவர்களுமான ராணுவத்தினர் மீது தீராத வெறுப்பில் இருக்கும் பெண்ணுக்கு தனது கணவன் முன்னைநாள் இராணுவத்தினன் என தெரியவருகிறது. அதன் பின்னர் இருவருக்குள்ளும் நிகழும் உறவுநிலை சிக்கல்களும் உளப்போராட்டங்களும்தான் படத்தின் மையக்கரு.  படத்தின் கதை சந்தேகத்திற்கிடமின்றி அருமையானதொன்று. இந்த கருவை திறம்பட காட்சிப்புலத்தில் கொண்டுவந்திருந்தால் அற்புதமான திரை அனுபவம் ஒன்று கிடைத்திருக்கும். ஆனால் இங்கு அது மிக மோசமாகவே  கையாளப்பட்டிருக்கிறது. 

முதலில் எதைக்குறித்து பேசப்போகுறோம் என்ற தெளிவோ, மையக்கரு குறித்த ஆழமான காட்சிப்படுத்தல்களோ இல்லாமல் நகர்கிறது படம். தனது அடகு கடைக்கு அடிக்கடி வரும் நாயகி மேல் அனுதாபம் கொள்கிறான் நாயகன். அந்த அனுதாபத்தின் பேரில் அவளை திருமணம் செய்துகொள்கிறான். தொடர்ந்து இருவருக்கும் இடையிலான காதலோ, உறவு நிலையோ மிக மேலோட்டமாகவே சொல்லப்படுவதால் பார்வையாளனால் தொடர்ந்து கதையுடன் ஒட்ட முடியாமல் போய்விடுகிறது.  இடையில் வரும் உடலுறவு காட்சியோ, முத்த காட்சிகளோ எந்த உயிர்ப்புமற்று வலிந்து திணிக்கப்பட்டதாக கடந்து போய்விடுகிறது. படத்தின் அடிநாதமே இருவருக்குமிடையிலான காதலும், அதன்பின்னரான உளப்போராட்டமும்தான் என்னும்போது இரண்டுமே படத்தில் வலுவற்றிருப்பதால் படமும் ஒட்டாமலே போய்விடுகிறது. நாயகி இறுதியில் தற்கொலை செய்துகொள்ளும்போதுகூட எந்தவித ஈடுபாடுமற்று போய்விடுகிறது.

நாயகன் தன் பிழைகளுக்காக திருந்தி குற்றவுணர்வுடன் வாழ்கிறான் என்று சொல்லப்பட்டாலும், அவனது குற்றவுணர்வு வெளிப்படுத்தப்பட்ட விதம் தட்டையாகவே இருக்கிறது. நான் உன்னை காயப்படுத்திவிட்டேன் என்று மனைவியிடம் அழுகிறான். பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட தன் நண்பர்களுக்காக பொய் சாட்சி சொல்லிவிட்டதற்காக ஒரு தடவை அழுகிறான். அது தவிர்ந்த சந்தர்ப்பங்களில் தனது செயல்கள் எல்லாம் தனக்கான கடமை என்ற சிந்தனையும், கொல்லப்பட்ட நாயகியின் தம்பிகள் அப்பாவி மாணவர்கள் என்பதை விட அவர்கள் புலி பயங்கரவாதிகள் என்ற அவனது நம்பிக்கையும்தான் படத்தில் அதிகமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.  குற்றவுணர்வு என்ற நிலை எங்கும் காட்சிப்படுத்தப்படவில்லை. பாத்திர வடிவமைப்பு மற்றும் திரைக்கதையின் பாரிய குறைபாடு இது.

படத்தொகுப்பு - படத்தின் ஆரம்பத்தில் சில காட்சிகளும் வசனங்களும் திரும்ப திரும்ப இருதடவை வந்திருக்கும். இருவரும் வட்டிக்கடையில் சந்தித்துக்கொள்ளும் காட்சி அது. முதல் தடவை நாயகனின் பார்வையிலும், இரண்டாவது தடவை நாயகியின் பார்வையிலும் அந்த காட்சி சொல்லப்பட்டிருக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் இருவரின் பின்னணிகளையும் சொல்லுவதற்கு சிறந்ததொரு படத்தொகுப்பு உத்தியாக அது இருந்தபோதும், படத்தொகுப்பில் இருக்கும் பலவீனம் அந்த இடத்தில் பெரியதொரு காட்சி மயக்கத்தை உண்டுபண்ணுகிறது. 

அதேபோல ஒரு படத்தில் Blank Frames உபயோகிப்பது - ஒரு Frame இல் பாத்திரங்களின் Activity முடிவடைந்த பின்னரும் அந்த Frame தொடர்ந்துகொண்டிருக்கும் உத்தி இது. என்ன பிரச்சினை என்றால் அந்த ஃப்ரேம் ஏதோவொரு கதை சொல்லவேண்டும். படத்தின் நகர்வையோ, உணர்வு வெளிப்பாட்டையோ பிரதிபலிக்கவேண்டும். மிஸ்கின் இந்த உத்தியை கையாளுவதில் கில்லாடி. ஏன்... அஞ்சனம் என்ற நம்மூர் குறும்படம் ஒன்றில்கூட இந்த உத்தியை சிறப்பாக கையண்டிருப்பார்கள். மகன் தாயை கருணைக்கொலை செய்யும் காட்சியில் அந்த ஃப்ரேம் அட்டகாசமான உணர்வு வெளிப்பாடாக அமைந்திருக்கும். With you without வில் குப்பையாக இந்த உத்தி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. செய்திகளோ, உணர்வு வெளிப்பாடுகளோ இல்லாது வெற்று காட்சிகளாக, படத்தின் நகர்வை குலைத்தபடி செல்கிறது. 

படத்தில் நன்றாக இருக்கிறது என சொல்லக்கூடியது இரண்டே விடயங்கள்தான். ஒன்று கதை. இரண்டாவது நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலியின் நடிப்பு. மற்றும்படி தவறாக கொண்டாடப்பட்ட தட்டையான திரைப்படம் இது !

0 Comments:

Post a Comment

Blog Archive

Followers

Powered by Blogger.
Copyright © சிறகுகள் |