Wednesday, March 9, 2016

அழகியலும் வன்முறையும் - பிஞ்சு குறும்படத்தை முன்வைத்து

ஈழத்தமிழர்களிடம் சொல்வதற்கு ஆயிரம் கதைகள் உண்டு, ஆயிரம் சம்பவங்கள் உண்டு. அத்தனையையும் திரை மொழியினூடாக வெளிக்கொணரும்போது எமது மக்களின் வழ்வியலை, அவர்களின் பிரச்சினைகளை உலக அரங்கில் ஆழமாக முன்வைக்க முடியும். லெனின் எம் சிவத்தின் "A Gun and a Ring", சதா பிரணவனின் "God is Dead" மதிசுதாவின் தழும்பு, பிரேம் கதிரின் ஏதிலிகள் ஆகிய குறும்படங்களை உதாரணமாக சொல்லலாம். ஆனால் இந்த முயற்சியின் பின்னால் உள்ள ஆபத்து, நாம் எடுத்துக்கொள்ளும் கதைகளை என்ன வகையில் சொல்லப்போகிறோம் என்பதில்தான் தங்கியுள்ளது. தவறான திரைமொழியுடன் சொல்லப்படும் நல்ல கதை கூட பார்வையாளனிடத்தில் எமது வாழ்வியல் குறித்த பிழையான, ஆழமற்ற கருத்து நிலையினை உண்டாக்கிவிடும். 

மேற்கண்ட கருத்துக்கு, அண்மையில் வெளிவந்திருக்கும் "பிஞ்சு" குறும்படத்தை உதாரணமாக சொல்லமுடியும். அரசியல் பத்தி எழுத்தாளர் தீபச்செல்வனின் கதை மற்றும் திரைக்கதையிலும், தேவர் அண்ணாவின் இயக்கத்திலும் வெளிவந்திருக்கிறது பிஞ்சு. ஈழத்தில் போருக்கு பின்னரான காலப்பகுதியில் சிறுவர்கள் அனுபவித்த பிரச்சினைகளை மையமாக கொண்டிருக்கிறது இக்குறும்படம். 

போரில் தாய் தந்தையரை இழந்து, போர் மனதளவில் ஏற்படுத்திப்போன தாக்கங்களோடு, தன் அம்மம்மாவுடன் வசித்து வருகிறாள் ஒரு சிறுமி. மீள்குடியேற்ற பிரதேசம் ஒன்றில் வசித்து வரும் அவள் திடீர் என ஒருநாள் இராணுவத்தினரின் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறாள். பேத்தியின் கொலைக்கு நீதி வேண்ட் அம்மம்மாவால் இராணுவத்தின் மீது தொடுக்கப்பட்ட வழக்கும் தோல்வியடைகிறது.

போருக்கு பின்னரான காலப்பகுதியில் சிறுவர்களுக்கெதிராக அடிக்கடி நிகழும் வன்முறை சம்பவம் ஒன்றை குறும்படத்தினூடாக வெளிக்கொணர மேற்கொள்ளப்பட்ட முயற்சி சரியானதும், பாராட்டத்தக்கதும். ஆனால் அது திரைமொழியினூடாக சொல்லப்பட்ட விதத்தில் உள்ள குறைகளை கவனத்தில் எடுக்கவும் விமர்சனத்துக்கு உட்படுத்துவதும் அவசியமாகிறது.

முதலில், குறும்படம் எதைப்பற்றி பேசப்போகின்றது என்ற குழப்பம் இயக்குனருக்கு இருந்திருக்கவேண்டும். அந்த தெளிவின்மையே சொல்ல வந்த செய்தியை தவறான முறையில் பார்வையாளனிடம் முன்வைத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் கடந்த காலத்தை மிகவும் சோகத்திற்குரியதாக காட்ட எடுக்கப்பட்ட முயற்சியில், போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உளவியல் தாக்கம் தவறான முறையில் அடையாளப்படுத்தப்படுகிறது. வகுப்பறையில் ஓவியம் வரையும்போது குறித்த சிறுமி மாத்திரம் அவளின் மனதில் பதிந்துபோயுள்ள போரின் கொடுமைகளை வரைகிறாள். ஏனையவர்கள் காலைக்காட்சி, பூக்கள், பறவைகள் என விதவிதமாக, மிக மகிழ்ச்சியான மனநிலைக்குரிய ஓவியங்களை வரைகிறார்கள். அவள் மட்டுமே போரின் பாதிப்புகளை மனதில் கொண்டு, தான் வைத்தியராக வந்து போரில் காயமடையும் மக்களுக்கு மருத்துவம் பார்க்கவேண்டும் என்கிறாள். ஏனையவர்கள் அதுபற்றிய கவலைகள் அற்று எஞ்சினியராகவும், ஆசிரியராகவும் வரவேண்டும் என்கிறார்கள். இந்த கட்சிகள் எல்லாமே வன்புணர்வுக்குள்ளாகி கொலையுண்ட அந்த சிறுமியின் மீதான அனுதாபத்தை செயற்கையான முறையில் ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கில் அமைக்கப்பட்டிக்கலாம் எனினும்,இக் காட்சிகளின் பின்னால் உள்ள நுண்ணரசியல் என்பது, போருக்கு பின்னரான சிறுவர்களின் உளவியல் தாக்கம் என்னும் பாரியதொரு விளைவை குறுக்கியோ அல்லது தவறான முறையிலோ காட்சிப்படுத்த முனையும் செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது. இவ்விடத்தில் நுண்ணரசியல் என்பது இயக்குனராலோ, கதாசிரியராலோ திட்டமிட்ட முறையில்தான் நுழைக்கப்படவேண்டும் என்பதல்ல. மாறாக திரைக்கதையமைப்பில் உள்ள பலவீனங்களும் இத்தகைய கருத்து பிழைகளை உண்டாக்கிவிட வாய்ப்புண்டு.

குறும்படத்தின் காட்சிகள் இயல்பின்றி செயற்கைத்தனமாகவே நகர்கின்றது. கதை மற்றும் திரைக்கதை எழுதிய தீபச்செல்வனோ, குறும்படத்தை இயக்கிய தேவர் அண்ணாவோ போருக்கு பின்னரான காலப்பகுதியில் ஈழத்தில் இருக்கவில்லை, அம்மக்களின் வாழ்வியலை, பிரச்சினைகளை உற்றுநோக்கவில்லை என்பதும் செய்திகளின் வாயிலாக கேள்விப்பட்ட சம்பவங்களை வைத்து படமாக்கியிருக்கிறார்கள் என்பதும் அப்பட்டமாக தெரிகிறது. போர் முடிந்த பின்னரும் கூட இத்தனை இயல்பான மனநிலையுடன் சைக்கிளில் இரட்டை போட்டுக்கொண்டு கலகலப்பாக சுற்றும் இராணுவத்தை ஈழத்து மக்களே கண்டிருக்கமாட்டார்கள். சிறுமியை கடத்தி செல்லும் இடத்தில்கூட தமிழ் சினிமா பாணியிலான த்ரில்லர் முயற்சியை மேற்கொண்டதெல்லாம் அபத்தத்தின் உச்சம். ஒரு இயக்குனருக்குரிய அடிப்படை தகமை, தன்னை சுற்றியுள்ள சூழலில் நிகழும் சம்பவங்களை, மக்களின் வாழ்வியல் இயக்கங்களை உற்றுநோக்குதலும் அதிலிருந்து படைப்புக்கு தேவையான அம்சங்களை தெரிந்தெடுத்துக்கொள்ளலுமாகும். கதை என்பதற்கப்பால் இப்படியாக பெற்றுக்கொள்ளும் நிகழ்வுகள்தான் எப்படி ஒரு கதையை சொல்லவேண்டும் என்பதையோ, கதையின் இயல்பு நிலையையோ தீர்மாணிக்கிறது. போருக்கு பின்னரான மக்களின் வாழ்வியல் எப்படி இருக்கும், இராணுவத்துக்கும் மக்களுக்குமான உறவு எப்படிப்பட்டது, உளவியல் தாக்கங்களுக்குள்ளான சிறுவர்களின் செயல்கள் எத்தன்மையினதாக இருக்கும் என்பதெல்லாம் நன்றாக கவனிக்கப்பட்டிருப்பின் படத்திலும் சிறப்பாக சொல்லப்பட்டிருக்க வாய்ப்புண்டு.

தவிர, சினிமா என்பது காட்சி ஊடகம். அது தகவல் பெட்டகமாக இருக்கமுடியாது. அழகியல் என்ற ஒரு தன்மைதான் செய்தி என்பதற்கும் கதை என்பதற்கும் இடையில் நிற்கிறது.  தகவல்களை கதையாக்கி அக்கதையை காட்சி அழகியலினூடாகவே பார்வையாளனிடத்தில் ஊடுகடத்தவேண்டும்.  அந்த நுட்பத்தை முற்றிலுமாக இழந்திருக்கிறது "பிஞ்சு"

இறுதியாக, குறும்படம் சொல்ல வந்த செய்தி தவிர்த்து இயக்குனரிடம் கேட்கப்படவேண்டிய கேள்வி ஒன்று உள்ளது. சிறுமியின் வன்புணர்வு காட்சியினூடாக வெளிப்பட்ட அந்த வன்முறை மூலமாக நீங்கள் பார்வையாளனுக்கு சொல்ல விளையும் செய்தி என்னவாக இருக்கும்? இத்தகைய காட்சிகளில் வன்முறையின் விளைவுகளை சொல்வதுதான் அறமாக இருக்கும். மாறாக இத்தகைய வன்முறை காட்சிகள் பார்வையாளனுக்குள் ஓர் அசைகரியத்தை ஏற்படுத்தி அந்த காட்சியின் வீரியத்தை குறைத்துவிடலாம். அது மொத்த படைப்பின் நோக்கத்தைக்கூட சிதைத்துவிடலாம். இங்கேயும் அதுதான் நிகழ்ந்திருக்கிறது. பிஞ்சு குறும்படத்தின் மூலம் இயக்குனர் பேச முனைந்த விடயம் என்ன? சிறுவர்கள் மீதான துஷ்பிரயொகமா அல்லது போர் மூலமான சிறுவர்களின் உளவியல் தாக்கமா? இரு வேறு தளங்களை ஒரே படைப்பினூடாக தொட முனைந்தாலும் அதற்கேற்ற போதிய தரவுகளோ, காட்சிப்படுத்தல்களோ இல்லாமையால் படைப்பின் நோக்கம் குறித்த குழப்ப நிலை ஒன்றே உருவாகியிருக்கிறது.ஆக, எல்லா வகையிலும் தவறாக அடையாளப்படுத்தப்பட்ட ஒரு ஈழ படைப்பாகவே இக்குறும்படத்தை வகைப்படுத்தவேண்டியுள்ளது.

ஆக்காட்டி சஞ்சிகைக்காக
மதுரன் ரவீந்திரன்

0 Comments:

Post a Comment

Blog Archive

Followers

Powered by Blogger.
Copyright © சிறகுகள் |