Wednesday, March 4, 2015

குமரி நிலநீட்சி - சு.கி.ஜெயகரன்

தமிழர்களுக்கு என்று ஒரு பொதுப்பண்பு இருக்கிறது. இனம், மொழி சார்ந்த வரலாறுகளை மிகைப்படுத்தப்பட்ட பெருமைகள் மூலம் உணர்ச்சிபூர்வமாக அணுகுதலே அப்பண்பு. இதற்கான காரணத்தை பற்றி குமரி நிலநீட்சி நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள எஸ்.வி.ராஜதுரை குறிப்பிடுகையில், “தங்களது பண்பாட்டு அடையாளமும் வரலாற்று மரபும் மறுக்கப்படும் எந்தவொரு மக்களும், அவற்றை மீட்டெடுக்கவும் வலியுறுத்தவும் முயல்கையில் தம்மைக்குறித்த மிகைக் கற்பனைகளையும் கட்டுக்கதைகளையும் உருவாக்கிக் கொள்வதை காண்கிறோம்” என்கிறார். நிச்சயமான உண்மை அது. மக்களின் இத்தகைய நிலையை ஐரோப்பிய காலனித்துவ ஆட்சி பயன்படுத்திக்கொள்ள,  இன்றைய கருனாநிதி வரை தொடர்ந்து வந்த அரசியல்வாதிகளும் தமது உசுப்பேற்றல் அரசியலுக்கு பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு பிரித்தாளுகை, உசுப்பேற்றுதல் அரசியல் தேவைக்காக உருவாக்கி பெருப்பிக்கப்பட்ட கருத்தாக்கமே இந்த லெமூரியா எனப்படும் குமரிக்கண்டம்.

இந்த குமரிக்கண்டம் என்ற கருத்தாக்கம் எப்படி தோற்றம் பெற்றது என்று ஆராயப்போனால், அங்கு இரண்டு நபர்கள் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். ஏர்ன்ஸ்ட் ஹிக்கல் என்பவர் டார்வினின் கூர்ப்புக்கொள்கையை கொண்டு ஒரு ஊகத்தை வெளியிடுகிறார். அது என்னவென்றால் “குரங்கிலிருந்து வந்தவன் மனிதன். குரங்கிற்கும் மனிதனுக்கும் இடையிலான வித்தியாசம் “பேச்சு”. அப்படியாயின் இந்த இரண்டு உயிரினங்களுக்கிமிடையில் பேச்சற்ற மனிதக்குரங்கு ஒன்று இருந்திருக்கவேண்டும்” என்பதே அது. தனது ஊகத்தை உண்மை என்று நிரூபிக்க அந்த உயிரினத்துக்கு பித்தகேந்த்ரோபஸ் என பெயரிட்டு, அந்த உயிரினத்தின் வரைபடங்கள் என தன் கற்பனைகளை வடிவங்களாக்கி வெளியிடுகிறார் ஹிக்கல். இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்த உயிரினங்கள் அழிந்துபோன கண்டம் ஒன்றில் வாழ்தவை என புளுகுமூட்டையை அளந்துவிடுகிறார். இறுதியில் பத்திரிகையாளர்களிடம் மாட்டுப்பட்டு தன் குளறுபடிகளை ஒத்துக்கொள்கிறார். அவர் ஒத்துக்கொண்டாலும் அவரை அறிவியல் மேதை என நம்பும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்தது.

அவரது தொடர்ச்சியாக ஃப்லிப் ஸ்க்லேடர் என்பவர் இந்தியாவையும் மடகஸ்காரையும் இணைத்து இந்துசமுத்திரத்தில் இருந்திருக்கக்கூடும் என கருதப்பட்ட நிலப்பாலத்துக்கு “லெமூரியா” என்று பெயரிடுகிறார். குமரிக்கண்டத்துக்கான முதல் அஸ்திவாரம் இங்கேதான் இடப்படுகிறது. இருவரது கருத்துகோள்களும் பிற்கால அறிவியலால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. இந்த இரண்டு சம்பவங்களை தொடர்ந்து ரஷ்ய பெண்மணி ஒருவரால் ஆரம்பிக்கப்பட்ட பிரம்மஞான சபை (Theosophical Society) இந்த விடயத்துக்குள் நுழைந்துகொள்கிறது. இன்று குமரிக்கண்ட ஆதரவாளர்கள் மேற்கோள் காட்டும் பல ஆதாரங்களை இந்த பிரம்மஞான சபையின் உறுப்பினர்களே எழுதியிருக்கிறார்கள். தாங்கள் குறிப்பிடும் தகவல்கள் தமக்கு உள்ளுணர்வு மூலம் கிடைத்தவை என்று இந்த ஆராய்ச்சியாளர்கள்(?!!) குறிப்பிட்டுக்கொள்கிறார்கள். இன்றைய முருகன், அல்லாவின் பேரன்களுக்கும் இந்த ஆராய்ச்சியாளர்களுக்கும் என்ன வித்தியாசம் என்று தெரியவில்லை :P இவர்களது கூற்றுப்படி, ”லெமூரியாவில் மூன்றாவது பரிணாமம் முட்டை போட்டு குஞ்சு பொரித்தது, நான்காவது பரிணாமம் விலங்குகளோடு உறவுகொண்டு வாலில்லா குரங்கு போன்ர விலங்குகளை படைத்தது. ஐந்தாவது பரிமாணமே அட்லாண்டிசியில் தோன்றிய ஆரிய இனம்” என்கிறார்கள். அதாவது ஆரியர்களே மேம்பட்டவர்கள் என நிரூபிக்கும் முயற்சி. அதேபோல பிரம்மஞான சபையை சேர்ந்த ஸ்காட் எலியட் என்பவர் தரும் உள்ளுணர்வு ஆதார கூற்றுக்களை பாருங்கள்.

“லெமூரியாவை சேர்ந்த மனிதர்கள் நொங்கு போன்ற நெகிழ்வான உடலமைப்பை கொண்டவர்கள். நெற்றியில் மூன்றாவது கண்ணையும் கொண்டிருந்தார்கள்” 

இந்தமாதிரியான இவர்களுடைய பின்னணிகள் மறக்கப்பட்டு “இன்னார் சொன்னார், இன்னார் சொன்னார் என்று திரும்ப திரும்ப ஒரே பொய் தமிழ் அறிஞர்களால் எழுதப்பட.. கடைசியில் அதுவே உண்மை என்றாகிப்போனது. ஆக, மேற்குலகத்தால் இந்துசமுத்திரத்தில் உருவாக்கப்பட்ட லெமூரியா கண்டம் என்ற கருத்தாக்கத்தை, பண்டைய தமிழ் இலக்கியங்களில் இருக்கக்கூடிய குமரி நிலம் பற்றிய குறிப்புகள், கடற்கோள் பற்றிய குறிப்புகளுடன் அரைகுறையாக இணைக்கப்பட்டு “குமரிக்கண்டம்” என்ற  ஆதாரமற்ற வரலாறு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது.

குமரி நிலநீட்சி புத்தகத்தில் சொல்லப்படுகின்ற விடயங்களின் சாரம் இதுதான். நான் மேலே குறிப்பிட்டுள்ள விசயங்கள் புத்தகத்தில் மிக விரிவாக அலசப்பட்டுள்ளன. ”இன்னார் சொன்னார்” வகையறா கருத்துக்களை தவிர்த்து குமரிக்கண்ட கோட்பாடை மிக ஆதாரபூர்வமாக அணுகுகிறது இந்த புத்தகம். சிந்துவெளி, எகிப்திய நாகரிகங்கள் கூட குமரிக்கண்ட அழிவிலிருந்து தப்பி சென்ற தமிழரின் மூதாதையரினால் கட்டமைக்கப்பட்டவையே என்ற அதீத கற்பனைவாதங்கள் ஆதாரபூர்வமாக நொருக்கப்படுகின்றன. என் அறிவுக்கு உட்பட்டு மூன்று அத்தியாயங்களாக இந்த புத்தகத்தை பிரிக்கலாம். அதன்படி முதலாவது அத்தியாயம் எமது பழந்தமிழ் இலக்கியங்களூடாக குமரிக்கண்ட ஆதாரங்களை தேடி நகர்கிறது. இலக்கியங்களில் கிடைத்த குறிப்புக்களின் அடிப்படையில் அன்றைய நிலவமைப்பு எப்படியானதாக இருந்திருக்கும்,  குமரிநிலம் என்னும் சொல் என்ன அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது, இலக்கியங்களில் வரும் பிரதேசங்கள் இப்போ எங்கே, கடற்கோள்கள் பற்றிய உலக இலக்கிய குறிப்புகள் போன்ற விடயங்கள் அலசப்படுகிறது. இரண்டாவது வரலாற்றினூடாக குமரிக்கண்டத்தை தேடுகிறது. மனிதனின் பிறப்பிலிருந்து மனித பரம்பல், குடியேற்றங்கள், கண்டங்களை கண்டடைதல், அப்போது ஏற்பட்ட இடறுகள், கடற்கோள்கள், அனர்த்தங்கள் போன்றவை அலசப்படுகின்றன. மூன்றாவது அத்தியாயமாக புவியியல் சார்ந்து தேடல் தொடர்கிறது. புவியின் தோற்றம், பனியுகம் ( Ice age), கண்டநகர்வுகள், கடல்மட்ட உயர்வுகள், உலக வரைபடங்கள் போன்றன அலசப்படுகின்றன.

இது ஒரு குமரிக்கண்டம் குறித்த புத்தகம் என்பதை விட வரலாறு, புவியியல் சார்ந்த பயணம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அந்தளவிற்கு ஏகப்பட்ட விசயங்கள் நிறைந்திருக்கின்றன.  குமரிக்கண்டம் என்று மேலோட்டமாக இழுத்துச்செல்லாமல் ஒவ்வொரு தகவல்களையும் ஆழமாக, ஆரம்பத்தில் இருந்தே தெளிவுபடுத்துவதால் நிறைய தகவல்கள் நமக்கு கிடைக்கிறது. முக்கியமாக புவியின் வரலாறு, ஆதிக்குடியேற்றங்கள், நாகரிக வளர்ச்சிகள் குறித்த துல்லியமான தரவுகளை புத்தகம் நமக்கு தருகிறது.

புத்தகத்தை படித்துவிட்டு சில விமர்சனங்களையும் படித்து பார்த்தேன். அவற்றில் குறிப்பிட்டு சொல்லத்தக்கது குமரிமைந்தன் எழுதிய விமர்சனம். குமரிமைந்தன் என்பவர் “குமரிக்கண்டத்தார் எம் மூதாதையர்கள் மட்டுமல்ல,  அறிவியல் வல்லுனர்கள், விமானத்தை பயன்படுத்தியவர்கள், விண்வெளி பயணம் செய்தவர்கள், உலகின் ஏனைய மக்களால் கடவுள்களாக வணங்கப்பட்டவர்கள்” போன்ற புனைவுகளுக்கு சொந்தக்காரர். தற்போது இருக்கும் குமரிக்கண்ட ஆதரவாளர்களுள் முக்கியமானவராக கருதப்படுபவர். இவரது விமர்சனத்தோடு, ஏனைய ஆதரவாளர்களினதும் விமர்சனம் எந்தவித அறிவியல் ஆதாரங்களையும் கொண்டிராமல், வெறுமனே பண்டைய இலக்கியங்களில் இருந்து திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்களையும், ஜெயகரன் மீதான வசவுகளையும் கொண்டிருப்பதை அவதானிக்கலாம்

இது கண்டிப்பாக அனைவரும் படிக்கவேண்டிய ஒரு புத்தகம். தவறவிடாதீர்கள். இலக்கியம், வரலாறு, புவியியல் துறைகளில் அடிப்படை அறிவு இருந்தால்  புத்தகம் மேலும் சுவாரசியமாக இருக்கும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை.

2 comments:

  1. இது ரொம்பவே வியக்க வைகின்றது.....

    ReplyDelete
  2. "குமரிமைந்தன் படைப்புகள்" என்ற எனது வலைப்பக்கத்தில் "குமரிக் கண்ட அரசியல்" என்ற துணை இடுகையைக் காண்க. மின்னஞ்சல் kumarimainthan@gmail.com

    ReplyDelete

Blog Archive

Followers

Powered by Blogger.
Copyright © சிறகுகள் |