Saturday, March 21, 2015

”நிலவில் ஒருவன்” - ராஜ்சிவா !

விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவே அறிவியல் எழுத்தாளர்களை கொண்டது தமிழ்மொழி. அவர்களுள் முதன்மையானவர் ராஜ்சிவா தான் என்பது ஒரு சாமானிய வாசகனான எனது கருத்து. அறிவியல் தகவல்கள் அவ்வளவாக அண்டாதிருந்த தமிழ் வாசகப்பரப்பை தனது இலகு தமிழிலான விளக்கங்கள் மூலம் ஆக்கிரமித்துக்கொண்டவர் ராஜ்சிவா. ஹிக்ஸ் போசான், அண்டம், குவாண்டம், கருந்துளைகள், பயிர்வட்டம், பறக்கும்தட்டு, மாயன்கள் என்று நாம் மலைத்து பார்த்த சொற்களை எல்லாம், தினமும் அசால்டாக உபயோகிக்கும் அளவுக்கு நம்மிடையே புழக்கத்தில் கொண்டுவந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. அதுதான் அவரது வெற்றி. இதை எந்தவிதமான பெருமைப்படுத்தல்  நோக்கத்திலும் சொல்லவில்லை. இதுதான் உண்மை. எனக்கும் சரி, தற்போது அறிவில ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் சரி,  வழிகாட்டி ராஜ்சிவா அண்ணன் தான்.

அறிவியலை கையில் எடுத்துக்கொள்ளும்போது ஒரு சிக்கல் இருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகால மத, மனித நம்பிக்கைகளை அறிவியல் கருத்துக்கள் நிச்சயம் கேள்விக்குட்படுத்தும். அறிவியல் எதையுமே 100% ஆதாரம் இல்லாது ஏற்றுக்கொள்ளாது இல்லையா? அதனால் வெறும் நம்பிக்கைகள் மூலமே தொடர்ந்து வரும் மத கருத்துக்களை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்ளும்? அறிவியலின் கேள்விகளில் பல நம்பிக்கைகள் நிச்சயம் ஆட்டம் காணும். நாம் தீவிரமாக நம்பிய ஒரு கருத்து இலகுவாக உடைபடும்போது அதை உடனடியாக ஏற்றுக்கொள்ள மனித மனம் இடம் தராது. அதனால அறிவியலையும், அறிவியலாளர்களையும் எதிர்க்க ஆரம்பிப்பார்கள் ஒரு பகுதி மக்கள்.  இது நாம் எல்லோருமே வழமையாக கண்டுவரும் அனுபவம்தான். ஆனால் இந்த வழமையை மெதுவாக கையாள்கிறார் ராஜ்சிவா. தொடர்ந்து ராஜ்சிவாவின் எழுத்துக்களை படித்துவருகிறேன். எந்த இடத்திலும் யாரையும் காயப்படுத்தி எழுதியது இல்லை. இவையெல்லாவற்றையும் விட இவரது வெற்றிக்கு இன்னுமோர் காரணம் இருக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள் பலரிடையே இல்லாத பழக்கம் அது. “எளிமை”. எழுத்தாளன் வாசகன் என்ற உறவை கடந்து ஒரு சகோதரனை போலவே எல்லோருடனும் பழகும் அவரது தனிப்பட்ட குணமும் ஒரு சக்சஸ்தான். புத்தகத்தை பற்றி எழுத வந்துவிட்டு எழுத்தாளனை பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்தளவிற்கு ராஜ்சிவா அண்ணனை பிடித்திருக்கிறது :)


எப்போது அழியும் இந்த உலகம், இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன என்ற இரு நூல்களுக்கு பின்னர் கடந்த சென்னை புத்தக கண்காட்சியில் மேலும் இரு புத்தகங்களை வெளியிட்டிருந்தார் ராஜ்சிவா அண்ணா. அதில் ஒன்றான “நிலவில் ஒருவன்” என்ற கட்டுரை தொகுப்பு பற்றிய பதிவே இது. மொத்தமாக பதின்மூன்று கட்டுரைகள் இந்த தொகுப்பில் இடம்பிடித்திருக்கின்றன. உயிர்மை வாசகர்கள் ஏற்கனவே இவற்றை படித்திருக்கலாம். ஆனாலும் அவற்றை புத்தகமாக கொண்டுவந்தது அறிவியல் ஆர்வலர்களுக்கு ஒரு வரம்தான்.

நாம் நம்பிக்கொண்டிருப்பதன் படிதான் இந்த உலகமும், அரசுகளும் இயங்கிக்கொண்டிருக்கின்றன, செய்திகளின் மூலம் நாம் உண்மைகள் எல்லாவற்றையுமே அறிந்துகொள்கிறோம் என்ற கருத்தில் நீங்கள் உறுதியாக இருக்கிறீர்களா ? அப்படியானால் அதிகாரவர்க்கத்தால் முட்டாளாக்கப்பட்டவர்கள் வரிசையில் நீங்கள் முன்னணியில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்கு இந்த புத்தகம் வாசிப்பு தேவையாக அல்லாமல் அடிப்படை தேவையாக இருக்கிறது. உடனடியாக வாங்கி படியுங்கள். பதின்மூன்று கட்டுரைகளுமே மிகப்பெறுமதியானவை.

இந்த கட்டுரைகள் எதைப்பற்றி பேசுகின்றன...

உலகையே முட்டாளாக்கிய ஒருவன்

இரண்டாம் உலகப்போர்... ஹிட்லர்... இவை உலகமக்களை பொறுத்தவரை ஒரு கசப்பான நினைவுகள்தான். இரண்டாம் உலகப்போரையும் ஹிட்லரையும் மன்னிக்க எந்த மக்களும் தயாராக இல்லை. ஆனால் அறிவியல் ஆர்வலர்களை பொறுத்தவரை இந்த சொற்களில் இருக்கும் கசப்புணர்வோடு சேர்த்து பல மர்மங்களும் அவர்களை குடைந்துவருகின்றன. இரண்டாம் உலகப்போரில் ஜேர்மனி உபயோகித்த தொழில்நுட்பங்கள் அதுவரையிலான உலகம் கண்டறியாதது. அவர்களுக்கு எங்கிருந்து அத்தகைய தொழில்நுட்பங்கள் கிடைத்தன என்பது விடைதெரியாத கேள்வி. இரண்டாம் உலகயுத்தம் ஆரம்பிப்பதற்கு சரியாக மூன்று வருடங்களுக்கு முன்னர் (1936) ஜேர்மனியின் Freiburg என்னுமிடத்தில் ஒரு வேற்றுக்கிரகவாசிகளின் பறக்கும்தட்டு விபத்துக்குள்ளானது என்றும், அதை கைப்பற்றிய ஜேர்மன் படைகள் Haunebu project என்ற ஒரு ரகசிய ஆராய்ச்சியை மேற்கொண்டதாகவும் பல தகவல்கள் உலாவுகின்றன. இந்த ஆராய்ச்சி கூடத்தில் காலப்பயணம் தொடர்பான ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்பது பலரது கணிப்பு. (இதுபற்றிய ஏராளமான தகவல்கள் இணையத்தில் கொட்டி கிடக்கின்றன. தேட கஷ்டப்படுபவர்கள் History Channel இன் In Search of Aliens தொடரின் இரண்டாம் எபிஷோடை பாருங்கள்).

இவையெல்லாமே அதிர்ச்சியடையவைக்கும் மர்மங்களாக இருக்கையில் இவற்றுக்கெல்லாம் கிரீடம் வைத்தது போன்ற மர்மம் ஒன்றும் உண்டு. அதுதான் ஹிட்லரின் மரணம். ஹிட்லரின் மரணம் குறித்த சரியான தகவல்கள் எதுவும் இதுவரை மக்களுக்கு வழங்கப்படவில்லை என்பதுதான் உண்மை. அரசுகளினால் பூசிமொழுகப்பட்ட தகவல்களே மக்களை சென்றடைந்திருக்கின்றன. ஆனால் உண்மை வேறாக இருக்கிறது. ஹிட்லர் இறக்கவில்லை என்பது ஒரு யூகமாக மட்டுமே இருக்கையில், அமெரிக்க, ரஷ்ய அரசுகளின் இருட்டடிப்புக்கள் அந்த யூகத்தை உண்மை என நம்பும் வகையில் அமைந்திருக்கின்றன. ஜேர்மனியின் வீழ்ச்சிக்காலத்தில் நடந்த உண்மைகள், ஹிட்லரோடு கூட இருந்தவர்களின் தகவல்கள், அதன் பின் நடந்த ஆராய்ச்சிகள், ஹிட்லர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர் வேறு ஓர் நாட்டில் அவனை கண்டதாக சொன்னவர்களின் தகவல்கள் என ஹிட்லர் உயிரோடு இருந்திருக்கக்கூடியதற்கான அனைத்து சாத்தியங்களையும் ஆராய்கிறது இந்த கட்டுரை.

கள்வர்களின் காலம்

”அந்த காலத்தில வந்த றழி சைக்கிளின்ர தரம் இப்ப வாறதில இல்ல” இந்த வசனத்தை நம்ம அப்பாவோ தாத்தாவோ அடிக்கடி சொல்ல கேட்டிருப்போம். பல பொருட்கள் தொடர்பாக பழைய தலைமுறை இத்தகைய குற்றச்சாட்டுக்களை அடுக்கிக்கொண்டிருக்கும். நாம்கூட  “அறிவியல் முன்பு இருந்ததை விட இப்போ முன்னேறிட்டுது. அப்பிடி இருக்க இப்ப வாற பொருட்கள் தரமாத்தானே வரோனும். ஏன் இவையள் இப்பிடி சொல்லுகினம்” என்று யோசிப்பதுண்டு. இல்லையா ? ஆனால் அது மாபெரும் உண்மை. எப்படி ??

லட்சம் ரூபாய் செலவில் நீங்கள் வாங்கிய ஸ்மார்ட்போன் ஒன்றின் பாவனைக்காலம் எவ்வளவு ? அதிகம்போனால் தட்டுத்தடுமாறி மூன்று வருடங்கள் பாவிக்குமா ???ஆனால் அந்த மொபைல்போன்கள் பத்து, பதினைந்து வருடம் பாவிக்கக்கூடியது. அதிக வியாபாரத்துக்காக முதலாளிகளினால் திட்டமிட்டே குறுகிய காலத்தில் பழுதடைய வைக்கப்படுகிறது என்று உங்களுக்கு தெரியவந்தால் கோபப்படுவீர்களா இல்லையா ? அதுதான் உண்மை. விரைவில் ஒன்று பழுதடைந்தால்தானே நீங்கள் அடுத்ததை வாங்குவீர்கள். மொபைல் போன் என்பது உதாரணம் மட்டுமே. அன்றாடம் நீங்கள் பாவிக்கும் செருப்பில் இருந்து கம்பியூட்டர் வரை இதே நிலமைதான். அதிக காலம் பாவிக்கக்கூடிய பொருட்களை தயாரித்தால் தண்டப்பணம் செலுத்தவேண்டும் என்ற நிபந்தனைகள்கூட இந்த பெருமுதலாளிகள் கூட்டத்தில் உண்டு. நிலவில் ஒருவன் கட்டுரை தொகுப்பில் உள்ள “கள்வர்களின் காலம்” என்ற கட்டுரை இத்தகைய பெருமுதலாளிகளின் அறிவியல் தொழில்நுட்ப கொள்ளைகள் பற்றி விரிவாக பேசுகிறது. 1895 இல் தயாரிக்கப்பட்ட குண்டு பல்ப் ஒன்றுக்கு நூறாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது தொடர்பான தகவல்களோடு ஆரம்பிக்கும் கட்டுரை, நீண்ட உழைப்பை தரக்கூடிய பொருட்களை தயாரிக்கக்கூடாது என தீர்மாணம் நிறைவேற்றப்பட்ட ஜெனீவா கூட்டம் வரை அலசுகிறது.

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளும் பதில் தெரியா கேள்விகளும்

ராஜ்சிவா அண்னனை தொடர்ந்து படிப்பவர்களுக்கு ஃப்ரீ மேசன்ஸ் (Free Masons), புதிய உலக ஒழுங்கு (New World order) என்ற சொற்கள் மிகவும் பரிச்சயமாக இருக்கும். எப்போது அழியும் இந்த உலகம் புத்தகத்தில் இவை பற்றி விரிவாக எழுதியிருப்பார். இவர்கள் யார்? யார் யாருடன் தொடர்பில் இருக்கிறார்கள், யாரெல்லாம் இதன் அங்கத்தவர்களாக இருக்கிறார்கள் என்ற தகவல்கள் தலை சுற்ற வைப்பவை. வெள்ளை மாளிகையில், அமெரிக்க நாணயத்தில், லண்டன் மைதானத்தில்.... என சம்மந்தமே இல்லாத இடங்களில் எல்லாம் மறைந்திருக்கும் இவர்களது சின்னம் ஏதோ எச்சரிக்கையை கொடுத்துக்கொண்டிருக்கிறது. இவர்களை பற்றிய தகவல்களை மேலும் கிளற கிளற.. உலகையே தங்கள் இஷ்டத்துக்கு ஆட்டிவைக்கக்கூடிய தகமை இவர்களுக்கு உண்டு என்ற அதிர்ச்சியும் உங்களை தாக்கலாம்.

சரி, இவர்களுக்கும் லண்டன் ஒலிம்பிக் போட்டிக்கும் என்ன சம்மந்தம் ? அதை பற்றித்தான்  கட்டுரை அலசுகிறது. லண்டன் ஒலிம்பிக் போட்டிக்காக தயார் செய்யப்பட்ட சின்னம், மைதானம் தொடங்கி மைதானத்தின் ஒளியமைப்பு வரை இந்த “புதிய உலக ஒழுங்கு” அமைப்பினரின் கைவண்ணம் இருந்திருக்கிறது. கட்டுரை இதுகுறித்த விரிவான தகவல்களை கொண்டிருக்கிறது.

மேலே தந்திருப்பவை இந்த கட்டுரை தொகுப்பில் இடம்பெற்றுள்ள முதல் மூன்று கட்டுரைகள் பற்றிய சிறுகுறிப்புகள். இவற்றோடு எம்மில் சிலர் பேய்களை கண்டதாக சொல்கிறார்களே.. அது உண்மையா பொய்யா என அறிவியல் ரீதியாக, மூளையின் செயற்பாடுகள் பற்றிய விளக்கத்தோடு ஆராயும் “மண்டைக்குள் குரல்”, நிலவில் கால் வைத்த முதல் மனிதன் நீல் ஆம்ஸ்ட்ரோங் என்று நாம் சிறுவயதில் இருந்தே படித்திருக்கிறோம் இல்லையா.. அது உண்மைதானா, அல்லது அமெரிக்காவால் அளக்கப்பட்ட கதையா என ஆராயும் “நிலவுக்கு போன கதை நிஜமா”, ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றி மிகுந்த புரிந்துணர்வுடன் எழுதப்பட்டுள்ள “சுயபால் விரும்பிகளும் மாற்று கருத்தாளர்களும்”, நம்மவர்கள் யாரும் அதிகமாக அக்கறை கொள்ளாத ஆபத்தான ஒரு நோய் பற்றிய “உறக்கத்தில் இறப்பு ஸ்லீப் அப்னியா”, அண்மையில் காணாமல் போன மலேசிய விமானம் MH386 இற்கு பின்னால் உள்ள மர்மங்கள், சதிகள் பற்றி அலசும் “ஒரு விமான விபத்தும் ஒரு கடத்தல் நாடகமும்”, இதற்கு முந்தைய காலங்களில் இதோபோன்று அரசுகளின் வெறிகளுக்கு பலியான அப்பாவி விமான பயணிகள் குறித்த “தொடரும் ஏமாற்று நாடகங்கள், வேட்டையாடப்படும் வானப்பறவைகள்”, நிலவில் தோன்றும் மர்மமான மனிதனின் உருவம் குறித்து ஆராயும் “நிலவில் ஒருவன்”, புவி வெப்பமடைகிறது என்ற ஒரு செய்தியை பரப்பி அதன் மூலம் கணக்கிடமுடியாத பணக்கொள்ளையில் ஈடுபட்டுவருகிறது ஒரு குழு. உண்மையில் புவி வெப்பமடைவது என்றால் என்ன என ஆராயும் “புவி வெப்பமயமாதல் என்பது பித்தலாட்டமா”, ஸ்பெயின் நாட்டின் ஒரு வீட்டில் தோன்றிக்கொண்டிருக்கும் முகங்களின் உருவங்கள் குறித்த மர்மத்தை ஆராயும் “பெல்மேஷ் முகங்கள்” ஆகிய பதின்மூன்று கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பிடித்திருக்கின்றன.

இந்த கட்டுரை தொகுப்பை இரண்டு காரணங்களுக்காக அவசியம் படிக்கவேண்டும். ஒன்று நம்மை சுற்றி இப்படியெல்லாம் நடக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காக. இரண்டாவது, அரசுகள் திட்டமிட்டே பல நிகழ்வுகளை இருட்டடிப்பு செய்து மக்களை சென்றடைய விடாமல் தடுக்கிறது. அந்த உண்மையை உணர்ந்துகொள்வதற்காக.

புத்தகத்தை ஆன்லைனில் வாங்க : Chennaishopping
                                                                         உயிர்மை

0 Comments:

Post a Comment

Blog Archive

Followers

Powered by Blogger.
Copyright © சிறகுகள் |