Friday, January 6, 2012

வாத்தியார் பொண்ணுக்கு கலியாணமாம்!!

முன்குறிப்பு : இந்த சிறுகதை நான் பதினோராம் தரம் படிக்கும்போது ஒரு சிறுகதை போட்டிக்காக "வறுமையின் கோடுகள்” எனும் தலைப்பில் எழுதியது. அதிலும் காமடி என்னென்றா அந்த போட்டியில நான் மட்டும்தான் பங்குபற்றியிருக்கிறன் போல.... ஏனென்றா இந்த கதைக்குத்தான் மாவட்ட மட்டத்தில் முதலிடம்.. ஹி ஹி. பழைய பெட்டிகளை தட்டும்போது கிடைத்தது.. அப்பிடியே பதிவிட்டுட்டேன்........ 
---------------------------------------------------------------------------------------------------------------------
இன்று வழக்கின் இறுதி நாள். சுந்தரம்பிள்ளை மாஸ்டருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. குற்றவாளிக்கூண்டு அவருடைய நாற்பது வருடகால ஆசிரியப்பணியின் செல்வாக்கை, கௌரவத்தை விழுங்கிக்கொண்டிருந்தது. “குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கும் நிலையில் உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது மிஸ்டர் சுந்தரம்பிள்ளை. உங்கள் சார்பில் வாதாட யாரும் வக்கீல் உள்ளார்களா?

நீதிபதியின் ஒவ்வொரு சொற்களும் ஒவ்வொரு ஈட்டியாக அவரது காதுகளில் நுழைந்தது. பாவம்... அவர் என்ன செய்வார்! செய்யாத குற்றத்திற்காக அவர் தண்டனை அனுபவிக்கப்போகிறார். அவர் மனம் அவர் குடும்பத்தினரை எண்ணி கலங்கியது.  அவருடைய சிறு வருமானத்தை மட்டுமே நம்பி, சிறு வயதிலேயே தாயை இழந்த திருமண வயதை அடைந்த மூன்று பெண்பிள்ளைகள் .... நினைக்க நினைக்க சுந்தரம்பிள்ளை மாஸ்டருக்கு தலை சுற்றியது. “என் சார்பில் வாதாட யாரும்.......” சொல்ல வாயெடுத்தார் மாஸ்டர்..


“நான் இருக்கிறேன்...” சுந்தரம்பிள்ளை மாஸ்டருக்கு திடீர் அதிர்ச்சி. திரும்பி பார்த்தார். ஓர் இளம் வக்கீல் கம்பீரமாக நின்றுகொண்டிருந்தான். மாஸ்டருக்கு அவன் அப்போது வக்கீலாக தெரியவில்லை. தனக்கு வாழ்வு கொடுக்க வந்த தெய்வமாகவே அவனை நம்பினார். 
“கனம் நீதிபதி அவர்களே! குற்றவாளி என பழிசுமத்தப்பட்டிருக்கும் எனது கட்சிக்காரம் ஏதும் அறியாதவர்...............”

அவன்..!!?........ அவன்?!!......... சுந்தரம்பிள்ளை மாஸ்டருக்கு எங்கோ அவனை கண்ட ஞாபகம். மூளையை போட்டு குழப்பினார். அவன் யார்?.. எங்கே பார்த்தேம்?.........

திடீரென்று சுந்தரம்பிள்ளை மாஸ்டரின் முகத்தில் அதிர்ச்சியுடன் கூடிய பிரகாசம். “யதுகிரி..” அவனேதான். பூரிப்பால் அவர் உடலெல்லாம் பூரித்தது. மனம் குற்றவாளிக்கூண்டை விட்டு பதினைந்து வருடம் பின்னோக்கி பறக்க ஆரம்பித்தது.
                             *                      *                          *                        *                          *
”அம்மா.... அம்மா பசிக்குதம்மா.. ஏதாவது இருந்தா கொடும்மா....” இரண்டே வயதான அந்த குழந்தை தாயின் முகத்தை பார்த்து கெஞ்சியது. கிழிந்த ஓலைப்பாயில் சரிந்து கிடந்த பாக்கியம் தலையை சற்று திருப்பி எறும்பு மொய்த்து கிடந்த சிரட்டையை எடுத்து காறித்துப்பிவிட்டு கஷ்டப்பட்டு எழுந்து உட்கார்ந்தாள்.
“எங்க போட்டான் இந்த யதுகிரி.. இந்தாத்தான் வாறன் எண்டுட்டு போனான்.. இன்னும் காணேல்ல..” இதய நோயின் ரேகைகள் அவளுடைய முகத்தில் தென்பட்டன. அவள் என்ன செய்வாள்.. பாவம்.. இரண்டு நாட்களாக சாப்பிடுவதற்கு எதுவுமில்லை. அவள் தாங்குவாள்.. ஆனால் அந்த பிஞ்சுகள்?!.  அவளிடம் சொத்து என்று சொல்லிக்கொள்வதற்கு இருந்தது ஒரே ஒரு தோடுதான். அதைத்தான் விற்றுவரும்படி யதுகிரியை அனுப்பியிருந்தாள்.

அவளுடைய கவலையெல்லாவற்றையும் வடக்குப்பக்க சுவரில் தொங்கிக்கொண்டிருந்த அவளுடைய கணவனின் படம் ஆத்திரமாக மாற்றியது. “அறுவான்.. அறுவான்... குடும்பத்துக்கெண்டு என்னத்த செய்தான்..குடிகுடியெண்டு குடிச்சுப்போட்டு போய் துலைஞ்சிட்டான். பத்தாததுக்கு நால பெத்துப்போட்டு போயிட்டான்... க்கும்..க்கும்..” இருமல் அவளை மேலும் பேசவிடாது தடுத்தது. கண்ணீர் தாரை தாரையாகக் கொட்டியது. “யதுகிரியை இன்னும் காணல்ல.. போறவழியில எங்கயாச்சும் பள்ளிக்கூடத்த கண்டா வாய பிளந்துகொண்டு நிப்பான். நீ போய் கூட்டிக்கொண்டு வாடா கண்ணு” என தனது இரண்டாவது மகனை அனுப்பி வைத்தாள்.

அவள் ஒரு இதய நோயாளி. அவளுக்கு அதனால் எந்த கவலையும் இல்லை. அவளுக்கு இருக்கும் ஒரே பயம், அவள் இறந்துவிட்டால் பிள்ளைகள் என்ன செய்வார்கள் என்பதுதான். “பாவம் யதுகிரி.. நல்லா படிச்சது.. எங்கட கஷ்டத்தால அந்த பெடியும் படிப்ப கைவிடவேண்டியதா போச்சு...என்ன செய்யிறது?.. எல்லாம் அவன் விட்ட வழி” என பெருமூச்சுடன் எல்லா பழியையும் ஆண்டவன் மேல் போட்டுவிட்டாள்.

“அம்மா.. அம்மா...” கூப்பிட்டுக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தான் யதுகிரி. அவனுடைய கைகளில் சமையலுக்கு தேவையான பொருட்கள் இருந்தன

                          *                                        *                                           *
பாடசாலையில் ஆறாம் தரத்தில் பாடங்கள் நடந்துகொண்டிருந்தது. வகுப்பாசிரியர் சுந்தரம்பிள்ளை மாஸ்டருக்கு சில நாட்களாகவே மனதில் ஒரு உறுத்தல். காரணம், எப்போதும் வகுப்பில் முதலாம் பிள்ளையாக வரும் யதுகிரி பல நாட்களாக பாடசாலைக்கு வருவதில்லை. மனதை குடைந்த கேள்வியை இன்று எப்படியாவது சக மாணவர்களிடம் கேட்டுவிடவேண்டும் என்று முடிவு செய்தார்.

“யார் யதுகிரி வீட்டிற்கு பக்கத்தில இருக்கிறது?
“நான் தான் சேர்” என்று எழுந்தான் ஒரு மாணவன்.
“ஏன் யதுகிரி வாறேல்ல?
“அவங்கட வீட்டில கஷ்டமாம் சேர்.. அவந்தான் வீட்டுவேலையள் செய்யிறவனாம்....”

அம்மாணவனின் மூலம் உண்மையை அறிந்துகொண்ட சுந்தரம்பிள்ளை மாஸ்டருக்கு மனம் முழுவதும் கவலை. ஆண்டவன் மேல் ஆத்திரம். “ஏன் தான் அவன் இப்பிடி பண்ணுறானோ!! நல்லவங்களுக்கு காலமே இல்லையா?”

அன்று முழுவதும் அவர் அதை பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தார். இரவு முழுவதும் நித்திரை இல்லை.புரண்டு புரண்டு படுத்தார். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தார். “ என்ன ஆனாலும் பரவாயில்லை. யதுகிரியை நான் படிப்பிக்கத்தான் போறன்” என்றவாறு நித்திரையாகிவிட்டார்.

மறுநாள் அதிகாலை யதுகிரி வீட்டுவேலைகளை செய்துவிட்டு வேலைக்கு செல்ல ஆயத்தமாகிக்கொண்டிருந்தான். படலையில் யாரோ கூப்பிடும் சத்தம். வீட்டுக்குள் இருந்தவாறே எட்டிப்பார்த்தான். படலையடியில் சுந்தரம்பிள்ளை மாஸ்டர் நின்றுகொண்டிருந்தார். ஓடிப்போய் அவரை உள்ளே அழைத்து வந்தான். ஒரு பாயை விரித்து அதில் அவரை உட்கார வைத்தான். சுந்தரம்பிள்ளை மாஸ்டர் வீட்டை ஒரு நோட்டம் விட்டார். கூரையில் ஆங்காங்கே ஓட்டைகள் தென்பட்டன. வீட்டின் ஓர் ஓரத்தில் நோயால் எலும்பிக்கூடாகிவிட்ட அவனது தாய், கந்தலாகிய அரைகுறை ஆடைகளுடன் அவனது தம்பிமார்களின் விலா எலும்புகளில் குடும்பத்தின் வறுமை தெரிந்தது. மாஸ்டரின் கண்களில் கண்ணீர்.

”யதுகிரி நான் உன்ன படிப்பிக்கிறன். நீ இனி பள்ளிக்கூடம் வா..” என்றார் மாஸ்டர்.
“இல்ல சேர்.................. நான் படிக்கல்ல சேர்...”
“ஏன் யதுகிரி “ ஏன் மாட்டன் என்கிறாய்?
”சேர்.. எமக்கும் படிக்க ஆசைதான்.. ஆனா!!” அவனுடைய கண்களில் தெரிந்த ஏக்கத்தை கவனித்தபடி “ஆனா?!! .... என்ன சொல்லு யதுகிரி” என்றார் மாஸ்டர்.

“சேர். நான் உழைக்கிறதிலதான் அரவயிறு கால்வயிறு என்று சாப்பிட்டுக்கொண்டிருக்கிறம்.. நான் படிக்க வந்திட்டா குடும்பத்த யார் பார்க்கிறது? அம்மாவுக்கும் மருந்துகள் வாங்கனும்... இதுக்கெல்லாம் பணத்துக்கு எங்க சேர் போறது? சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவனுடைய கண்களில் கண்ணீர்.

சிறிது நேரம் யோசித்த சுந்தரம்பிள்ளை மாஸ்டர் தீர்க்கமாக சொன்னார் “இல்ல யதுகிரி.. நீ படிக்கத்தான் வேண்டும்... உன்ர படிப்பு செலவ மட்டுமில்ல, குடும்பச்செலவையும் நானே ஏற்கிறேன்” என்று கூறிக்கொண்டே மாஸ்டர் எழுந்தார்..
                      *                             *                                  *                                      *

நீதிமன்றில் வழக்கு முடியும் நேரம். தீர்ப்பு வழங்கப்பட்டது...... சுந்தரம்பிள்ளை மாஸ்டர் மீதான குற்றம் செல்லுபடியாகாது என்று நீதிபதி தீர்ப்பு வழங்கிவிட்டார்.

கூண்டிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த யதுகிரி திடீரென்று அவரது பாதங்களில் விழுந்து வணங்கினான். உடனே மாஸ்டர் அவனை தூக்கினார். அவனுடைய கைகளை பற்றியவாறே, “ யதுகிரி உனக்கு நான் எப்பிடி நன்றி சொல்லுறதென்றே தெரியல்ல” அவரது கண்களில் கண்ணீர். ஆனந்த கண்ணீர். தன்னால் வளர்க்கப்பட்ட ஒரு மாணவன் உயர்நிலை அடைந்து இன்று தன்னுடைய கௌரவத்தை காப்பாற்றியிருக்கிறான்.

“என்ன சேர் இதெல்லாம்? எனக்கு எதுக்கு சேர் நன்றியெல்லாம் சொல்லுறிங்க... உண்மையிலே நான் தான் சேர் உங்களுக்கு நன்றி சொல்லனும். நான் இன்றைக்கு இந்த நிலமையில இருக்கிறதுக்கி காரணமே நீங்கதான் சேர்.. ஏழேழு பிறவி எடுத்தாலும் இந்த கடனை அடைக்க முடியாது சேர்” என்று கூறிவிட்டு அவரையும் தன் காரில் ஏற்றிக்கொண்டு அவருடைய வீடு நோக்கி சென்றான்.

போகும் வழியில் அவருடைய குடும்பநிலை பற்றி விசாரித்தான். வறுமையின் காரணமாக அவருடைய பெண்பிள்ளைகளுக்கு திருமணமாகாமக் இருப்பதை அறிந்துகொண்டான்.
“ இந்தா.... இதுதானப்பா என்ர வீடு.... கார நிப்பாட்டு” என்றார் மாஸ்டர். மாஸ்டருடைய கண்டிப்பான வேண்டுகோளால் வீட்டிற்கு சென்று தேநீ குடித்துவிட்டு எழுந்தான். “அப்ப நான் போயிட்டு வாறன் சேர்” எழுந்து வந்தவனின் மனதில் கடுமையான சிந்தனை. படலை வரை வழியனுப்ப வந்த சுந்தரம்பிள்ளை மாஸ்டரை திரும்பி பார்த்தான்.
“மாஸ்டர்............... உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றா.............................”
தயங்கிய யதுகிரியை ஆச்சரியமாக பார்த்த மாஸ்டர் “என்னப்பா.. ஏதாவது உதவி வேண்டுமா? என்ன என்றாலும் தயங்காம கேள்” என்றார். “இல்ல சேர்... உங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றா உங்க மகள நான் கல்யாணம் பண்ணலாமா சேர்?
திடீர் என்று அவன் கேட்டபோது சுந்தரம்பிள்ளை மாஸ்டர் ஒருகணம்  சந்தோசத்தால் அதிர்ந்துபோனார். என்ன சொல்வது என்று ஒரு கணம் யோசித்தவர், “ சரிப்பா.. நான் நாளைக்கே வந்து உன்ர அம்மாவோட கதைக்கிறன்.” என்றார்.

”அதுக்கு அவசியம் இல்லை சேர்.. நான் தான் இப்ப குடும்ப தலைவன்......”

“ஏன்!!.. அம்மாவுக்கு என்னாச்சு.. அவ இப்ப எங்க...” சுந்தரம் மாஸ்டர் படபடப்புடன் கேட்டார்.

“அம்மா இறந்து மூன்று வருசமாச்சு...”

“அவ... அவ.......... இறந்திட்டாவா..!!?

நான்கு கண்கள் கண்ணீர் சிந்த தயாராகின....................

                                                                        (முற்றும்)

பின்குறிப்பு : நண்பர்களுக்கு ஒரு செய்தி. அதாவது நான் புதிய தளம் ஒன்றை ஆரம்பித்துள்ளேன். தொழில்நுட்ப பதிவுகளுக்கான தளம். உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன். யாரும் பயப்படவேண்டாம். ஓட்டு, பின்னூட்டம் எதுவுமே அங்கு தேவையில்லை. ஓட்டுபட்டைகளே வைக்கவில்லை. 


இணைப்பு..  thamilsoft

13 comments:

 1. வணக்கம் மதுரன்!அருமையான நன்றி பாராட்டும் கதை.அந்த வயதிலேயே பொறுப்பான ஒரு கதை எழுதி( நீங்கள் மட்டும் போட்டியிட்டிருப்பினும்)பரிசு பெற்றிருக்கிறீர்கள்.நல வாழ்த்துக்கள் உங்களுக்கு!!!!!

  ReplyDelete
 2. மது.... மனசை ரெம்ப டச் பண்ணிட்டீங்க :)

  கதை ரெம்ப நல்லா இருக்கு.... யதுகிரி மனசிலேயே நிக்குறான்... ஆவலாய் படித்துக்கொண்டு வந்தேன்.... சட்டென முடிந்த பீல்.... ஹீ ஹீ அதுதான் சிறுகதையோ!!! :(

  இதுக்கு முதல் பரிசு கிடைத்ததில் ஆச்சரியமே இல்லைப்பா.... :)

  ReplyDelete
 3. நல்ல கதை. ஆனாலும் உங்களுக்கு தன்னடக்கம் அதிகம். நீங்கள் ஒருவர் மற்றும் பங்கேற்றிருப்பீர்கள் என்பதெல்லாம் ஓவர். பரிசுக்குரிய கதைதான்.

  ReplyDelete
 4. மிகவும் அருமையான கதை மது! நீங்கள் படிக்கும் காலத்தில் எழுதியதா? ரொம்ப ஆச்சரியமா இருக்கு!

  பரிசுபெறத் தகுதியுள்ள கதைதான்! :-)

  ReplyDelete
 5. வணக்கம் மது,

  வறுமையின் பிடியிலிருக்கும் குடும்பத்தை தன்னால் இயன்ற பங்களிப்பின் மூலம் முன்னேற்றிய மாஸ்டரைப் பற்றியும், அந்த நன்றிக் கடனை நீதிமன்றத்திலும், தன் நல் மனதினூடாகவும் காட்டிய மாணவனைப் பற்றியும் சொல்லும் அருமையான வாழ்வியல் கதையினைக் கொடுத்திருக்கிறீங்க.

  இந்த கதை அமைந்துள்ள நடையினைப் படித்து மிகவும் ரசித்தேன். சின்ன வயதில் அநேகமாக எல்லோரும் இது போன்றதோர் நடையில் தான் கதைகளை எழுதுவோம் ஹே...ஹே....

  ReplyDelete
 6. வணக்கம் துஷி,

  உண்மையிலேயே அந்த வயதிலேயே உங்கள் எழுத்துக்கள் ஆளுமை நிறைந்ததாக இருக்கிறதே.. பிரமிக்கிறது. மணி சொன்னதுபோல பரிசிற்குரிய கதைதான். வாழ்த்துக்கள் துஷி.

  ReplyDelete
 7. வறுமையை சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்.புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 8. வொய் திஸ் கொலை வெறி அமல்..??!!
  அவ்வ்வ்வ்.............. -:(

  ReplyDelete
 9. அப்பவே கதை எல்லாம் எழுதி மாவட்ட மட்டத்தில் எல்லாம் பரிசு வாங்கி இருக்க்றீங்க. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. பரந்த வானில் வெகு கம்பீரமாக சிறகு விரிக்கும் இந்தப் பறவைக்கு வணக்கமும் வாழ்த்துக்களும்.

  கதை மிக அருமை.சின்ன வயதில் அதை எழுதி இருக்கிறீர்கள் என்பதும் கதைக்கருவும் காட்சிப்படுத்தலும் இன்னொமொரு அழகு.

  மனமார்ந்த வாழ்த்துக்கள் மதுரன்.

  ReplyDelete
 11. பதினோராம் தரத்தில் படிக்கும்போது எழுதியது என்று நம்பமுடியவில்லை' அதாவது அவ்வழவு அழகானநடை.

  இப்போது இன்னும் நல்லதாக எழுதமுடியும். ஆரம்பியுங்கள்.

  ReplyDelete
 12. ஏன் நான்மட்டும் தான் பங்குபற்றியிருப்பன் போல... என்ற சந்தேகம்? 11 ம் கிளாசிலை எழுதின கதை நல்லாத்தான் இருக்கு. வளரும் பயிர் முளையிலை தெரியும் என்பது சரியாத்தான் இருக்கு.

  ReplyDelete
 13. மிகமிக அழகான கதை வாழ்த்துகள்.

  ReplyDelete

Blog Archive

Followers

Powered by Blogger.
Copyright © சிறகுகள் |