Monday, January 21, 2019

ஈழசினிமாவின் மாற்று சிந்தனைகள் குறித்த உரையாடல் - சதாபிரணவனை முன்வைத்து !

இலங்கை தமிழ் சினிமா அதன் படைப்பு நிலை சார்ந்தும், அரசியல் சார்ந்தும் நீண்ட விவாதங்களையும் உரையாடல்களையும் வேண்டி நிற்கும் நேரம் இது.  போருக்கு முன்னரான காலம், விடுதலைப்புலிகளின் நிதர்சனம், போருக்கு பிந்தைய காலம் என மூன்று காலப்பகுதிகளில் மூன்று வேறுபட்ட தன்மைகளுடன் இலங்கை தமிழ் சினிமாவின் பரிமானம் அமைந்திருந்தாலும் எமது அயல் சினிமாவான சிங்கள சினிமாவோடு ஒப்பிடுகையில் பாரியதொரு தேக்க நிலையை எமது சினிமா கொண்டிருப்பதை அவதானிக்க முடியும்.

விடுதலைப்புலிகளின் காலத்தில் எழுந்த சினிமாக்கள் எமது தனித்துவமான அடையாளங்களை கொண்டிருந்தாலும், பெரும்பாண்மையாக புலிகளின் போராட்டம் தொடர்பான பிரச்சார திரைப்படங்களாகவே அமைந்துபோனதால் அது எமது சமூகத்தை தாண்டியோ அல்லது புலிகளின் காலத்தை தாண்டியோ நிலைபெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியதாகிற்று. அதே நேரம் புலிகளுக்கு முந்தைய, பிந்தைய கால சினிமாக்கள் தென்னிந்திய சினிமாவின் இலங்கை மீள்பதிவாகவே வந்துகொண்டிருக்கும் அவலம்தான் நடந்தது, நடந்துகொண்டிருக்கிறது. 

பெரும்பாண்மையானதொரு இளைஞர் சமூகம் சினிமா குறித்த பிரக்ஞைகள் அற்று தென்னிந்திய அபத்தங்களை மீள் பதிப்பு செய்துகொண்டிருக்கும் இதே இலங்கை தமிழ் சினிமா களத்தில், அவற்றிலிருந்து முற்றிலுமாக விலகி, சினிமா பற்றிய தெளிவான கருதுகோள்களுடன் எமது கதைகளை எமது சமூகத்தை தாண்டியும் கொண்டு செல்லும் கலைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களது சினிமா குறித்த கருதுகோள் என்னவாக இருக்கிறது, சினிமாவை எப்படி முன்நகர்த்திச் செல்கிறார்கள் என்ற கேள்விகள் மூலமாக எமது உரையாடலை முன்னெடுத்து செல்வது என்பது காத்திரமானதொரு நிகழ்வாக இருக்கும்.

சதா பிரணவன்

புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்ட சதாபிரணவனின் இயற்பெயர் சிவகாந்தன். சதாசிவம் என்ற தந்தையின் பெயரையும் பிரணவசொரூபி என்ற தாயின் பெயரையும் இணைத்து சதாபிரணவன் ஆகியிருக்கிறார். போர்க்காலத்தில் புலம்பெயர்ந்து பிரான்ஸ் செல்லும் சதாபிரணவனின் கவனத்தை சினிமா ஈர்த்துக்கொள்கிறது.  இயல்பிலேயே சினிமா மீது தீவிர நாட்டம் கொண்டவர்  சதா. அத்தகையதொரு சினிமா மோகமும், ஐரோப்பிய நாடுகளில் இலகுவாக கைவசமான தொழில்நுட்ப வசதிகளும் சினிமா துறையில் சதாபிரணவனது நுழைவை இலகுவாக்கிவிடுகின்றன. அவரது சினிமாத்துறையின் ஆரம்பம் என்பது சினிமா மீது கொண்ட தீவிரமான மோகத்தால் மாத்திரமே நிகழ்கிறது. தான் சார்ந்த சமூகத்தின் கதைகளை வெளி உலகிற்கு சொல்லும் ஊடகமாக சினிமாவை பாவிக்கவேண்டும் என்ற இலக்கு அதன் பின்னரான காலத்திலேயே அவரது எண்ணக்கருவாக வளர்கிறது. சதாபிரணவனின் குறும்படங்களில் இந்த வளர்ச்சி போக்கினை அவதானிக்கமுடியும். அந்தவகையில் சதாபிரணவனிடம் சினிமா பற்றிய தெளிந்த சிந்தனையும், நேர்மையும் இருக்கிறது. அதுவே அவரை சிறந்ததொரு படைப்பாளிக்கான பாதையில் இட்டுச்செல்வதையும் மறுக்கமுடியாது.

தன்னை சுற்றியுள்ள மக்களின் வாழ்வியலை, அரசியலும் போரும் அவர்களின் வாழ்வில் செலுத்தும் தாக்கங்களை கதைகளாக சொல்கிறார் இவர். புலம்பெயர்ந்து வாழும் இளைஞர் சமூகத்தில் தற்போது ஏற்பட்டு வரும் குறும்பட மோகம் பற்றி பேச விளைந்த இவரது “தினப்பயணம்” குறும்படம் அந்த ஒற்றை கதையினூடே, வழிப்பறிகள் குறித்து தினம் தினம் பயந்துகொண்டே பயணம் செய்யும் நம் மக்களின் அவலங்களையும், அந்த நேரத்திலும் தம்மிடையேயான அரசியல் வேறுபாடுகளால் பிளவுண்டு கிடப்பதையும் எள்ளலாக காட்சிப்புலத்தில் கொண்டுவருகிறது. அதேபோல ஈழத்தில் சித்திரவதைக்குள்ளான ஒரு இளைஞனும், அவனை சித்திரவதைக்குள்ளாக்கிய ஒட்டுக்குழுவை சேர்ந்தவன் ஒருவனும் நீண்ட இடைவெளியின் பின் புலம்பெயர் நாடொன்றில் சந்தித்துக்கொள்ளும் நிகழ்வையும், அவர்களுக்கிடையிலான உணர்வு வெளிப்பாட்டையும் அற்புதமாக காட்சிப்படுத்திய “போராளிக்கு இட்ட பெயர்” முதலான குறும்படங்கள் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களிடையே நிகழும் அவலங்களையும், அரசியல்களையும் திரைப்படைப்பாக வெளிக்கொண்டு வருகின்றன. ஈழத்தில், இராணுவத்தின் பிடியிலிருக்கும் குடும்பம் ஒன்று அனுபவிக்கும் கொடூர நிகழ்வொன்றை காட்சிப்புலத்தில் கொண்டு அதனூடே ஒட்டுமொத்த போரின் அவலங்களையும் நிமிட நேரத்தில் பதிவுசெய்து சென்ற “God is Dead” குறும்படம் சதாபிரணவனின் படைப்புக்களில் ஆகச்சிறந்த படைப்பாக அடையாளம் காணப்பட்டது. ஆக, எமது மக்களை பாதிக்கும் அரசியல், எமது மக்களுக்கிடையே நிகழும் அரசியல் ஆகியவையே சதாபிரணவனது கதையின் மையப்பொருளாக இருப்பதை காணலாம். 

குறும்படங்களுக்காக கதைகளை தெரிவுசெய்யும் முறையில் தேர்ந்ததொரு இயக்குனருக்கான பாங்கினை அவதானிக்கமுடியும். ”பல கதைகளின் கரு எப்போதும் தோன்றிக்கொண்டேதான் இருக்கும் சில தினங்கள் கூட நிலைகாமல் போனவை பல அதில் அடங்கும்” என சொல்லும் சதாபிரணவன் தனது அனுபவத்திலிருந்து ஒரு நிகழ்வை இவ்வாறு சொல்கிறார். “அந்த அந்த கால மனநிலையை பொறுத்தே ஒரு கதை உருப்பெறுகிறது. உதாரணமாக "இன்றிருப்பத்தேழு" கதை அந்த காலகட்டத்தின், எனது மனச்சிதைவின் பதிவு .அந்த பதிவை குறும்படம் என்று கூட சொல்லமுடியாது.ஒரு படைப்பாளியாக எனக்கு முக்கியமாக இருந்தாலும் அது ஒரு பதிவு அவ்வளவுதான்.”

தான் சார்ந்த சமூகத்தின் போராட்டம் குறித்து எவ்வித அக்கறையுமற்று வாழும் வெளிநாட்டு குடும்பம் ஒன்றின் கதையை சொன்ன “விடுதலை” குறும்படத்தோடு ஆரம்பித்து இதுவரை ஏழு குறும்படங்களை இயக்கியுள்ளார் சதா. இவற்றில் God is dead குறும்படம் பிரான்ஸ் மொபைல் குறும்பட போட்டி மற்றும் கொரியா மொபைல் குறும்பட போட்டி ஆகியவற்றில் சிறந்த குறும்படமாக முதலிடம் பெற்றுக்கொண்டது. சினிமாவை வெறுமனே பொழுதுபோக்கு ஊடகமாக கடந்துபோய்விடக்கூடாது, எமது கதைகளை சர்வதேசத்திடம் சொல்வதற்குரிய காத்திரமான ஊடகமாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற சதாபிரணவனின் கனவுக்கு கிடைத்த முதல் வெற்றி அது. 

தனது கதைகளோடு, வேறு எழுத்தாளர்களின் கதைகளையும் குறும்படமாக இயக்குவதற்கு தயங்குவதில்லை சதாபிரணவன். செரஸ் குறும்படத்தின் மூலம் எழுத்தாளர் ஷோபாசக்தியோடு இணைந்து பணியாற்றியுள்ளார். ஷோபாசக்தியின் கதை ஒன்றை திரைப்படமாக்கும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார்.

சதாபிரணவனுக்கு எந்தவொரு கட்சியோ இயக்கமோ சாராத தெளிந்ததோர் அரசியல் பார்வை உண்டு. அது முற்று முழுதாக மக்கள் நலன்சார்ந்த அரசியல். இயக்க உள்முரன்பாடுகளை பேசி, தீவிர தமிழ் தேசியவாதிகளின் விமர்சனத்துக்குள்ளான  “போராளிக்கு இட்ட பெயர்” குறூம்படத்தையும், அதே தேசியவாதிகளால் பாராட்டப்பட்ட God is Dead என்னும் பின் போர்ச்சூழல் குறும்படம் ஒன்றையும் சதாபிரணவனால் கொடுக்கமுடிகிறது என்றால் அது அவரது மக்கள் நலன்சார்ந்த அரசியல் பார்வையி வெளிப்பாடாகவே இருக்கமுடியும். இந்த அரசியல்தான் தீவிர புலி எதிர்ப்பாளரான ஷோபாசக்தியோடு இணைந்து வேலை செய்யவும், அதேநேரம் அவரால் “புலிக்குட்டி” என அழைக்கப்படுவதுமானதொரு சூழ்நிலையை சதாபிரணவனுக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

குறும்படங்கள் மூலம் குறிப்பிடத்தக்கதொரு மாற்றத்தை ஈழசினிமாவில் நிகழ்த்திக்கொண்டிருந்த சதாபிரணவன் விரைவில் முழுநீள திரைப்படங்களை இயக்கவுள்ளார். மிக நீண்டதொரு மாற்றத்தையும் சக கலைஞர்களுக்கு கற்றுக்கொள்வதற்கான இடைவெளிகளையும் அவரது திரைப்படங்கள் ஏற்படுத்தும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

புதியசொல் சஞ்சிகைக்காக
மதுரன் ரவீந்திரன்

Share This:   FacebookTwitterGoogle+

Wednesday, June 20, 2018

ஞாபகச்சுவரில் அடுக்கப்படும் நிகழ்காலக்குறிப்புகள்

வயலின் இசைத்துக்கொண்டிருக்கிறது. சுற்றிலும் பெய்துகொண்டிருந்த மழையிலிருந்து கடற்காற்றின் வாசனை வீசுகிறது. பொழிந்துகொண்டிருந்த நீரின் ஓசையை ஊடறுத்து வயலின் இசைக்கிறது. மெல்ல மெல்ல மழையின் ஒலி அமிழ்ந்துபோக வயலின் மிதந்து பரவுகிறது.

ஒன்றரை வயதில் இது நடந்திருக்கலாம். ரெண்டாம் குறுக்குத்தெருவில் வசித்ததாக இப்போது ஞாபகம். சித்தப்பா வந்து கப்பல் வந்திருப்பதாக சொல்கிறார். பார்க்கவேண்டும் என்று அடம்பிடித்து அவர் சைக்கிளில் அமர்ந்துகொள்கிறேன். ஒன்றரை வருடங்கள் மட்டுமே உலகப் பரிச்சயம் உள்ள அந்த சிறுவனின் கண்களில் அப்பயணம் நிகழ்ந்த இரவின் காட்சிகள் விரிகின்றன. பெற்றோல்மக்ஸ் விளக்கு வைக்கப்பட்ட கடைகள், இருளும் ஒளியும் கலந்து தீட்டப்பட்டு நடமாடும் மனிதர்கள், அவர்களின் முகங்கள், உரையாடல்கள், உடல்மொழிகள், இவை வெளிப்படுத்தும் வெவ்வேறு உணர்வுகள், லாம்பு வெளிச்சத்தோடு நகரும் உணவு நிரப்பப்பட்ட தள்ளு வண்டிகள்... எல்லாமே பேராச்சரியமாக நிகழ்ந்துகொண்டிருந்தது அன்றைய இரவு. மழை மெதுவாக தூறிக்கொண்டிருந்தது.

“அந்தா... கப்பல்”. சித்தப்பா எதையோ காட்டுகிறார். சைக்கிளின் முன் கரியரில் உட்கார்ந்தவாறே பார்த்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு முன் இருளின் வர்ணத்தில் நீர் பரந்திருக்கிறது. அலைகளின் ஓசை நீண்டு ஒலிக்க, வெகு தொலைவில் வெளிச்சம் ஒன்று தெரிகிறது. அப்போதையை நினைவுகளின் படி, கடலுக்கு நடுவே மிதக்கும் கிணறு ஒன்றும் அந்த கிணற்றினுள்ளே கப்பல் ஒன்று நிற்பதாகவும் தெரிகிறது. கப்பல் ஒரு சிறிய வீட்டின் வடிவத்தினை ஒத்திருக்கிறது. நினைவுகளில் கப்பலின் வடிவம் சற்று சிதைந்தே இருக்கிறது.

வயலின் இசைத்துக்கொண்டிருக்கிறது. இப்போதும் நான் அந்த கப்பலை பார்த்துக்கொண்டிருக்கிறேன். நேர்சரி படிக்கும்போது என்னோடு கை கோர்த்து திரிந்த, பக்கத்து வீட்டு சுமிதா இரண்டாம் குறுக்குத்தெருவில் நடந்து திரிகிறாள். அவள் அப்போது வைத்திருந்த சிவப்பு வர்ண புத்தகப் பையை இப்போதும் முதுகில் கொழுவியிருக்கிறாள். பனை ஓலைத்தொப்பியுடன் அந்த தெருவில் அவள் ஒய்யாரமாக நடந்துகொண்டிருக்கிறாள். தூறிக்கொண்டிருக்கும் மழையை தன் முகங்களால் எதிர்கொள்கிறாள். துளிகளை முத்தமிடுகிறாள். கடற்காற்று என் நாசியை தீண்டுகிறது.

மழை தூறிக்கொண்டிருந்த ஒரு நாளில் நாமெல்லாம் புறப்பட்டிருந்தோம். எல்லோருமெ... அந்த வீதியில் என் நினைவுகளில் இருந்த எல்லோருமே... சூட்கேசுகள், பைகள் சகிதம் பயணம் தொடங்கியது. அவ்வளவு கூட்டத்துடனான பெரும் பயணத்தை முதன்முதல் பார்க்கிறேன். ஆச்சரியம் கொட்டிக்கிடந்தது. மழை பொழிந்துகொண்டிருந்த தருணத்தில் வரிசையில் காத்திருந்தது போலவும், மயங்கி விழுந்திருந்த ஒரு அக்காவுக்கு அவர் குடும்பத்தவர் குடைபிடித்துக்கொண்டே நீர் கொடுத்தது போலவும் காட்சிகள் நினைவுகளில் பதிந்திருக்கின்றன. மழைநாளொன்றில் நிகழ்ந்த முதல் கடல் பயணமாக அது இருந்தது. சுற்றிலும் இருள் மட்டுமே சூழந்த அந்த பயணம் குளிர்காற்றோடும், படகின் அசைவோடும் நிகழ்ந்திருந்தது.

வயலின் இசை மெல்ல அமைதியடைகிறது. பின் அந்த இசை நின்றுவிட மழை ஆரம்பிக்கிறது. மழைநீர் பொழிவதும், மண்ணோடு மோதுவதும் பின் வழிந்தோடுவதுமான ஒலிகள் சூழலெங்கும் பரவியிருக்கிறது. மழையின் ஒலியில் ஒரு இசைக்கோர்ப்பு நிகழ்கிறது. மண்ணில் விழும் நீர், வீட்டு கூரையில், வாழை மரத்தின் இலைகளில், வேப்ப மரத்தில், கிடங்குகளில் நிரம்பியிருந்த இன்னோர் மழைநீரின் மேல் என வெவ்வேறு ஒலிகள் கோர்வையாகி இசையாகிறது. உன்னதம்...!

அதன் பின் பூமி அழியத்தொடங்குகிறது. அங்குமிங்குமாக மின்னல் வெட்டுகிறது. என்றுமில்லாத பேரொலியுடன் இடி இடிக்கிறது. நிலம் வெடித்துப் பிளர்ந்து எழுகிறது. பெருமழை பெய்கிறது. எங்கும் நிலம் வெடித்து அதிரும் ஒலிகள் தீப்பிழம்புகளின் காட்சியோடு வந்து சேர்கிறது. இவ்வளவு பிரம்மாண்டமாக அழிய வேண்டுமானால் பூமி எத்தனை பெரிதாக இருந்திருக்கவேண்டும். ஆச்சரியமாக இருக்கிறது. நாம் அமர்ந்திருந்த நிலத்தை தவிர்ந்த உலகம் அழிந்துகொண்டிருக்கிறது.

நண்பர்கள் கேக் ஒன்றை வெட்டுவதற்காக தயார் செய்கிறார்கள். மின்னல் வெட்டுகிறது. இப்போது மழையின் சாரல் நம்மீதும் தெறிக்க ஆரம்பிக்கிறது. மிக உற்சாகமாக கேக் வெட்டி கொண்டாடலை தொடர்கிறோம். நாளை பிறக்கப்போகும் புதிய உலகத்தை தரிசிக்கும் ஆவல் அந்த ஆறு மனிதர்களிடத்திலும் நிறைந்திருந்தது. புதிய ஆதாம், ஏவாளை சந்திக்கப்போவதும், அவர்களுக்கு மொழியை கற்றுக்கொடுக்கப்போவதுமான கனவுகள் என்னை சுற்றிலும் நிறைந்திருக்கிறது.பின் மெல்ல மெல்ல பேரழிவு அடங்கிப்போயிற்று.

சைக்கிளை வீதியில் இறக்குகிறேன். புதிதாய் பிறந்திருந்தது உலகம். புதிய மனிதர்கள் அமைதியாக உறங்கிப்போயிருந்தார்கள். மழைநீரில் கழுவி விடப்பட்டிருந்த வீதிகளும் மரங்களும் கட்டடங்களும் மஞ்சள் விளக்கொளியில் பளபளத்துக்கொண்டிருந்தன. குளிர்ந்த கடற்காற்று வீசியது. மண்டூகங்களின் ஒலி ஏதோ ஒன்றை நினைவுபடுத்திக்கொண்டிருந்தது.

இப்போது வயலின் என் காதுகளில் இசைக்கத்தொடங்கியிருந்தது.

***
லிண்ட்சே...! கிறிஸ்துவ சஞ்சிகைகளில் வரும் வண்ண ஓவியங்களாய் பொழிந்துகிடக்கிறது ஏதன் தோட்டம். உன் கரங்களை பற்றியவாறு மரக்கதிரை ஒன்றில் உட்கார்ந்திருக்கிறேன். நாம் கீழிருந்த மரம் பூக்களை தவிர்த்து உன் வயலின் இசையை கொட்டிக்கொண்டிருந்தது. அந்த இசை பல வண்ணங்களாய், வடிவங்களாய் நம்மைச்சுற்றி மிக மெதுவாய் பறந்துகொண்டிருக்கிறது. 

கண்களை மூடியவாறு என் தோள்களில் சாய்ந்திருந்தாய். உன் உடல் அவ்வளவு மென்மையாக, குளிர்ந்திருந்தது. 

"நான் இப்போதெல்லாம் இசைப்பதை நிறுத்திவிட்டேன்" என்றாய். "உன் காதலால் நான் நிறைக்கப்பட்டிருக்கிறேன். என்னுள் இசை முற்றிலுமாய் தீர்ந்துபோய் காதல் நிரப்பப்பட்டிருக்கிறது. அது பொங்கிப் பிரவகிக்கிறது. வயலினை மீட்டும்போது அது என்னுள் நிறைந்துபோயிருக்கும் காதலையே இசைக்கிறது" என்கிறாய். 

"என்னை சுற்றிலும் காதல் மட்டுமே நிறைந்திருக்கிறது. நான் காதலின் குழந்தை" என்றும் சொல்கிறாய். இப்போது சொரிந்துகொண்டிருந்த இசை துகள்களை பார்க்கிறேன். துகள்கள் எல்லாம் பல வர்ண மழைத்துளிகளின் வடிவம் பெற்றிருக்கின்றன. வயலின் இசை வர்ண மழையாய் பொழிகிறது. அது நம்மீதும் பொழிகிறது. நீ சொன்னதுபோலவே அது காதலாக மட்டுமே இருக்கிறது. 

லிண்ட்சே...! என் காதலியே...! 

உன் உடல் ஒளியாய் மிதக்கிறது. முதலில் நீ இசையாய் உருக்கொள்கிறாய். பின் காதலாகிறாய். காதலுக்கான உன் வடிவம் உன் நிஜ வடிவத்தையே ஒத்திருக்கிறது. ஒத்திருக்கிறது என்ன. நீ நீயாகவே வடிவம் கொண்டிருக்கிறாய். 

நாம் முத்தமிட்டுக்கொண்டபோது உன் குரல் ஹம்மிங்காய், கோரஸாய் நமக்கு பின்னிருந்து இசைமீட்டியது. நீ ஆயிரம் லிண்ட்சேக்களாய் உருக்கொண்டு ஆயிரம் வயலின்களில் இசைமீட்டுகிறாய். அந்த இசை மிதந்து செல்லும் நதியைப்போல நம்மைச்சுற்றி பரவுகிறது. 

இப்போது என்னில் இருந்து விலகி, உன் வயலினை எடுத்து மீட்டத்தொடங்குகிறாய். இசை பெருவெள்ளமாய், பேரன்பாய் பாய்கிறது. அந்த இசையோடு நாமும் கரைந்து, நீருருக்கொண்டு பாய்கிறோம். ஒரு கணம் எகிப்து நதிக்கரையோரத்திலும், இன்னொருகணம் பனிபடர்ந்த மலைச்சிகரங்களிலும், அடர்ந்த வனங்களிலும் நீ இசைமீட்டிக்கொண்டிருக்கிறாய். உன்னை அணைத்தவாறே நான் இசையை கொண்டாடிக்கொண்டிருக்கிறேன். 

நாமும், இசையும், அன்பும் மட்டுமே நிறைந்திருந்த ஏதன் தோட்டம் அத்தனை அழகாய் பரந்திருந்தது.

***

அது என் பால்யகாலத்து நினைவொன்றின் எச்சமாகவோ அல்லது என் பதின்மங்களில் கண்ட கனவொன்றாகவோ இருக்கலாம். எதுவோ.. இப்போது அது அடிக்கடி என் நினைவுகளில் தொற்றிக்கொள்கிறது. பின்னிரவுகளில், எங்கோ ஓர் தூரத்தில் ஒலிக்கும் தொன்னூறுகளின் ஒலிபெருக்கிப் பாடல்கள் என்னை இலகுவாக அந்த நினைவுகளுக்கு கடத்தி சென்றுவிடுகிறது.

புகார்மூட்டத்தின் மத்தியில் சொற்பமே எஞ்சியிருக்கும் காட்சி அது. சுற்றிலும் புகார் சூழ்ந்திருக்கும் பெருவயல். நடுவே நீண்டுசெல்லும் மண்பாதையொன்றின் முடிவில் சிறு குடிசை. தன் லுமாலா சைக்கிளை மிதித்தபடி அப்பாவும், முன்னே நானும், கரியரில் அம்மாவும் அமர்ந்திருக்க, விஞ்ஞான புனைவுகளின் Loop போன்று அந்த பயணம் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. நாங்கள் ஏதோவொரு இலக்கை பற்றிய கனவுடன் பயணித்துக்கொண்டேயிருக்கிறோம்.

இப்போது வயல் வேறொன்றாக மாறியிருக்கிறது. அரிவு வெட்டப்பட்டு ஆங்காங்கே வைக்கோல்கள் குவித்து வைக்கப்பட்டிருக்கின்றன. வயலை சுற்றியிருந்த வேலி, மாமரங்கள், பனைகள் எல்லாம் என் சொந்த ஊரைப்போலவே அந்த இடமும் இருப்பதாக நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறது. அடியோடு வெட்டப்பட்ட நெற்பயிரின் எச்சங்கள் கால்களை புண்படுத்துவது பற்றிய கவலையின்றி நானும் அவளும் ஓடிக்கொண்டிருக்கிறோம். அப்போது ஏழோ, எட்டோ வயதிருக்கலாம் நமக்கு.

திடீரென என் நகச்சுட்டு வந்த கைகளை பற்றிக்கொள்கிறாள். “நோகுதா..?” கேட்கும்போது அத்தனை அன்பையும், பரிவையும் அவள் முகத்தில் காணமுடிகிறது. ”நாங்க கலியாணம் கட்டுவமா..?” எந்த தயக்கமும் இல்லாமல்தான் அவள் கேட்கிறாள். நான் கோபத்தோடு விலகிச் செல்வதும், பின்னர் நாமிருவரும் மாமரமொன்றின் நிழலில் இருந்து படித்துக்கொண்டிருப்பதுமான நினைவுகளை புகார் சூழ்ந்திருந்தது.

இந்த நினைவுகளின் முடிவில் ஏதோவொரு இனம்புரியாத உணர்வின் சுழற்சியில் சிக்கிக்கொள்வதை உணரமுடிகிறது. ஏக்கம், கிளர்ச்சி, துக்கம் என பலவிதமாக என்னை புரட்டுகிறது இந்த நினைவுகள்.

ஆச்சரியம் என்னவென்றால் சாதாரண சமயங்களில் இந்த நினைவுகளை என்னால் மீட்டிக்கொள்ளமுடியாமல் இருப்பதுதான். எங்கோ தூரத்தில் ஒலிக்கும் தொன்னூறுகளின் ஒலிபெருக்கி பாடல்கள் மட்டுமே அந்த நினைவுகளின்பால் என்னை பயணிக்கவைக்கின்றன.

***
ஏதோ ஒரு அடையாளம் சொல்லமுடியாத போதையில் இருக்கிறேன். நிச்சயமாக அது மது போதையல்ல. நான் இயங்குவதே மிக இயல்பற்றதாகவும், கிறுக்குத்தனமாகவும் இருக்கிறது. மூளை தெளிவாகவே இருப்பதாக நம்புகிறேன். என்னை சுற்றிலும் நடப்பதை நூறு வீதம் தெளிவுடன் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. அதனால்தான் இது மது அல்ல என்கிறேன். என்னை தவிர்த்த புறவுலகின் அசைவுகள் யாவும் இதுவரை நடந்திராத விநோத முறையில் நிகழ்கிறது. என் முதுகுக்கு பின்னால் நிலத்திலிருந்து பெருவெடிப்புடன் பிரம்மாண்டமான தூண்கள் கிளர்ந்தெழுகின்றன. புகைத்துக்கொண்டிருக்கும் சிகரட்டின் புகை சிறுசிறு கற்களாக மாறி, தொண்டையை குத்தி அடிவயிறுவரை பயணப்படுவதை உணரமுடிகிறது. நேரம் கடந்துகொண்டிருக்க, புறவுலகின் இயக்கங்கள் மெல்ல மெல்ல வேகம் குறைந்து, அனைத்தும் உறைநிலை ஒன்றை நோக்கி நகர்வதை உணரக்கூடியதாக இருந்தது. ஆக, கஞ்சாவோ, அபினோ, ஹெரோயினோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் மது போதையல்ல. யாரோ திட்டமிட்டு எனக்கு இதை செய்திருக்கவேண்டும்.

வேண்டாம். இதிலிருந்து வெளிவரவேண்டும். தீரத்துடன் எழ முயற்சித்து... மெல்ல எழுந்து நிற்க, பாதத்திற்கு அடியில் பூமி சரிவாக மாறுகிறது. என் உச்சந்தலைமீது விழுந்துவிடும்போல் தோன்றுகிறது வீட்டின் கூரை. மீண்டும் சுவரை பற்றிப்பிடித்து சாய்ந்து, அமர்ந்துகொள்கிறேன். சொல்லமுடியாத பயமும், வெறுப்பும் என்னை சூழ்ந்துகொள்கிறது.

சொல்லப்போனால் அது ஒருவகையில் எனக்கு பிடித்திருக்கவும் செய்கிறது. எப்போதும் ஒரேமாதிரியாக பார்த்து பழக்கப்பட்ட என் அதே சூழல் தற்போது ஆச்சரியத்தை கொட்டி, யாரோ ஒரு சிறுவனின் விஸ்தரமான கனவுலகைப் போல என் முன்னே பரந்து விரிகிறது. நாளங்களின் வழியே குபுகுபுவென பாயும் இரத்தத்தின் ஸ்பரிசத்தையும், ஒலியையும் உணரும் தருணம்தான் எத்தனை கொண்டாட்டத்திற்குரியதாகிறது. அவ்வப்போது சரிந்தோ, பறந்தோ, தலைமேல் விழப்போவதாக பாசாங்கு காட்டியோ என நிலையற்றதொரு வடிவத்துக்கு மாறிவிட்ட அறையின் சுவர்தான் எத்தனை கிளர்ச்சியை உண்டாக்குகிறது. ஆனால் ஏதோ ஒன்று குறைவதாக உணர்கிறேன். ஏதோ ஒரு வெற்றிடம்.

அதோ... எனக்கு சற்று முன்னால் அசரவைக்கும் அழகுடன் பெண்ணொருத்தி உட்கார்ந்திருக்கிறாள். ஒருகாலை மடித்து அணைத்துக்கொண்டு, முழங்காலின் மேல் நாடியை புதைத்தவாறு என்னை பார்த்துக்கொண்டிருக்கிறாள். அந்த பார்வை அத்தனை காமத்தையும் அள்ளிக்கொட்டுகிறது. இதுவரை உணர்ந்த வெற்றிடம் அவளின் இல்லாமையாகத்தான் இருக்கவேண்டும். அவள் உடலை சுற்றியிருந்த மெல்லியதொரு துணி வெளிக்காட்டும் அழகுகள் என்னை கிறங்கடிக்கிறது.

உண்மைதான். இந்த போதை, காமம்... உலகின் உன்னதமான கொண்டாட்டங்கள் இரண்டும் எனக்கு இப்போதே வேண்டும். இந்த போதை தீரும் முன்னே பெண்ணுடலையும் கொண்டாடவேண்டும். அவள் வாய்திறந்து ஏதும் பேசியதாக நினைவில்லை. முதலில் தொட்டுணர்ந்தோம். பின் முத்தமிட்டு, பின்னி பிணைந்து, அந்த மென்மையான தோல்களோடு இடைவெளியற்று உராய்ந்து, முகர்ந்து, உள்நுழைந்து, மூச்சுவாங்கி முத்தமிட்டு.... இறுதியில் உச்சத்தை நெருங்குகையில்.... என்ன இது?? !

சற்றுமுன் மென்மையாக சுண்டியிழுந்த அந்த பெண்ணுடலின் தோல்கள் பார்க்கும்போதே சுருக்கம் விழ ஆரம்பிக்கிறது. சதைகள் தொய்ந்து, கன்னம் உட்குவிய, முடிகள் நரைத்தபடியே ஒவ்வொன்றாய் கழன்று விழ ஆரம்பிக்கிறது. ஈரலிப்பாய், பசபசப்பாக இருந்ததெல்லாம் சற்றும் காணச் சகிக்கமுடியாமல் உருமாறிக்கொண்டிருக்க, அந்த பேரழகி மெதுவாக சுருண்டு விழுகிறாள். சற்றுமுன் வனப்பாய் இருந்த அவளுடலின் பகுதியெங்கும் வாடித் தொய்ந்துபோன சதையை துழைத்துக்கொண்டு புழுக்கள் நெழிய ஆரம்பித்தன.

இப்போது போதை அருவருப்பக மாறுகிறது. வேண்டாம். இதிலிருந்து வெளிவரவேண்டும். மீண்டும் எழ முயற்சிக்க.... இல்லை.. இல்லை.. யாரோ எனக்கு சதிசெய்கிறார்கள். தேநீரிலோ, தண்ணீரிலோ நான் அருந்தும் ஏதோ ஒன்றில் எனக்கான கஞ்சாவோ அபினோ ஹெரோயினோ கலக்கப்பட்டிருக்கிறது. நான் உட்கார்ந்திருந்த கட்டில் இப்போது சற்று சரிகிறது... விழுந்துவிடுவேனோ என்ற அச்சத்தில், கட்டிலின் விளிம்பை பற்றிக்கொள்ளலாம் என திரும்ப, அந்த பெண்ணுடலின் உள்விழுந்த கண்கள் இப்போதும் என்னை அழைந்துக்கொண்டிருந்தது.

- ”புதிய சொல்” இதழிற்காக
Share This:   FacebookTwitterGoogle+

Sunday, October 8, 2017

சாவகச்சேரி to விசுவமடு - பயணக்கட்டுரை

”சாவகச்சேரியில் இருந்து விசுவமடுவரை சைக்கிள் பயணம் போகப்போகிறோம். விரும்பியவர்கள் இணைந்துகொள்ளுங்கள்” என்ற குமணனின் பேஸ்புக் பதிவை பார்த்ததுமே ”நாங்களும் போவமாடா..?” என்றான் கிரி. யோசிக்காமல் சரி என்றேன். எந்தவித முன்யோசனைகளும் இல்லாமல் எடுத்த முடிவு அது. இருந்தாலும் பயணம் தொடங்கிய வெள்ளிக்கிழமை காலை வரை நாம் போவது உறுதியற்றதாகவே இருந்தது.

கிரி திடீரென்று வரவில்லை என்பான். பின் திருப்பவும் வருகிறேன் என்பான். எனக்கு ஒரு சில வேலைகள் வந்தது. இந்த குழப்பங்களுக்கு மத்தியில் சைக்கிள் வேறு தயார் செய்யவில்லை. சுற்றியிருந்தவர்கள் எல்லாமே பயமுறுத்திக்கொண்டிருந்தார்கள்.

“பளை அல்லது ஆணையிறவு தாண்டமாட்டிங்கள்”
“இந்த சைக்கிள்ள எப்பிடி போகப்போறிங்கள். ஹாண்டில் எல்லாம் இப்பிடி ஆடுது?”
“கொஞ்சத்தூரம் போனதும் மஞ்சள் மஞ்சளா சத்தி எடுப்பிங்கள்...”
“கை கால் எல்லாம் பிடிச்சிரும். உப்பும், தேசிக்காயும் கொண்டு போங்கோ”

இவ்வாறாக ஏகப்பட்ட ஆலோசனைகளும், பயமுறுத்தல்களும். உயிரா போகுது. போய்த்தான் பார்ப்போம் என்று வெளிக்கிட்டாச்சு. போன வருசம் கழுவி பூட்டின சைக்கிள், ஒரு காத்துப்பம், அடுத்த நாளுக்கான உடை, ஒரு தண்ணீர் போத்தல்... இவ்வளவும்தான் கொண்டுபோனது. இதை தவிர ஏதும் நடந்தால் அவசர உதவிக்கென அங்கங்க ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு நண்பர்கள் மோட்டார் சைக்கிளோடு தயாராக இருக்க, சன்சிகனும் தனுஸும் மோட்டார் சைக்கிளில் கூடவே வருவார்கள். இதுதான் Backup.

காலை ஏழு மணிக்கு சாவகச்சேரியில் இருந்து பயணம் தொடங்குவதாக திட்டம். யாழ்ப்பாணத்தில் இருந்து 5.30 க்கு வெளிக்கிட்டோம். சரியாக 6.00 மணிக்கு சாவகச்சேரியை அடைந்து 7 மணிவரை காத்திருக்கவேண்டியதாகிவிட்டது. எங்கள் இரண்டு பேரை தவிர மிகுதி ஐந்து நண்பர்கள் பருத்தித்துறையில் இருந்து வரவேண்டும்.

சாவகச்சேரியில் - பயணம் தொடங்க சற்று முன்.

இதில் முக்கியமான விடயம்  எமக்கு எம் மீதுள்ள நம்பிக்கைதான். மற்றவர்கள் எங்கள் மீது எப்படியான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள், மற்றவர்களுக்கு நாம் என்னவகையான நம்பிக்கையை ஏற்படுத்தப்போகிறோம் என்பதல்ல இந்த பயணத்தின் நோக்கம். மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு 5 கிலோமீற்றர்களுக்குள்ளயே வேர்த்துக் களைக்க சைக்கிள் ஓடுற நானும் கிரியும் விசுவமடு வரைக்கும் போவம் எண்டு யாரும் நம்பிக்கை வைக்கமாட்டாங்கதான். எங்களுக்கே நம்பிக்கை வரேல்லத்தான். ஆனா அரை மணித்தியாலத்துக்குள்ள சாவகச்சேரிக்கு போய் சேர்ந்தது, அதுவும் துளி வியர்வை, களைப்பு இல்லாமல் போய் சேர்ந்தது பெரிய நம்பிக்கையை கொடுத்தது. அன்று மாலை 6.00 மணியளவில் தர்மபுரத்தில் இருந்து விசுவமடுவை நெருங்கிக்கொண்டிருந்தபோது நானும் கிரியும் அந்த நம்பிக்கை பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தோம். இதுவரை எங்களைப் பற்றிய குறைவான மதிப்பீடே எங்களிடம் இருந்திருக்கிறது. இந்த பயணம் சரியான என்று சொல்லமுடியாவிட்டாலும் ஓரளவு எமது மதிப்பீடை சரிசெய்திருக்கிறது.  எம் நம்பிக்கை முழுமையடைந்திருந்தது.

7.30 அளவில் குமணனிடம் இருந்து அழைப்பு வந்தது. கச்சாய் வீதி தொடக்கத்தில் நிற்கிறம். வாங்கோ எண்டார். ஐந்து பேர் நின்றார்கள். எல்லாம் நம்மைப்போல சாதாரணமாகத்தான் வந்திருந்தார்கள். வாட்டப்பா மட்டும் தனித்து தெரிந்தார். அரைக்காட்சட்டை, தொப்பி, கூலிங் க்ளாஸ், காதில் இயர் போன், சப்பாத்து, போட்டிருந்த ரீ சேர்டுக்கு மேலால், இடுப்பை சுற்றி இன்னுமோர் ரீ சேர்ட், பிங் கலர் கியர் சைக்கிள், முன்னுக்கும் பின்னுக்குமாக இரண்டு தண்ணீர் போத்தல்கள்... பயணப்பையில் பாயும் தலகாணியும் வைத்திருந்திருக்கிறார் என்பதை விசுவமடு போய் சேர்ந்தபின் தான் தெரிந்துகொண்டோம். வாட்டப்பாவை பார்த்ததும் ஒரு பயம் “இந்தாள பாத்தாலே நல்லா ஓடுவார் எண்டு தெரியுது. நாங்கதான் முக்கப்போறம்”

நாம் எதிர்பார்த்து சென்றதுபோல பயணம் ஏ9 வீதியால் இருக்கவில்லை. முடிந்தவரை ஏ9 பாதையை தவிர்த்து உட்புறங்களால் செல்வதே குமணனின் திட்டமாக இருந்தது. இடங்கள் பார்ப்பதற்கும், சைக்கிள் பயணத்துக்கும் அதுதான் சரி  சாவகச்சேரியில் இருந்து விசுவமடு 60 கிலோமீற்றர்தான் என்றாலும் நம் பாதை 90 கிலோமீற்றராக இருந்தது. பயணம் தொடங்கியது. கச்சாய் வீதி சிறிது தூரம் சென்றதும் சிக்கல் கொடுக்க ஆரம்பித்தது. யாழ்ப்பாணம் to சாவகச்சேரி கார்பெற் வீதி என்பதால் பிரச்சினை இருக்கவில்லை. ஆனால் இங்கு அப்படி இல்லை. கிரவல், ஊரி, மணல் என்று பாதைகளின் அமைப்பு அடிக்கடி மாறிக்கொண்டிருந்தது. மணல் பிரதேசங்களில் சைக்கிள் புதைந்து, நகர மறுத்து முரண்டு பிடிக்கத்தொடங்கியது. எல்லோரும் கொஞ்ச கொஞ்ச இடைவெளியில் ஓடிக்கொண்டிருக்க, வாட்டப்பா மட்டும் மிக நீண்ட இடைவெளியில் பின்னால் வந்துகொண்டிருந்தார். “வாட்டப்பாவே இவ்வளவு மெதுவாக வாறார் எண்டால்.... மனுசன் பெருசா ஏதோ திட்டம் வச்சிருக்குது. முன்னுக்கு மெதுவா தொடங்கி பின்னால உச்சத்துக்கு வருவார். நாங்கதான் கஷ்டப்படப்போறம்...” பாதை கடினமாக இருந்தாலும் இருபுறமும் அடர்ந்திருந்த நாவல் மரங்களும் அது கொடுத்த நிழலும் அருமையாக இருந்தது. இடையில் கண்ணிவெடி அகற்றும் இடத்தில் ஓய்வெடுத்தோம்.

9.30 அளவில் பளைக்கு வந்துசேர்ந்தோம். ஒரு வீட்டு கதவை தட்டி தண்ணீர் போத்தல்களை நிரப்பிக்கொண்டு காற்றாலைகள் நிறுவப்பட்டிருந்த பிரதேசத்துக்கு சென்றோம். ”தம்பி... ஃபான் பூட்டியிருக்கிற தூரம் வரைக்கும் ரோட்டு இருக்குது. அங்கால ரோட் இல்லை. காட்டுப்பாதை. போனா செத்திருவிங்கள்” எண்டார் செக்கியூரிட்டி.

“பரவாயில்லை. நாங்க போறம்”

“சரி போய் சாவுங்கோ..” சலித்துக்கொண்டே பாதை மறிப்பை திறந்துவிட்டார் அவர். மொத்தம் பதினாறு காற்றாலைகள் ஆறு கிலோமீற்றர் தூரத்துக்குள் நிறுவப்பட்டிருந்தன. கிரவல் வீதி என்பதால் கஷ்டம் இருக்கவில்லை. பாதி வழியில் எங்கள் ரெஸ்கியூ ரீம் (சன்சிகன், தனுஸ்) அழைப்பில் வந்தது.

“எங்க நிக்கிறிங்க..?”
“பத்தாவது காற்றாலைக்கு பத்தில நிக்கிறம்”
“செக்கியூரிட்டி விட்டுட்டாரா? நாங்க எப்பிடி வாறது?”
“நீங்க வாங்க. எங்க போறிங்க எண்டு கேட்பார். சாகப்போறம் எண்டு சொல்லு. விட்டிருவார்”



அவர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து ரோல்ஸும், கிழங்கு ரொட்டியும் வாங்கி தந்துவிட்டு சென்றார்கள். அதற்கு மேல் மோட்டார் சைக்கிள் வரமுடியாது என்பதால் அவர்கள் ஆணையிறவில் போய் எமக்காக காத்திருக்க வேண்டும். இந்த பயணத்தில் ரெஸ்கியூ டீமின் பணி முக்கியமானது. என்னையும் வாட்டப்பாவையும் காட்டுக்குள் இருந்து மீட்டெடுத்தது, காணாமல் போன வாட்டப்பாவை தேடி மீட்டது என்ற இரு பெரிய சம்பவங்கள். தவிர மிகுதி நேரமெல்லாம் எங்களை போட்டோ எடுப்பது, பின் கடந்துபோய் எங்காவது பஸ் தரிப்பிடத்தில் ஓய்வெடுப்பது, நாம் அவர்களை கடந்துசெல்ல மீண்டும் பைக்கை எடுத்துக்கொண்டு எங்களை கடந்து போய் அடுத்த பஸ் தரிப்பிடத்தில் ஓய்வெடுப்பது.... இடையில் பழுதாகும் சைக்கிள்களை கொண்டுபோய் திருத்திக்கொண்டு வருவது என்று முக்கியமான களப்பணிகளை ஆற்றியிருந்தார்கள்.



செந்நிற கிரவல் ரோட் முடிந்து வெள்ளை வெளேரென்ற மணல் பாதை ஆரம்பித்தபோது சிறிது நேரம் கண்கள் கூசியது. அட்டகாசமா இருக்கே என்று ஆச்சரியத்தோடு ஆரம்பித்தால் பின்னர்தான் பிரச்சினை புரிந்தது. பத்து கிலோமீற்றருக்கும் அதிகமான அந்த சதுப்புநிலக்காட்டில் மணலில் புதைந்து புதைந்துதான் சைக்கிள் ஓடவேண்டும். இரண்டு கிலோமீற்றர் தாண்டவே சீவன் போனது. சைக்கிளில் ஏறி இரண்டு மிதி மிதிக்க அடுத்த மணல் கும்பி வந்து சைக்கிள் புதைந்து அசையாமல் நிற்கும். மறுபடி இறங்கி உருட்டவேண்டும். சும்மாவே வெயில் கொளுத்தும். இது காட்டு வெயில் வேறு. பத்து நிமிடத்துக்கு ஒரு முறை தொண்டை வரண்டது. கண்கள் தீப்பற்றியது போன்று எரிந்தது. நிரப்பி வந்த தண்ணீர் போத்தல்கள் வேறு விரைவாக முடியத்தொடங்கியது. பாதைகள் வேறு சரியாக தெரியவில்லை. உச்சக்கட்டமாக, நடுப்பகுதியை அடைந்தபோது பாதை இரண்டாக பிரிந்தது. எந்த பக்கம் திரும்புவது என்ற குழப்பம். இடப்பக்கமா வலப்பக்கமா? உச்சி வெய்யில் மண்டையை பிளந்தது. எல்லோரும் இடப்பக்கம் போகலாம் என்று முடிவெடுக்க வாட்டப்பா மாத்திரம் வலப்பக்கம்தான் போகவேண்டும் என்று அடம்பிடித்தார். ”கூகிள் மப்ல இந்த பக்கம் ரோட் இருக்கிறதா காட்டினது. இதுதான் கிட்டயும். இதாலயே போவம்” என்றார். சிக்கல் என்னவென்றால் சரியாக தெரிவு செய்யவேண்டும். போய் பாத்துவிட்டு திருப்ப எல்லாம் வரமுடியாது. பிழையான வழியை தெரிவுசெய்தால் பயணம் தொடரமுடியாமல் பாதியிலேயே கைவிடவேண்டியதுதான். வாட்டப்பா வலப்பக்கத்தை சொன்னதால் எல்லோரும் நம்பிக்கையோடு இடப்பக்கத்தை தெரிவு செய்தார்கள். ஆணையிறவில் ஏறியபோதுதான் சன்சிகன் சொன்னான், ”வலப்பக்கம் போனால் ஒரு கடல்நீரேரியோடு பாதை முடிகிறது. அங்கால போட் இருந்தாத்தான் போகலாம்”

ரோல்ஸை சாப்பிட்டு சற்று எனெர்ஜி ஏற்றிவிட்டு பயணம் தொடர்ந்தது. இடைக்கிடை ஐந்து நிமிட ஓய்வோடு தொடர்ந்தோம். சுகிர்தனின் சைக்கிள் பழுதடைந்துவிட்டதால் சுகிர்தனும், பராச்சும் நடந்தே வந்தார்கள். நடுவில் நானும் வாட்டப்பாவும் மெதுவாக செல்ல, முன்னே குமணன், கிரி, பச்சன் போய்க்கொண்டிருந்தார்கள். இடையில், நடந்துவந்த பராச்சும், சுகிர்தனும் காணாமல் போக, நின்று அவர்களை கூட்டிக்கொண்டுபோகலாம் என்று மரநிழல் ஒன்றில் ஒய்வுக்காக ஒதுங்கினோம். நல்ல குளுமையான காற்று வீசியது. சற்று கண்ணை மூடி படுத்துவிட்டு கண்களை திறந்தால் கண்ணுக்கு மேலே நாவல்பழம் தொங்கியது. நல்ல பெரிய சைஸ் நாவல் பழங்கள். படுத்திருந்தே கையால் பறிக்கலாம் என்னுமளவிற்கு பதிவாக தொங்கியது. பராச் ரீமும் வந்துவிட எல்லோரும் நாவல் பழங்களை புடுங்கி சாப்பிட்டேம். மரம் எல்லாம் நாவல் பழம் நிறைந்திருக்க வாட்டப்பா மட்டும் எறும்பு கூட்டுக்குள் கை விட்டு கடி வாங்கினார்.


பராச்சிடம் வோட்டர்மெலனும், அப்பிளும் பையில் இருப்பதாக சொன்னான். சாப்பிடுவோமா என்றேன். “இல்லை. அவங்களை விட்டுட்டு சாப்பிடுறது சரியில்லை. ரோட்டுக்கு ஏறினதும் எல்லாரும் சேர்ந்து சாப்பிடுவம்” என்றான்.

மீண்டும் பயணம். ரெண்டு கிலோமீற்றர் தாண்டவில்லை. தண்ணீர் கொஞ்சம்கூட இல்லை. முன்னால் போனவர்கள் மிச்சம் இருந்த தண்ணீர் போத்தலையும் கொண்டு வெகுதூரம் போய்விட்டார்கள். தொண்டை மட்டுமல்லாது மொத்த உடலுமே தண்ணீர் இல்லாது வரண்டுவிட்டது. இதற்கு மேல் ஒரு அடிகூட நகரமுடியாது, சற்று ஓய்வெடுக்கலாம் என்று பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை சிறு மரம்கூட நிழல் கொடுக்க இல்லை. ஒரே ஒரு பற்றை மட்டும் தென்பட்டது. சிறிதளவான நிழல். பரவாயில்லை என சைக்கிளை ஓரமாக போட்டுவிட்டு பற்றைக்குள் தலையை நுழைத்துக்கொண்டு படுத்துவிட்டோம். நான், எனக்கு பக்கத்தில் வாட்டப்பா. சுகிர்தனும் பராச்சும் சிலநூறு மீற்றர்கள் பின்னுக்கு உட்கார்ந்திருந்தார்கள்.

அந்த நிழல் பெரும் வெக்கையாக இருந்தது. காற்று வேறு இல்லை. உடல் கொஞ்சம் கொஞ்சமாக சூடேறுவது தெரிந்தது. தண்ணீர் கண்டிப்பாக வேண்டும். வாட்டப்பா எதையும் நேரடியாக சொல்ல வெட்கப்பட்டார். அதனால் “உங்களுக்கு கை கால் குறண்டுதா?”, “தலை கொதிக்குதா?” என்று சந்தேகமாகவே கேட்பார். நான் ஓமென்றால் அவர் “எனக்கும்தான்” என்பார். காது அடைத்தது. பார்வை மங்கியது. தண்ணீர் அதிகமாக தேவைப்பட்டது.

வரும் வழியில் சிறிய நீர்த்தேக்கம் இருந்தது ஞாபகம் வந்தது. “அதுக்க போய் படுப்பமா வாட்டப்பா..” என்றேன். “நல்ல ஐடியாதான். ஆனா அதுவரைக்கும் நடந்து போகலாது. கஷ்டம்” என்றார். அது சரியெனப் பட்டது. அது இருந்தது ஒரு ஐம்பது மீற்றர் தொலைவில். தண்ணீர் இருந்தாலொழிய இனிமேல் ஒரு அடி வைக்கிறது கஷ்டம். உடனே சன்சிகன், குமணன் இருவருக்கும் கோல் பண்ணி நிலமையை சொன்னேன். இப்படித்தான் இருந்தது என் தகவல் பரிமாற்றம்

“தண்ணி வேணும், ஒரு அடி வைக்கேலா.. டெட் கண்டிசன்... சீக்கிரம் வாங்க..”

இடையில் ”த்ரீ வீலர் பிடிக்கேலுமெண்டா பிடிச்சுக்கொண்டு வர சொல்லுங்கோ. மெயின் ரோட் வரைக்கும் போவம்” எண்டார் வாட்டப்பா. கதைப்பதே கஷ்டமாகிவிட்டது. கண் இருண்டுகொண்டு வந்தது. இளைப்பாறி முடித்த பராச்சும், சுகிர்தனும் எங்களை கடந்து வோட்டர்மிலனை கொண்டுசென்றுகொண்டிருந்தார்கள். மயக்கம் நெருங்கிக்கொண்டிருந்தது. பதினைந்து நிமிடங்களுக்குள் ரெஸ்கியூ ரீமிலிருந்து சன்சிகன் தண்ணீர் போத்தலோடு சைக்கிளில் வந்து இறங்கினான். ஐந்து லீட்டர் தண்ணீரை இருவரும் குடித்துவிட்டு எழும்பி நின்றபோது தலை சுற்றியது.

“உங்களுக்கு தலை சுத்துறமாதிரி இருக்கா..” என்றார் வாட்டப்பா.

மீண்டும் சைக்கிளை மிதித்து ஆணையிறவில் ஏறினோம். ரெயில் பாதைக்கு அருகில் இருந்த மரநிழல் ஒன்றில் முன்னால் சென்ற நண்பர்கள் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு சேர்ந்து ஓய்வெடுத்தோம். சுகிர்தனின் சைக்கிளை மோட்டார் சைக்கிளில் ஏற்றி திருத்துவதற்கு அனுப்பிவிட்டு, நாங்கள் பயணம் தொடர்ந்தோம்.


ஆணையிறவில் இருக்கும் இராணுவத்தினரின் கடையில் ஆளுக்கு ஒரு பழச்சாறு குடித்துவிட்டு, அடுத்த ஓய்வு பரந்தன் சந்தியில் என்று சபதம் எடுத்துவிட்டு தொடர்ந்தாலும் துரதிஷ்ட வசமாக இடையில் மூன்று இடங்களில் ஓய்வு எடுக்கவேண்டியதாகிற்று. ஏற்கனவே காட்டுக்குள் அலைந்ததில் மொத்த எனெர்ஜியும் அழிக்கப்பட்டிருந்தது. ஆணையிறவில் எதிர்க்காற்று வேறு. எனக்கோ தொடந்து போகலாம் என்று நம்பிக்கையே போயிற்று. இடையில் திரும்பி போகலாம் என்று முடிவெடுத்தேன். “நீ வராமல் நாங்கள் போகமாட்டம்” என்றார்கள் நண்பர்கள். சரி என்று முக்கி தக்கி பரந்தனை சென்றடைந்து பரந்தன் சந்தியின் நடுவில் குப்பை கூழங்களோடு இருந்த மரநிழல் ஒன்றில் மல்லாக்க படுத்தோம். மக்கள் விநோதமாக பார்த்துக்கொண்டு சென்றார்கள். நாங்கள் ஓரளவு சமாளித்து சென்றுகொண்டிருக்க, வாட்டப்பா எங்களுக்கு பின்னால் ஒரு கிலோமீற்றர் இடைவெளியில் முக்கி தக்கி வந்துகொண்டிருப்பார்.

”நீங்கள் கோவித்தாலும் பரவாயில்லை. கிளிநொச்சி வரைக்கும் வந்திட்டு நாங்க யாழ்ப்பாணம் திரும்பப்போறம்” என்று உறுதியாக முடிவெடுத்தார்கள் வாட்டப்பாவும், பச்சனும். எனக்கும் அவர்களது முடிவில் உடன்பாடு இருந்தது. பரந்தன் சந்தியில் ஒரு சோடாவும், பாதி மிதிவெடியும் சாப்பிட எனர்ஜி திரும்பியது. அதன் பின் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. கிரியும் நானும் பெரியதொரு இடைவெளியில் முன்னுக்கு சென்றுகொண்டிருப்போம். மற்றவர்கள் பின்னால் வர, வாட்டப்பா மட்டும் கண்ணுக்கு தெரியமாட்டார். கிளிநொச்சி சென்று, வட்டக்கச்சி பக்கமாக திரும்பினோம். காலையில் ஆரம்பித்தபோது இருந்த அதே எனர்ஜியுடன் 11 கிலோமீற்றர் தூரத்தை இருபது நிமிடங்களில் கடந்து, வட்டக்கச்சி மகாவித்தியலயத்துக்கருகில் மற்றவர்களுக்காக காத்திருந்தோம். மற்றவர்கள் எம்மை கடந்துபோனார்கள். வாட்டப்பாவை காணவில்லை. சரி, வாட்டப்பாவை கூட்டிக்கொண்டு போகலாம் என்றால் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியும் ஆளை காணவில்லை. “வாட்டப்பாவை காணோம்” என்ற தகவல் பரவ, உடனடியாக ரெஸ்கியூ ரீமை அனுப்பினோம். சில நிமிடங்களில் அழைத்து வந்தார்கள். நடந்தது இதுதான். வாட்டப்பா களைப்புற்று மரம் ஒன்றில் சைக்கிளை சாத்திவிட்டு ஓய்வெடுத்திருக்கிறார். சைக்கிள் வழுக்கி விழுந்து செயின் உடைந்திருக்கிறது. அப்படித்தான் சொன்னார்.

மாலை 5.30க்கு புளியம்போக்கனையில் ப்ளேன்ரீ குடித்துவிட்டு - ஒரு ப்ளேன்ரீ பத்து ரூபாதான் - ஆறு மணிக்கு விசுவமடுவை அடைந்தோம்.



விசுவமடு பெயர்ப்பலகையை பார்த்ததும் நானும் கிரியும் கைகளை கோர்த்துக்கொண்டு உயர்த்தி வெற்றிக்கூச்சலிட்டோம். டியூசன் முடிந்து போய்க்கொண்டிருந்த பிள்ளைகள் வினோதமாக பார்த்தார்கள். மக்கள் அப்படித்தான். திரும்பி பார்த்தால் ஒரு கிலோமீற்றர் இடைவெளியில் மற்றவர்கள் வந்துகொண்டிருந்தார்கள்.

விசுவமடுவில்
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிக்கிட்டதால், மொத்தமாக பார்க்கையில் 120 கிலோமீற்றர்களுக்கும் அதிகமாகவே பயணித்திருந்தோம். கிட்டத்தட்ட யாழில் இருந்து வவுனியா போகும் தூரம். இடையில் குறிஞ்சாத்தீவு சதுப்புக்காட்டில் சிக்கி திணறியதில் நிறைய தூரம் செலவாகிவிட்டது. அதோடு அந்த பயணத்தூரத்தை கிலோமீற்றர் கணக்கில் மட்டும் சொல்லிவிடமுடியாது. சைக்கிளை புதைத்து ஓடவிடாமல் இழுத்த மணலின் கொடுமையையும் சேர்த்தே அளவிடவேண்டும்.

விசுவமடுவில் தங்கிறது திங்கிறதுக்கான ஏற்பாடுகளை செய்திருந்த குமணனின் நண்பர் வர தாமதமாகியதால் விசுமடு சந்தி ஆட்டோ ஸ்ராண்டில் உட்கார்ந்திருந்தோம். பசிவேறு வயிற்றை புரட்டியது. அதிகம் சாப்பிட்டால் ஓடுவது கஷ்டம் என்று இரண்டு மூன்று ரோல்ஸ், பழச்சாறூகள் மட்டுமே எடுத்திருந்தோம்.

ஏழு மணியளவில் நண்பர் வந்து அழைத்துச்சென்றார். விசுவமடு சந்தியில் இருந்து இரண்டு கிலோமீற்றர்கள் உள்ளே செல்லவேண்டும். எங்களுக்கென்று தனியாக ஒரு வீடு ஒதுக்கி தரப்பட்டது. போய் குளித்துவிட்டு வந்து உட்கார குமணன் புல்லாங்குழல் வாசிக்க தொடங்கினார். அற்புதமான இசை ஆசுவாசப்படுத்தியது. சாப்பாடு வந்தது. திறந்தால் சோறும் நாட்டுக்கோழி குழம்பும். ப்பா... வாயில் வைக்க சுவை அப்படியே நின்றது. அந்த நண்பர் வேறு ரொம்ப நல்லவராக இருந்தார். கேட்டதெல்லாம் உடனுக்குடன் வாங்கி வந்தார். இரவு பாடல், உரையாடல் என அட்டகாசமாக கழிந்தது.

பன்னிரெண்டு மணிக்குமேல் எல்லோரும் தூங்கிவிட எனக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. தோள், கைகள் செமையாக வலியெடுத்தது. தூக்கம் வராமல் புரண்டு படுத்துப்பார்த்துவிட்டு ஒரு கட்டத்தில் எழுந்து உட்கார்ந்துவிட்டேன். சிறிது நேரம் சுவரோடு சாய்ந்து, சிறிது நேரம் கட்டிலில் சாய்ந்து என உட்கார்வதை கூட விதம் விதமாக செய்துகொண்டிருந்தேன். கடைசியாக மூன்று மணி இருக்கும், கட்டிலில் தலகணியை போட்டுவிட்டு அதில் தலை சாய்த்து உட்கார்ந்திருந்தேன். இப்படி துன்பப்பட்டுக்கொண்டிருந்தபோது திடீரென்று கண்விழித்த கிரி தன் மொபைலை எடுத்து என்னிடம் தந்து “இதில டேட்டா இருக்கு, ஏதாவது வீடியோ பார்...” என்றான். இவ்வளவு அன்பா என்று கண் கலங்க ஆரம்பிக்கும்போது தலகணியை புடுங்கிக்கொண்டான். நல்லவேளை கண்ணீரை வேஸ்ட் ஆக்கவில்லை.

அதிலும் பெரிய சம்பவம், குமணனின் போஸ்டில் யாரோ ஒருவர் முப்பது வருடங்களுக்கு முன்னர் பிரபலமாக இருந்த “வெளிக்கிடடி விசுவமடுவுக்கு” நாடகத்தை பற்றி எழுதியிருந்தார். தூக்கத்தில் இருந்த கிரியை எழுப்பி அதைப்பற்றி சொன்னேன். படுத்திருந்தபடியே தலையை மட்டும் தூக்கி, கிட்டத்தட்ட பதினைந்து நிமிடமாக அந்த நாடகம் பற்றி பிரசங்கம் செய்துவிட்டு அடுத்த செக்கனே தூங்கிப்போனான்.

அடுத்தநாள், யாராவது ஒருவர் கொண்டுவந்த சைக்கிள் அனைத்தையும் ஒரு பட்டாவில் ஏற்றி கிளிநொச்சிக்கு கொண்டுபோய் அங்கிருந்து ட்ரெயினில் ஏற்றி அனுப்பிவிட, நாமெல்லாம் பஸ் எடுத்து ஊருக்கு திரும்புவதாக திட்டம். வாட்டப்பாதான் பொருத்தமான ஆள் என்பதால் அவரே சைக்கிள் பார்சல் பண்ணும் திட்டத்தை கையில் எடுத்திருந்தார். சிக்கல் என்னவென்றால், ட்ரெயினில் பார்சல் போடுவதாக இருந்தால் சைக்கிளுக்கு நம்பர் ப்ளேட் வேணும் என்றுவிட்டார்கள். சத்தியசோதனை தருணம் அது. எந்த பஸ்சிலும் கரியர் இல்லை என்பதால் சைக்கிள் ஏற்றமுடியாது. திரும்பவும் ஓடி யாழ்ப்பாணம் வரமுடியாது. இறுதியாக ஒரு பட்டாக்காரர் குறைந்த செலவில் யாழ்ப்பாணம் கொண்டுபோய் விடுவதாக ஒத்துக்கொண்டார்.


காலை விசுவமடு நண்பரின் வீட்டில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த காலை வெய்யிலில் விசுவமடுவின் ரம்மியம் முழுமையாக வெளிப்பட்டது. விசுவமடுவுக்கென்று தனியான மண்வாசம் ஒன்று உண்டு. எட்டு வயதுவரை அந்த வாசத்துடனேயே வாழ்ந்திருக்கிறேன். அந்த வாசம் இழந்த எனர்ஜியை முழுமையாக திருப்பி தந்தது. மீண்டும் யாழ்ப்பாணத்துக்கு சைக்கிளில் போய்விடலாம் என்ற உற்சாகம் ஏற்பட்டது. அந்த மண்வாசத்தோடு, இருபுறமும் வாய்க்கால்களில் நீரோடும் பாதைகளில் பயணித்தோம். இரு புறமுமே அடர்ந்து வளர்ந்த மரங்களும் தோப்புக்களுமாய்.... அவற்றுக்கிடையே குட்டி குட்டியான வீடுகள். அந்த அழகை அனுபவிக்க எமக்கிருந்த சில மணிநேரங்கள் போதவில்லை.

எல்லா இடமுமே ஒருகாலத்தில் எனக்கு பழக்கப்பட்டதாக நினைவிருந்தது. ஒரு குட்டிப்பயலாக அங்கெல்லாம் ஓடித்திரிந்திருக்கிறேன். நண்பரின் வீடு இருந்த இடம்கூட நினைவில் இருப்பதாக படுகிறது. அப்பம்மாவோடு ஜம்புக்காய் புடுங்க அந்த இடத்திற்கு நான் வந்திருக்கிறேன். என் நண்பர்கள் நினைவுக்கு வந்தார்கள். “தாரணி”. என் சிறுவயது தோழி. அல்லது என் முதல் காதலி. அவளோடுதான் தினமும் பள்ளிக்கூடம் வந்திருக்கிறேன். அந்த பகுதியெங்கும் அவளோடுதான் ஓடி விளையாடியிருக்கிறேன். விவரம் தெரியாமலே நான் அப்பாவாகவும் அவள் அம்மாவாகவும் வேடம் கொண்டு விளையாடியிருக்கிறோம். திடீரென்று ஒருநாள் அவள் காணாமல் போனாள். அவள் யாழ்ப்பாணம் போய்விட்டதாக சொன்னார்கள். 98 இல் நாங்களும் யாழ்ப்பாணத்துக்கு வந்துசேர்ந்தோம். நீண்ட காலங்களின் பின் அவள் தன் குடும்பத்தோடு எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள். வளர்ந்து பருவப்பெண் ஆகியிருந்தாள். என்னை பார்த்து வெட்கத்தோடு சிரித்தாள். எதுவுமே கதைக்காமல் வெட்கத்தோடு இருந்தாள். போய்விட்டாள். பின் அவளை சந்திக்கவே இல்லை.

“விசுவமடு - வன்னியின் ஆலப்புழா” என்றேன். கிரி ஒத்துக்கொண்டான். நண்பரின் வீட்டில் அட்டகாசமான ஒரு தேநீர் தந்தார்கள். அதை குடித்து முடித்ததும் உணவு பரிமாறப்பட்டது. அரிசிமா புட்டும், சம்பலும் கூடவே நெத்தலி பொரியலும். என்னை கேட்டால் அன்றைய சைக்கிள் பயணத்தை விட நண்பரின் வீட்டு சாப்பாடுதான் மிகப்பெரிய அனுபவம் என்பேன்.

சாப்பிடும்போதே வாட்டப்பா தன் விபத்து கதைகளை சொல்ல ஆரம்பித்தார்.

விபத்து 01

வாட்டப்பா கொழும்பு ரெயில்வே ஸ்டேசனில் தாமதமாக வந்து சேர்ந்திருக்கிறார். ரெயில் புறப்பட்டுவிட்டது. மின்னல்வேகத்தில் ஓடி ரெயிலை நெருங்கி பாய்ந்திருக்கிறார். அவர் பாய்ந்த நேரமாக பார்த்து ப்ளாட்போம் முடிந்துவிட, சடாரென கீழே விழுந்து காலை முறித்திருக்கிறார்.

விபத்து 02

வீதி ஓரத்தில் வாட்டப்பா தொலைபேசியில் கதைத்துக்கொண்டு நின்றிருக்கிறார். அதால் போன வான்காரன் வானை வாட்டப்பாவின் கால் பெருவிரலில் ஏற்றிக்கொண்டு போய்விட்டான். விரல் முறிந்துவிட்டது.

விபத்து 03

மோட்டார் சைக்கிளில் போன வாட்டப்பா நிறுத்தியிருந்த வாகனத்தின் மீது மோதியிருக்கிறார். வைத்தியசாலையில் வாட்டப்பாவின் தந்தை “மகனே இந்த பைக்கை விற்றுவிடு” என சொல்ல, கோபமடைந்த வாட்டப்பா “போங்கப்பா.. இது எனக்கு ராசியான பைக்” என்று சொல்லியிருக்கிறார்.

வாட்டப்பாவின் கதைகளோடு செம கலகலப்பாக உணவு உண்டோம். குழந்தை மனசுக்காரன் அவர். இனி எந்த பயணமானாலும் அதில் வாட்டப்பா கட்டாயம் இருக்கவேண்டும் என்பது எல்லோரதும் ஒருமித்த தீர்மாணமாக இருந்தது. 

உணவை முடித்துவிட்டு விசுவமடு சந்தி நோக்கி பயணித்தோம். இடையில் விசுவமடு மகாவித்தியாலத்தை கடந்துசெல்லும்போது நாஸ்டால்ஜியா தாக்கியது. அந்த பள்ளிக்கூடத்தில்தான் மூன்றாம் ஆண்டுவரை நான் படித்தேன். நீரோடிக்கொண்டிருக்கும் வாய்க்கால்களும், மரத்தோப்புக்களும் சூழ்ந்த இடம் அது.  நான் ஓடித்திரிந்த இடங்கள், விளையாட்டு மைதானம், விளையாட்டு போட்டிகளில் நடந்த சம்பவங்கள் எல்லாம் ஞாபகத்தில் வந்தது.

சந்தியில் பட்டா ரெடியாக நின்றது. சைக்கிள்களை ஏற்றி முடிய இடம் போதவில்லை. ட்ரைவருக்கு பக்கத்தில் கிரியும், சைக்கிள்களுக்கு மேல் பச்சனும், வாட்டப்பாவும் இருக்க நான் பின்பக்கத்தில் ஏறி அமர்ந்துகொண்டேன். மிகுதி நண்பர்கள் பஸ்சில் ஏறி வந்தார்கள்.


மாம்பழம் சந்தியில் இறங்கியதோடு நம் பயணம் முடிவுக்கு வந்தது. பருத்தித்துறை நண்பர்கள் குமணன், வாட்டப்பா, பச்சன் மூன்றுபேரும் திருப்பவும் கொடிகாமத்தில் இருந்து பருத்தித்துறைக்கு சைக்கிளில்தான் போய் சேர்ந்ததாக தொலைபேசியில் சொன்னார்கள்.

அடுத்த பயணம் நடந்தே போவது என்ற திட்டமிடலுடன் இப்பயணம் முடிந்தது. தொடரும் ;)
Share This:   FacebookTwitterGoogle+

Monday, August 8, 2016

சில காதல் கதைகள் - குறுங்கதை

ஆறுமணி ஆகியிருந்தது. கோட்டைப்பகுதி சற்று பரபரப்பாகவே இயங்கிக்கொண்டிருந்தது. ஆறு ஏழு இளம் குடும்பங்கள், உடற்பயிற்சி செய்யும் ராணுவ வீரர்கள், நடைப்பயிற்சி செய்யும் யாழின் கொழுத்த குடும்பத்து மூத்தவர்கள சிலர் என மனிதர்கள் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டிருந்தார்கள். எட்டு வயது மதிக்கத்தக்க வாடலான சிறுமியொருத்தி தன் தங்கையை இடுப்பில் சுமந்தபடியே கச்சான் சரைகளை ஐம்பது ரூபாவுக்கு விற்க முயற்சித்துக்கொண்டிருந்தாள். இத்தனை பரபரப்புக்குள்ளும் கோட்டை சுவர் மேல் இருந்த இளைஞர்களுடன் சாடையால் பேசிக்கொண்டிருந்த பெண்ணொருத்தி சற்று நேரத்தில் அவர்களுடன் காணாமல் போக, அவளைப்போலவே பாவனை கொண்ட இன்னொருத்தி அந்த இடத்தை ஆக்கிரமித்துக்கொண்டாள்.

இந்த சலனங்கள் எவற்றையும் பொருட்படுத்தாது எனக்கு சற்று முன்னால் அமர்ந்தவாறு ஊடறுத்து வந்த அந்த சிறு கடலையும் அதை தாண்டி அடர்த்தியாக தெரியும் மண்டைதீவு கண்டல்தாவரங்களையும் பார்த்துக்கொண்டிருந்தாள் நிவேதா. தனித்திருத்தலை அனுபவிப்பது பற்றி அவளிடம் கற்றுக்கொள்ளவேண்டும்.

”பாத்தது காணும். அவளும் கொஞ்ச நேரத்தில போயிடுவாள்”

திரும்பி நிவேதாவை பார்த்தேன். சற்று முன் இருந்ததை விட ஒரு அமைதி அவள் முகத்தில் தெரிந்தது.

“சும்மாதான் பாத்துக்கொண்டிருந்தன்”

“எனக்கு தெரியும்....” சிரித்துக்கொண்டே சொன்னாள். ”யாழ்ப்பாணம் போனால் நீ பழுதா போயிருவ” என்று சில வருடங்களுக்கு முன் சொன்னதை நினைத்துக்கொண்டாளோ என்னவோ.

சி.ரி.பி பஸ் ஒன்று மண்டைதீவு பாலத்தை நோக்கி விரைந்துகொண்டிருந்தது. அவளது பார்வையும் பஸ்சை பின் தொடர்ந்தது.

”நினைவிருக்கா உங்களுக்கு... ஊர்ல இருந்து ரியூசனை கட் பண்ணிட்டு றியோவுக்கு கூட்டிக்கொண்டு வந்திங்க....”

“ம்ம்...”

“போகும்போது நான் பயந்துகொண்டே இருந்தன். தெரிஞ்சவங்கள் பாத்திருவாங்களோ, லேட் ஆனா வீட்ட தேடுவாங்கள் எண்டு உங்களை குடைஞ்சுகொண்டே வந்தன்...

நீங்க எதுவுமே சொல்லேல்ல.... பஸ்ல இருந்து இறங்கி போகும்போது என் கைய பிடிச்சிட்டே வந்திங்க....

எனக்கு எந்த பயமுமே இருக்கேல்ல அப்பேக்க... அவ்வளவு தெளிவா இருந்தன் அண்டைக்கு.. "

எதுவும் மேசாமல் அமைதியாக இருந்தேன். அவளது மடியில் இருந்த குழந்தை என்னை வினோதமாக பார்த்துக்கொண்டிருந்தது.

சில நிமிட அமைதிக்கு பின் கேட்டாள் “உங்களுக்கு என்னில கோபமே இல்லையா வருன்”

“இப்ப இல்ல நிவேதா... உங்களுக்கு கல்யாணம் ஆகிற்றுது எண்டு கேள்விப்பட்ட அந்த நிமிசத்தில கூட உங்களில கோபம் வரேல்ல”

“ஏன்.. நான் செய்தது துரோகம் இல்லையா”

“நீங்க என்ன எந்தளவுக்கு காதலிச்சிங்க எண்டது எனக்கு தெரியும் நிவேதா. கல்யாணம் பண்ணுற முடிவுக்கு நீங்க ஒகே சொல்லியிருக்கிறிங்க எண்டா அதுக்கு பின்னால உங்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய கஷ்டத்தை என்னால விளங்கிக்கொள்ள முடிஞ்சுது..”

நிவேதா என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

”எனக்கு என்னிலதான் கோபம். உங்களை அவ்வளவு கஷ்டத்தில தனியா கைவிட்டுட்டேன் எண்டு... இப்ப சந்தோசமா இருக்கு நிவேதா. உங்களுக்கு நல்லதொரு லைஃப் கிடைச்சிருக்கு”

நிவேதாவின் கண்கள் கலங்கியிருந்தது.

"பேர் ஹரிஸ்..” சொல்லிக்கொண்டே குழந்தையை என்னிடம் கொடுத்தாள். குழந்தை இப்போது என்னை விநோதமாக பார்க்கவில்லை. ஒட்டிக்கொண்டது.

“அவரும் உங்கள பார்க்க வாறதாத்தான் சொன்னார். நான் தான் வேண்டாம் எண்டுட்டன்”

விடைபெற்று செல்லும்போது திரும்பி பார்த்தாள்.

“சந்தோசமா இருக்கு வருன்”

அவள் போனபின்னும் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தேன். புதிய பெண்ணை காணவில்லை. பழையவளிடம் கச்சான் விற்ற சிறுமி பணத்தையும் மிகுதி கச்சான்களையும் கொடுத்துக்கொண்டிருந்தாள்.
Share This:   FacebookTwitterGoogle+

Monday, July 4, 2016

தொகுப்பின் திறமையினால் படைப்புகளுக்கு மெருகூட்டியவர் மதுரன் ரவீந்திரன் !

“முழு நீளத் திரைப்படமானாலும் சரி அல்லது குறும்படமானாலும் சரி அவற்றின் திரைக் கதையானது அதன் தயாரிப்பில் இரண்டு நிலைகளில்தான் முழுமைபெறுவதாக நான் கருது கிறேன். ஒன்று இயக்குனரின் மேசையில். மற்றையது படத்தொகுப்பாளரின் மேசையில்” என்று தனது அனுபவத்தை சொல்லுகிற மதுரன் ரவீந்திரனிடம் அவர் ஆரம்ப வாழ்க்கை பற்றிக் கேட்டேன்.

“அம்மா வேலணையையும் அப்பா புளியங்கூடலையும் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். பிறந்து ஒரு மாத காலம் மாத்திரமே வேலணையிலிருந்ததாக அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன்.பின்பு விசுவமடுவுக்கு இடம்பெயர்ந்தோம். பின்பு மீண்டும் திரும்பவும் புளியங்கூடலுக்கு வந்துவிட்டோம். எனது ஆரம்ப கல்வி விசுவமடு மகாவித்தியாலயத்தில் தொடங்கியது. இடையில் பற்பல மாற்றங்கள். சாதாரண தரம் வரையும் வேலணை சென்றல் கல்லூரியிலும் உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக் கல்லூரியிலும் கற்றேன். உயர் தரம் வரை மொத்தம் ஆறு கல்விக் கூடங்களைச் சந்தித்திருக்கிறேன். 2007 ஆம் ஆண்டு புளிய ங்கூடலிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இடம் பெயர்ந்து யாழ் நகரத்திற்கு வந்தேன். உயர் தரத்திற்கு பிறகு  ஓய்வு நேரம் அதிகம் கிடைத்தது. அப்போதுதான்  திரைப்படங்களை அதிகமாக பார்க்கும் சந்தர்ப்பம் கிட்டியது. மொழி கடந்து பல படைப்புகளைப் பார்த் தேன்.  தொலைக்காட்சி வாடகைக்கு எடுத்து, ஜெனரேட்டர் மின்சாரத்தில் இரவிரவாக படம் பார்த்த காலத்தில் தொடங்கிய சினிமா மீதான மோகம் இந்த காலத்தில் மேலும் அதிகரித்தது. சினிமா குறித்த ஆழமான தேடலுக்கும் வழிவகுத்தது. அந்தக் காலகட்டத்தில் வலைப்பதிவில் எழுதிக்கொண்டிருந்தேன். நண்பர் மதி சுதாவும் வலைப்பதிவில் எழுதிக்கொண்டிருந்தார். அதனூடாக நாம் நண்பரானோம். பின்பு “ஆறுதல்” என்ற தொண்டர் நிறுவனத்தில் இருவரும் ஒன்றாகப் பணிசெய்யக் கூடிய சந்தர்பம் கிடைத்தது. அப்போது இருவரும் குறும்படம் எடுக்க விருப்பங் கொண்டிருந்தாலும்  வளங்களில்லாததால் முயற்சியைக் கைவிடவேண்டியதாயிற்று. சில நாட்களின் பின்னர் ஹரிகரன் என்ற நண்பரைச் சந்தித்தேன். அவர் கொழும்பில் நடக்கவிருந்த குறும்படப் போட்டிக்கு ஒரு படம் தயாரிக்கவிருப்பதாகச் சொன்னார். அந்தத் தயாரிப்புக்குத் தரப்பட்ட கால அவகாசம் ஒரு நிமிடம். அதற்காக படம் ஒன்றினைத் தயாரித்தோம். அதனை “திருப்பம்”  என்ற தலைப்பில் ஹரிகரன் இயக்க அதன் படத்தொகுப்பை நான் செய்தேன். அந்தப் படைப்புக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது. அதுவே எனது கன்னிச் செயற்பாடு. எனது தேடலின் மூலமாகவே நான் படத்தொகுப்புக்கான  மென் பொருளைக் கையாளக் கற்றுக் கொண்டேன்.  படத்தொகுப்பு என்பது வெறுமனே மென்பொருளை கையாள்வது மாத்திரமல்ல. அது ஒரு கதை சொல்லல் முறை. இயக்குனரின் கையில் இருந்த கதையை பூரணப்படுத்தும் உத்தி என என் தேடல்களின் மூலம் தெரிந்துகொண்டேன்.” என தனது அனுபவத்தைச் சொன்னவரிடம் அவர் தொடர் முயற்சி பற்றிக் கேட்டேன்.

இயக்குனராகவோ, படத்தொகுப்பாளராகவோ, எப்படியாயினும் சினிமாவில் சிறந்ததொரு கதைசொல்லி ஆகவேண்டும் என்பதுதான் என் கனவு. படத்தொகுப்பாளராக இப்போது சந்தர்ப்பம் கைகூடியிருக்கிறது. இந்த துறையில் மேலும் என்னை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்பதே இப்போதைய தேவையாக இருக்கிறது. 

நன்பன் சஞ்சிகன் அறிமுகமான நாளில் இருந்து இருவரும் நம்மிடமுள்ள கதைகளை பரஸ்பரம் பரிமாறிக்கொள்வதும் அதுபற்றி விவாதிப்பதுமாக இருக்கிறோம். அந்த விவாதங்களில் நன்றாக இருக்கிறது என தெரிவு செய்யப்படும் கதைகள் படமாகும். சஞ்சிகனின் கதைகள் சில படமாகிவிட்டன. எனது கதைகள் படமாகுவதற்கான ஒரு தருணத்திற்காக காத்திருக்கின்றன. அந்த தருணம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அதுவாக நிகழும். அதற்காகத்தான் நானும் காத்திருக்கிறேன். அதேபோல எனது விஞ்ஞான புனைவு ஒன்றை "Pursuit" என்னும் பெயரில் திரைப்படமாக எடுத்துக்கொண்டிருக்கிறார் சஞ்சிகன்” என்றார் அவர்.

தங்களது கதைகள் எப்படியானவை? சமூக நலன் சார்ந்த செய்திகளை சொல்லுகின்ற சமூக விழிப்புணர்வை தருபவைகளாக அமையுமா? அல்லது வெறும் கதைப்படங்களாக மட்டும் இருக்குமா? என்று மதுரனிடம் கேட்டேன்.

கலை என்பது வெறுமனே பொழுதுபோக்கு ஊடகமாக அமைந்துவிட்டால் நல்லது என்பதுதான் என் கருத்து. சமூகத்துக்கு அச்சுறுத்தலான கருத்துக்களை சினிமாவினூடாக விதைக்காதவரை சமூக நலன் சார்ந்த செய்திகளும் அவசியமற்றதாகத்தான் இருக்கும். ஆக, கலை ஒரு கொண்டாட்டத்திற்குரியதாக இருக்கும். ஆனால் இன்றைய சினிமா நிலவரம்தான் எல்லோருக்கும் தெரிந்ததே? 

சமூக நலன்சார்ந்த செய்திகளை திரைப்படங்களில் சொல்ல முயற்சிக்கும்போது அது திணிக்கப்பட்டதாகவோ, யதார்த்த வாழ்விற்கு அப்பாற்பட்டதாகவோ இருந்தால் மக்கள் இலகுவில் அவற்றை புறக்கணித்துவிடுகிறார்கள். நாம் கண்ட அனுபவம் இதுதான். சமீபத்தில்கூட “இறைவி” என்னும் தென்னிந்திய திரைப்படம் ஒன்று பெண்ணிய சுதந்திரம் பற்றி பேசியதற்காக கவனத்தை பெற்றது. ஆண்கள் பலரும் பெண்களின் நிலை பற்றி வருத்தத்தோடு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்கள். உண்மையிலேயே அவர்கள் பெண்களின் உணர்வுகளை புரிந்துகொண்டார்களா என்றால் இல்லை. ஒருவாரம் கழிந்ததும் இறைவி திரைப்படம் கொடுத்த திரையரங்க மனநிலை மற்றும் கிளர்ச்சியில் இருந்து விடுபட்டு வழக்கமான  வாழ்விற்குள் நுழைந்துவிட்டார்கள். ஆக, இறைவி திரைப்படம் தற்காலிகமானதொரு மனக்கிளர்ச்சியை ஏற்படுத்தியதே தவிர எந்தவிதமான சமூகமாற்றத்துக்கும் அடிகோலவில்லை என்பதே யதார்த்தம். ஆகவே எனது படங்கள் எந்தவிதமான சமூக அச்சுறுத்தல் கருத்துக்களையும் விதைக்காத, சாதாரண பொழுதுபோக்கு படங்களாகவே இருக்கும். என்கிறார் மதுரன் ரவீந்திரன்.

சினிமாத்துறையில் உங்கள் முயற்சிகளுக்கூடாக யாரை அடையாளப்படுத்துகிறீர்கள்? யாரை முன்மாதிரியாகக் கொள்ளுகிறீர்கள்?

”எனக்கு பல இயக்குனர்களை பிடிக்கும். கிம் கி டுக், அல்கேந்திரோ இன்னாரிட்டு, நோலன் என பலரை பிடிக்கும். வான்கோவின் ஓவியங்களை போல கிம் கி டுக்கின் படங்களை காலவரையற்று பார்த்துக்கொண்டே இருப்பேன். ஆனாலும் யாரை முன்மாதிரியாக கொள்வது என்பதில் சிக்கல். முன்மாதிரி என்பதில் எனக்கு உடன்பாடில்லை. நான் யாரையும் முன்மாதிரியாகக் கொள்வதில்லை. எனக்கென ஒரு தனித்துவத்தைப்பேண வேண்டுமென்பது எனது குறிக்கோள். எனது படைப்புகளில் எமது அடையாளங்கள் அதிகம் பேணப்பட வேண்டு மென்பதுவும், அவற்றில் எமது கதைகளையே  சொல்ல வேண்டும் என்பதுவும் எனது விருப்பமும் எதிர்பார்ப்புமாகும்.

பொதுவாக சினிமா துறை என்று பார்க்கப்போனால் ஈழத்துச் சினிமாத்துறையில் உள்ளவர்கள்  ஈரானியத் துறையை தமக்கு முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம். அதாவது ஈரானிய சினிமா துறையை, அதன் வளர்ச்சியை எடுத்து கொள்ளலாமேயொழிய ஈரானிய சினிமாக்களை அல்ல. ஈரானியர்களின் வாழ்வியல் வேறு எமது வாழ்வியல் வேறு. இரண்டையும் ஒப்பிடமுடியாது. ஈரானிய சினிமாவை எடுத்துக் கொண்டால் அது இப்போது நாங்கள் இருக்கின்ற தொரு சூழ்நிலையில் இருந்துதான் எழுச்சியும், வளர்ச்சியும் பெற்றிருக்கிறது. எப்படியென்றால் எமது சினிமாவின் உண்மைத் தன்மையை எப்படி தென்னிந்திய சினிமாத்துறை பாதிப்பிற்கு உள்ளாக்குகிறதோ, அப்படியே அமெரிக்க சினிமாக்களும் ஈரானிய சினிமாவின் வளர்ச்சியை ஒட்டுமொத்தமாகப் பாதிப்பிற்குள்ளாக்கியிருந்தது. அந்தக் காலகட்டத்தில் ஈரானிய சினிமாக்களெல்லாம் அமெரிக்க சினிமாவின் தழுவல்களாகவே அல்லது அவற்றின் பிரதிகளாகவே இருந்திருக்கின்றன. அத்தனை பாதிப்பிற்கு உள்ளாகியிருந்த ஈரானிய சினிமாவானது ஈரானியப் புரட்சியின் பின்னர்தான் எழுச்சி பெற்றதைக் காணலாம். எனவேதான் ஈரானிய சினிமாத் துறையைப் பின்பற்ற வேண்டுமென்று சொல்கிறேன்” என்றார் அவர்.

ஈழத்து சினிமாவானது எதிர்காலத்தே ஆரோக்கியமானதும் எங்களுக்கானதுமான சினிமாவாக வர வாய்ப்பிருக்கிறதா? என எனது உரையாடலின் முடிவில் மதுரனைக் கேட்டேன்.

“தற்போது ஈழத்து சினிமாவானது ஒரு கலங்கல் நிலையிலேயே உள்ளது. உடனடியாக அத்தகைய வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் ஆரோக்கியமான எதிர்காலம் உண்டென்பதற்குச் சான்றாக அவ்வப்போது நம்பிக்கையைத் தரக்கூடிய படைப்புகளும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அத்தகைய படைப்புகளின் படைப்பாளிகள் தான் எங்களுக்குரிய சினிமாவின் ஆரம்பகர்த்தாக்கள் என எண்ணுகிறேன். அத்துடன் ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்கக் கூடியவர்களும் அவர்களே” என தனது கருத்தைத் தெரிவித்த மதுரன் அடக்கமானவர். தனது கருத்துக்களை உறுதி படத்தெரிவிப்பவர். சொல்லிலும் விடச் செயலில் நாட்டமுள்ளவர். வாசிப்பதில் அதிக ஆர்வமும்,  ஆழ்ந்த இலக்கிய இரசனையையுமுடைய ஒரு இளைஞனைச் சந்தித்த திருப்தியில் அவரிடமிருந்து விடைபெற்றேன்.

நேர்காணல்
கணபதி சர்வானந்தா

Share This:   FacebookTwitterGoogle+

Saturday, March 26, 2016

”ஈழத்து சினிமா” - கோடம்பாக்கத்தின் பிரதியாக்க கனவு !

இலங்கையை பொறுத்தவரை சிங்கள சினிமா ஓரளவு பலமான கட்டமைப்புடன் இயங்க ஆரம்பித்து பலகாலம் ஆகிவிட்டது என்றே சொல்லலாம். குறுகியதொரு பரப்பை களமாக கொண்ட வணிக சினிமாவும் சரி, சர்வதேச பார்வையாளர்களை இலக்காக கொண்ட உலகசினிமாவிலும் சரி சிங்கள சினிமா நன்றாக கால் பதித்துக்கொண்டுள்ளதோடு தொடர்ச்சியான இயக்க நிலையிலும் உள்ளது.

தமிழ் சினிமாவின் நிலை என்னவாக இருக்கிறது? புலிகளின் காலத்தில் பிரச்சார படங்களை தாண்டி சர்வதேச பார்வையாளர்களுக்கான  திரைப்பட முயற்சிகள் எடுக்கப்படவில்லை ஆயினும், திரைப்படத்துறை சார்ந்த தெளிவான திட்டமிடலும், நகர்வும் இருந்தது. வெளிநாட்டு திரைப்படங்கள் (தென்னிந்திய சினிமா உள்ளடங்கலாக) முற்றிலுமாக தடை செய்யப்பட்டோ அல்லது மிக இறுக்காமான தரக்கட்டுப்பாட்டுக்கு உட்பட்டோதான் வெளியிடப்பட்டன. அதற்கு மாற்றீடாக புலிகளாலேயே முதலீடு செய்யப்பட்டு தயாரிக்கப்பட்ட ஏராளமான திரைப்படங்களும் குறும்படங்களும் பெருமளவில் மக்களின் வரவேற்பை பெற்றிருந்தன. ஈழசினிமா என்ற கனவுக்கான நல்லதொரு களம் இக்காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இந்த சூழ்நிலையை, 1979 இல் நிகழ்ந்த ஈரான் இஸ்லாமிய புரட்சிக்கு பின்னரான ஈரானிய சினிமாத்துறையின் சூழ்நிலையோடு ஒப்பிடுவது பொருத்தமாக இருக்குமென நினைக்கிறேன். ஈரான் அரசும், புலிகளும் கலைத்துறையின், முக்கியமாக சினிமாவின் தாக்கத்தையும், தேவையையும் நன்றாகவே புரிந்துகொண்டிருந்தார்கள். அதன் காரணமாகத்தான் ஒரு புறம் போர் நிகழ்ந்துகொண்டிருந்தாலும் சினிமாவுக்கான ஆதரவை தீவிரப்படுத்தியிருந்தார்கள். இருப்பினும், புலிகளால் பிரச்சார சினிமா என்ற வகையை தாண்டி வெளியே வரமுடியாமல் போன காரணத்தினால்தான் ஈரானிய சினிமா எட்டிய உச்சத்தை அவ்வளவு இலகுவில் அடைய முடியாமல் போய்விட்டது. புலிகளுக்கு பின்னரான காலத்தில், ஈழத்து தமிழ் சினிமாத்துறையை முதலில் இருந்து ஆரம்பிக்கவேண்டிய தேவை ஏற்பட்டதற்கும் இந்த  சூழ்நிலையின் தாக்கம்தான் அதிகமாக இருக்கமுடியும்.

தற்போது வரையறைகளோ, கட்டுப்பாடுகளோ அற்ற, முற்றிலும் சுதந்திரமான வெளியொன்று ஈழத்திலுள்ள திரைப்படத்துறை இளைஞர்களுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இத்தகைய சுதந்திரத்தின் வெளிப்பாடுகள் எத்தகையது என்பதை நாம் கண்ணுற்றபடியேதான் இருக்கிறோம். இப்பதிவின் பேசுபொருள் திரைப்படங்களின் உள்ளடக்கம் என்பதல்லாமல் திரைப்பட தயாரிப்பு பற்றியது என்பதால் அதை ஒருபுறம் வைத்துவிடுவோம். புலிகளின் காலத்தில் திரைப்படங்களுக்கென போதியளவு நிதி மற்றும் ஏனைய வளங்கள் புலிகளாலேயே ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. தற்போது, தயாரிப்பு என்பது நிர்வாக அமைப்பிலிருந்து தனிநபர் கைகளுக்கு மாறியதன் பின்னர், அதன் நோக்கமும், கையாளும் திறனும் முற்றிலுமாக வேறோர் பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறது. சற்று தெளிவாக சொல்லவேண்டுமானால், நல்லதொரு சினிமா துறை என்பதை விட இன்னுமொரு கோடம்பாக்கத்தை உருவாக்கும் பாதையில்தான் அது பயணிக்க ஆரம்பித்திருக்கிறது.

ஒரு பகுதி இளைஞர்கள் திரைப்படங்கள் மீதான ஆர்வத்தால் சொந்த முதலீட்டில் குறும்படங்களை உற்பத்தி செய்துகொண்டிருக்கிறார்கள். ஓரளவு புதிய முயற்சிகளிலும், ரசனைக்கேற்ற படங்களையும் கொடுப்பவர்களாகவும் இவர்களை அடையாளம் காணலாம். இவர்களுடைய ஆகக்கூடிய முதலீடு என்பது முப்பதாயிரம் ரூபாவுடன் முடிவடைகிறது. இன்னொரு பகுதியினர், புலம்பெயர் தேசத்திலிருந்தோ அல்லது ஈழத்தில் சிறு முதலாளிகளிடம் இருந்தோ முதலீட்டை பெற்றுக்கொள்கிறார்கள். கோடம்பாக்க மீள் உற்பத்தி என்ற கனவு இந்த வகையினரிடம் இருந்தே உற்பத்தியாகிறது. திரைப்படத்தின் கதை, தயாரிப்பில் ஆரம்பித்து இயக்குனர், நடிகர், நடிகை போன்றோரின் நடையுடை பாவனைகள் வரை கோடம்பாக்கம் பிரதி செய்யப்படுகிறது. ஈழத்து விஜய்களும், அஜித்களும், தனுஷ்களும் உருவாகுகிறார்கள். தமக்கான நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கிக்கொள்வதாக கற்பனைக்குள் புரள்கிறார்கள். இப்படியானதொரு மாயையான புகழ், கடந்த இரண்டுவருட காலத்தில் ஈழத்து சினிமாவை மோசமானதொரு நிலைக்குள் சிக்கவைத்திருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

மேற்கூறிய போலி அந்தஸ்துகள் எதுவுமில்லாமல், நல்ல கதை ஒன்றிற்கான தயாரிப்பாளரை பெற்றுக்கொள்வது மிக கடினமானதொரு செயல் என்னுமளவில்தான் இன்றைய ஈழத்தமிழ் சினிமா துறை இருக்கிறது. அப்படியே ஒருவர் முன்வந்தாலும், அவரது விருப்பத்துக்கு இணங்கி கதையில் சில நகைச்சுவைகளையும், சண்டைக்காட்சிகள் மற்றும் பாடல்களையும் இணைக்கவோ, தயாரிப்பாளரின் விருப்பத்திற்குரிய நடிகையை படத்தில் சேர்த்துக்கொள்ளவோ வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இருந்துதான் நாம் “நமது சினிமா” பற்றி பேசவேண்டியிருக்கிறது.  நடிப்பையே அறியாத ஒருவர் நடிகை என்னும் பெயரில் நாளொன்றுக்கு பத்தாயிரம் சம்பளமாக பெற்றுக்கொண்டிருக்க, நல்ல கதையொன்றை வைத்திருப்பவன் இருபதாயிரம் ரூபா முதலீட்டை பெற்றுக்கொள்ளமுடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் இருந்துதான் எமது “ஈரானிய சினிமா” இலக்கை கனவுகாண வேண்டியுள்ளது.

ஆக, கனவு ஈரானிய சினிமாவாகவும், நகர்வு கோடம்பாக்க சினிமாவாகவும் இயங்க ஆரம்பித்திருக்கும் எமது சினிமா துறையின் எதிர்காலம் குறித்து பலமாகவே துயரப்படவேண்டியுள்ளது. வணிக சினிமா என்பது எமக்கு தேவையான ஒன்றுதான். தொழில்நுட்ப கலைஞர்களை தொடர்ச்சியான இயங்குநிலையில், பயிற்சியில் வைத்திருக்க, கலைத்திரைப்படங்களுக்கான முதலீடுகளை இலகுபடுத்த, மக்களின் களிப்பு மனநிலையை ஈடுசெய்ய, தொழில்துறையாக்குவதன் மூலம் இத்துறையில் ஈடுபடும் இளைஞர்களின் பொருளாதார தேவைகளை சரிசெய்ய என பல்வேறு காரணங்களுக்காக வணிக சினிமாவின் தேவையை நியாயப்படுத்தலாம். ஆனால் கோடம்பாக்க சினிமாவை பிரதி செய்வதன் மூலம் வணிக சினிமா என்ற நிலையை ஒருபோதும் அடைந்துவிடமுடியாது.

ஈழத்தில் இருந்து சர்வதேச களத்துக்கு சென்ற ஒரே படமாக இளங்கோராமின் “மௌன விழித்துளிகள்” குறும்படத்தை குறிப்பிடலாம். வியாபார ரீதியாக ஒரு மாற்றத்தை கொண்டுவந்த படமாக எதை சொல்லமுடியும்? ஐந்து முதல் பத்து இலட்சம் வரை முதலீடாக கொண்டு எடுக்கப்படும் திரைப்படங்கள் போட்ட முதலையாவது மீளப்பெற்றுக்கொள்கிறார்களா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கிறது. பின் எப்படி வணிக சினிமா சாத்தியம்?

ஏன் ஈழத்து சினிமா இன்னொரு கோடம்பாக்கம் ஆகமுடியாது. அல்லது அப்படி ஆகுவதில் உள்ள ஆபத்து என்ன? அட, நம்ம பையன் விஜய் மாதிரி பண்ணுறான், அஜித் மாதிரி பண்ணுறான் என்று சுய இன்பம் காண்பதுடன் ஒரு துறை பலம்பெற்றுவிடமுடியுமா?

சினிமா துறையை பொறுத்தவரை அடித்தளம் இடுவதற்கும், தக்கவைத்துக்கொள்வதற்கும் “புதியன புனைதல்” அவசியமாகிறது. அதிலும், வர்த்தக நோக்கில் நகரும்போது இதன் அவசியம் கட்டாயமாகிறது. வெறுமனே கதை டெம்ப்ளேட்களையும் நட்சத்திர அந்தஸ்துக்களையும் போலியாக பிரதிசெய்வதன் மூலம் வர்த்தக சந்தையில் இடம்பிடித்துக்கொள்ளலாம் என்பது முகட்டுவளையை பார்த்து கனவு காண்பதற்கு மட்டுமே சாத்தியமானதாக இருக்கும்.

சிறிய கதை ஒன்று.. நான் சிறியவனாக இருந்த காலத்தில் என் தந்தையார் நெல் பயிரிட்டு விவசாயம் செய்தவர். அவர் நெல் விதைக்கும் காலத்தில், சில நெல்விதைகளை திருடி, வீட்டு கோடியில் குட்டியாக ஒரு வயல் செய்து விதைத்து விளையாடுவேன். காலப்போக்கில் அதில் பத்தோ பதினைந்தோ விதைகள் முளைத்திருக்கும். அதற்கு பசைளை இடவேண்டும், அறுவடை செய்யவேண்டும், சந்தையில் விற்கவேண்டும் என்றெல்லாம் தீவிரமான கனவு இருக்கும். அப்பாவை கூட்டிக்கொண்டுபோய் என் வயலை காட்டினால் அவர் சிரித்துக்கொண்டே முதுகில் தட்டிவிட்டு போய்விடுவார். அப்பாவை போலவே வயல் செய்து விற்க முனைந்த என் பரிதாபத்திற்குரிய கனவு அத்தோடு மறைந்து போய்விடும்.

இப்போ ஈழ சினிமாவுக்கு வருவோம் :) இந்திய சினிமாத்துறை என்பது நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆரம்பித்து அப்போதே பலமானதும், பரந்தளவுமான வியாபாரச்  சந்தையை கையகப்படுத்திக்கொண்டுள்ள துறை. மிகப்பலமான வலையமைப்பு அது. அப்படியான தளத்தில் கால்பதிக்க முயற்சிக்கும்போது எமக்கு ஒரு தனித்துவம் தேவைப்படுகிறது. எனது வயல் விளையாட்டை போல, அவர்களையே குழந்தைத்தனமாக பிரதிபண்ணிவிட்டு சந்தைப்படுத்த முயற்சிப்பதெல்லாம் சுத்த அபத்தம். வியாபாரம் என்பது தட்டிக்கொடுப்பதற்கெல்லாம் அப்பாற்பட்டது எனபதை புரிந்துகொள்ளவேண்டும். இதுவரை ஐந்தோ ஆறோ முழுநீள திரைப்படங்கள் ஈழத்தில் எடுக்கப்பட்டு திரையிடப்பட்டுமிருக்கின்றன. இவற்றில் எத்தனை முதலிட்ட காசையாவது திருப்ப பெற்றுக்கொண்டார்கள் என்று கேட்டு பார்த்தால் ஒருவரும் இல்லை என்பதுதான் பதில். இதில் என்ன பயன்? நாங்களும் இந்திய லெவல் என்று சுய இன்பம் கண்டதுதான் மிச்சம்.

ஒரு  திரைப்படத்தை முழுமையாக்கி அதை திரைக்கு கொண்டுவரும் வரைக்குமான செலவாக, ஆகக்குறைந்தது பன்னிரண்டு இலட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. (பணியாற்றுபவர்களின் ஊதியம் உள்ளடங்கலாக) இவ்வளவு பணம்,நேரம் செலவு செய்து எடுக்கும் படத்தை ஒன்றிரண்டு நாட்கள் ராஜாவிலோ, செல்லா தியேட்டரிலோ ஓட்டிவிடுவதுடன் எல்லாம் முடிந்துவிடுகிறது.  மிஞ்சி மிஞ்சி போனால் இரண்டு இலட்சத்தை திருப்ப பெறலாம். இதுவா வியாபாரம்?

ஏன் இந்த படங்களை சந்தைப்படுத்த முடியவில்லை என்றால், அவற்றின் பிரதி பண்ணப்பட்ட உள்ளடக்கங்கள்தான் காரணம். சந்தைவாய்ப்புக்கள் இல்லை என்பதெல்லாம் இயலாமையான பேச்சுக்கள்தான். சந்தை வாய்ப்புக்களை நாம்தான் உருவாக்கிக்கொள்ளவேண்டும். அதற்கு “புதியன புனைதல்” வேண்டும். என்னை பொறுத்தவரை லெனின் சிவத்தின் ”A Gun and a Ring" தமிழ்சினிமாவிலிருந்து முற்றிலிம் மாறுபட்ட, அதேநேரம் வர்த்தக சினிமாவுக்குரிய அத்தனை சாத்தியங்களையும் கொண்ட திரைப்படம். ஆனால் போதியளவான சந்தைப்படுத்தல் முயற்சிகள் மேற்கொள்ளப்படாமையால் வெற்றியடைய முடியவில்லை.

நாங்கள் சிறிய வயதிலிருந்தே கோடம்பாக்க சினிமாவுடன் வளர்ந்தவர்கள். எங்களுக்கு அப்படியான சினிமாக்கள்தான் பிடிக்கும் என்றால் வர்த்தக நோக்கை முற்றிலுமாக மறந்துவிட்டு சுய திருப்திக்காக சிலகாலம் படம் எடுத்துவிட்டு வேறு வேலைகளை பார்க்க ஆரம்பிக்கலாம். இல்லாவிட்டால் கோடம்பாக்க சினிமா இறக்குமதிகளை இங்கு தடைசெய்துவிடலாம். புலிகளும் அதைத்தான் செய்தார்கள். இஸ்லாமிய புரட்சியின் போது ஈரானிலும் அதைத்தான் செய்தார்கள். ஆனால் அதற்குரிய சூழ்நிலை இப்போது இல்லை என்பதுதான் யதார்த்தம்.



மதுரன் ரவீந்திரன்




Share This:   FacebookTwitterGoogle+

Wednesday, March 9, 2016

அழகியலும் வன்முறையும் - பிஞ்சு குறும்படத்தை முன்வைத்து

ஈழத்தமிழர்களிடம் சொல்வதற்கு ஆயிரம் கதைகள் உண்டு, ஆயிரம் சம்பவங்கள் உண்டு. அத்தனையையும் திரை மொழியினூடாக வெளிக்கொணரும்போது எமது மக்களின் வழ்வியலை, அவர்களின் பிரச்சினைகளை உலக அரங்கில் ஆழமாக முன்வைக்க முடியும். லெனின் எம் சிவத்தின் "A Gun and a Ring", சதா பிரணவனின் "God is Dead" மதிசுதாவின் தழும்பு, பிரேம் கதிரின் ஏதிலிகள் ஆகிய குறும்படங்களை உதாரணமாக சொல்லலாம். ஆனால் இந்த முயற்சியின் பின்னால் உள்ள ஆபத்து, நாம் எடுத்துக்கொள்ளும் கதைகளை என்ன வகையில் சொல்லப்போகிறோம் என்பதில்தான் தங்கியுள்ளது. தவறான திரைமொழியுடன் சொல்லப்படும் நல்ல கதை கூட பார்வையாளனிடத்தில் எமது வாழ்வியல் குறித்த பிழையான, ஆழமற்ற கருத்து நிலையினை உண்டாக்கிவிடும். 

மேற்கண்ட கருத்துக்கு, அண்மையில் வெளிவந்திருக்கும் "பிஞ்சு" குறும்படத்தை உதாரணமாக சொல்லமுடியும். அரசியல் பத்தி எழுத்தாளர் தீபச்செல்வனின் கதை மற்றும் திரைக்கதையிலும், தேவர் அண்ணாவின் இயக்கத்திலும் வெளிவந்திருக்கிறது பிஞ்சு. ஈழத்தில் போருக்கு பின்னரான காலப்பகுதியில் சிறுவர்கள் அனுபவித்த பிரச்சினைகளை மையமாக கொண்டிருக்கிறது இக்குறும்படம். 

போரில் தாய் தந்தையரை இழந்து, போர் மனதளவில் ஏற்படுத்திப்போன தாக்கங்களோடு, தன் அம்மம்மாவுடன் வசித்து வருகிறாள் ஒரு சிறுமி. மீள்குடியேற்ற பிரதேசம் ஒன்றில் வசித்து வரும் அவள் திடீர் என ஒருநாள் இராணுவத்தினரின் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறாள். பேத்தியின் கொலைக்கு நீதி வேண்ட் அம்மம்மாவால் இராணுவத்தின் மீது தொடுக்கப்பட்ட வழக்கும் தோல்வியடைகிறது.

போருக்கு பின்னரான காலப்பகுதியில் சிறுவர்களுக்கெதிராக அடிக்கடி நிகழும் வன்முறை சம்பவம் ஒன்றை குறும்படத்தினூடாக வெளிக்கொணர மேற்கொள்ளப்பட்ட முயற்சி சரியானதும், பாராட்டத்தக்கதும். ஆனால் அது திரைமொழியினூடாக சொல்லப்பட்ட விதத்தில் உள்ள குறைகளை கவனத்தில் எடுக்கவும் விமர்சனத்துக்கு உட்படுத்துவதும் அவசியமாகிறது.

முதலில், குறும்படம் எதைப்பற்றி பேசப்போகின்றது என்ற குழப்பம் இயக்குனருக்கு இருந்திருக்கவேண்டும். அந்த தெளிவின்மையே சொல்ல வந்த செய்தியை தவறான முறையில் பார்வையாளனிடம் முன்வைத்திருக்கிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் கடந்த காலத்தை மிகவும் சோகத்திற்குரியதாக காட்ட எடுக்கப்பட்ட முயற்சியில், போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் உளவியல் தாக்கம் தவறான முறையில் அடையாளப்படுத்தப்படுகிறது. வகுப்பறையில் ஓவியம் வரையும்போது குறித்த சிறுமி மாத்திரம் அவளின் மனதில் பதிந்துபோயுள்ள போரின் கொடுமைகளை வரைகிறாள். ஏனையவர்கள் காலைக்காட்சி, பூக்கள், பறவைகள் என விதவிதமாக, மிக மகிழ்ச்சியான மனநிலைக்குரிய ஓவியங்களை வரைகிறார்கள். அவள் மட்டுமே போரின் பாதிப்புகளை மனதில் கொண்டு, தான் வைத்தியராக வந்து போரில் காயமடையும் மக்களுக்கு மருத்துவம் பார்க்கவேண்டும் என்கிறாள். ஏனையவர்கள் அதுபற்றிய கவலைகள் அற்று எஞ்சினியராகவும், ஆசிரியராகவும் வரவேண்டும் என்கிறார்கள். இந்த கட்சிகள் எல்லாமே வன்புணர்வுக்குள்ளாகி கொலையுண்ட அந்த சிறுமியின் மீதான அனுதாபத்தை செயற்கையான முறையில் ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கில் அமைக்கப்பட்டிக்கலாம் எனினும்,இக் காட்சிகளின் பின்னால் உள்ள நுண்ணரசியல் என்பது, போருக்கு பின்னரான சிறுவர்களின் உளவியல் தாக்கம் என்னும் பாரியதொரு விளைவை குறுக்கியோ அல்லது தவறான முறையிலோ காட்சிப்படுத்த முனையும் செயலாகவே பார்க்கவேண்டியுள்ளது. இவ்விடத்தில் நுண்ணரசியல் என்பது இயக்குனராலோ, கதாசிரியராலோ திட்டமிட்ட முறையில்தான் நுழைக்கப்படவேண்டும் என்பதல்ல. மாறாக திரைக்கதையமைப்பில் உள்ள பலவீனங்களும் இத்தகைய கருத்து பிழைகளை உண்டாக்கிவிட வாய்ப்புண்டு.

குறும்படத்தின் காட்சிகள் இயல்பின்றி செயற்கைத்தனமாகவே நகர்கின்றது. கதை மற்றும் திரைக்கதை எழுதிய தீபச்செல்வனோ, குறும்படத்தை இயக்கிய தேவர் அண்ணாவோ போருக்கு பின்னரான காலப்பகுதியில் ஈழத்தில் இருக்கவில்லை, அம்மக்களின் வாழ்வியலை, பிரச்சினைகளை உற்றுநோக்கவில்லை என்பதும் செய்திகளின் வாயிலாக கேள்விப்பட்ட சம்பவங்களை வைத்து படமாக்கியிருக்கிறார்கள் என்பதும் அப்பட்டமாக தெரிகிறது. போர் முடிந்த பின்னரும் கூட இத்தனை இயல்பான மனநிலையுடன் சைக்கிளில் இரட்டை போட்டுக்கொண்டு கலகலப்பாக சுற்றும் இராணுவத்தை ஈழத்து மக்களே கண்டிருக்கமாட்டார்கள். சிறுமியை கடத்தி செல்லும் இடத்தில்கூட தமிழ் சினிமா பாணியிலான த்ரில்லர் முயற்சியை மேற்கொண்டதெல்லாம் அபத்தத்தின் உச்சம். ஒரு இயக்குனருக்குரிய அடிப்படை தகமை, தன்னை சுற்றியுள்ள சூழலில் நிகழும் சம்பவங்களை, மக்களின் வாழ்வியல் இயக்கங்களை உற்றுநோக்குதலும் அதிலிருந்து படைப்புக்கு தேவையான அம்சங்களை தெரிந்தெடுத்துக்கொள்ளலுமாகும். கதை என்பதற்கப்பால் இப்படியாக பெற்றுக்கொள்ளும் நிகழ்வுகள்தான் எப்படி ஒரு கதையை சொல்லவேண்டும் என்பதையோ, கதையின் இயல்பு நிலையையோ தீர்மாணிக்கிறது. போருக்கு பின்னரான மக்களின் வாழ்வியல் எப்படி இருக்கும், இராணுவத்துக்கும் மக்களுக்குமான உறவு எப்படிப்பட்டது, உளவியல் தாக்கங்களுக்குள்ளான சிறுவர்களின் செயல்கள் எத்தன்மையினதாக இருக்கும் என்பதெல்லாம் நன்றாக கவனிக்கப்பட்டிருப்பின் படத்திலும் சிறப்பாக சொல்லப்பட்டிருக்க வாய்ப்புண்டு.

தவிர, சினிமா என்பது காட்சி ஊடகம். அது தகவல் பெட்டகமாக இருக்கமுடியாது. அழகியல் என்ற ஒரு தன்மைதான் செய்தி என்பதற்கும் கதை என்பதற்கும் இடையில் நிற்கிறது.  தகவல்களை கதையாக்கி அக்கதையை காட்சி அழகியலினூடாகவே பார்வையாளனிடத்தில் ஊடுகடத்தவேண்டும்.  அந்த நுட்பத்தை முற்றிலுமாக இழந்திருக்கிறது "பிஞ்சு"

இறுதியாக, குறும்படம் சொல்ல வந்த செய்தி தவிர்த்து இயக்குனரிடம் கேட்கப்படவேண்டிய கேள்வி ஒன்று உள்ளது. சிறுமியின் வன்புணர்வு காட்சியினூடாக வெளிப்பட்ட அந்த வன்முறை மூலமாக நீங்கள் பார்வையாளனுக்கு சொல்ல விளையும் செய்தி என்னவாக இருக்கும்? இத்தகைய காட்சிகளில் வன்முறையின் விளைவுகளை சொல்வதுதான் அறமாக இருக்கும். மாறாக இத்தகைய வன்முறை காட்சிகள் பார்வையாளனுக்குள் ஓர் அசைகரியத்தை ஏற்படுத்தி அந்த காட்சியின் வீரியத்தை குறைத்துவிடலாம். அது மொத்த படைப்பின் நோக்கத்தைக்கூட சிதைத்துவிடலாம். இங்கேயும் அதுதான் நிகழ்ந்திருக்கிறது. பிஞ்சு குறும்படத்தின் மூலம் இயக்குனர் பேச முனைந்த விடயம் என்ன? சிறுவர்கள் மீதான துஷ்பிரயொகமா அல்லது போர் மூலமான சிறுவர்களின் உளவியல் தாக்கமா? இரு வேறு தளங்களை ஒரே படைப்பினூடாக தொட முனைந்தாலும் அதற்கேற்ற போதிய தரவுகளோ, காட்சிப்படுத்தல்களோ இல்லாமையால் படைப்பின் நோக்கம் குறித்த குழப்ப நிலை ஒன்றே உருவாகியிருக்கிறது.ஆக, எல்லா வகையிலும் தவறாக அடையாளப்படுத்தப்பட்ட ஒரு ஈழ படைப்பாகவே இக்குறும்படத்தை வகைப்படுத்தவேண்டியுள்ளது.

ஆக்காட்டி சஞ்சிகைக்காக
மதுரன் ரவீந்திரன்
Share This:   FacebookTwitterGoogle+

Saturday, September 5, 2015

With you without you - ஒரு பார்வை !

கடந்த வருடம் வெளிநாடுகளில் திரையிடப்பட்டதிலிருந்து தரமானதொரு சினிமாவாக புத்திஜீவிகளால் கொண்டாடப்பட்டு வந்தத with you without you திரைப்படத்தை நேற்று யாழ் சர்வதேச திரைப்பட விழாவில் பார்க்கமுடிந்தது. தாஸ்தவேஸ்கியின்  குறுநாவல் ஒன்றினை அடிப்படையாக கொண்டு பிரசன்ன விதானகே இந்த திரைப்படத்தை எடுத்திருந்தார்.

படம் பார்த்து முடிந்தபோது என்னிடம் ஒரே ஒரு கேள்விதான் இருந்தது. “கொண்டாடுவதற்கு இந்த படம் எந்த வகையில் தகுதி பெறுகிறது??” நீண்டநேரம் அசையாமல் இருக்கும் கமெராவும், மெதுவாக நகரும் திரைக்கதையும் ஒரு படத்தை நல்லதொரு கலைத்திரைப்படம் என்று வரையறுத்துவிட போதுமானதாக இருக்கிறதா ?
Share This:   FacebookTwitterGoogle+

Thursday, August 20, 2015

அஞ்ஞானவாசம், ஏன் இஞ்ச வந்தனி; இரு குறும்படங்கள் பற்றிய பார்வை !


காட்சி ஊடகங்களின் பரிணாமம் காலத்திற்குக் காலம் மாற்றமடைந்து வருவதன் தொடர்ச்சியாக, தற்போதைய சூழலில் மக்களிடையே குறும்படங்களின் தாக்கம் அதிகரித்திருப்பதை அவதானிக்கமுடியும். திரைப்படங்களில் கையாளப்படும் மிகையதார்த்த மாயைகளைத் தவிர்த்து யதார்த்தத்தை முடிந்த அளவு சாத்தியமாக்கியதோடு, திரைப்படங்களில் இருந்து முற்றிலுமாக மாறுபட்ட திரைமொழியையும், செய்தி சொல்லல் உத்தியையும் கொண்டிருந்த குறும்படங்கள் கொஞ்சங் கொஞ்சமாக வெகுசனப்பரப்பை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பது ஆரோக்கியமானதொரு மாற்றம்தான். 
Share This:   FacebookTwitterGoogle+

Monday, May 11, 2015

மாற்றத்தை நோக்கிய பாதையில் ஈழத்து சினிமா துறை !

இலங்கை தமிழ் சினிமாவின் இன்றைய நிலை என்ன? நேற்று ஆரம்பித்திருக்கும் குறும்பட அலைகளுக்குள் இந்த கேள்விக்கான பதிலை தேடுவது நியாயமில்லை என்பதால் சற்று முன்னோக்கிய நிலவரத்தையும் பார்ப்போம். 90க்கு முற்பட்ட எமது திரைப்படங்கள் எவையும் தற்போது ஆவணப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அதனால் அவற்றை ஆராட்சிக்கு உட்படுத்துவது நமக்கு இயலாத நிலையில் அன்றைய சினிமா ஆர்வலர்களின் தரவுகளையே நாடவேண்டியுள்ளது. அவர்களது பதிவுகளின்படி தென்னிந்திய சினிமாவையே நம்மவர்கள் இங்கிருந்து மறுபதிப்பு செய்துகொண்டிருந்ததாக அறியமுடிகிறது. 90 இற்கு பின்னர் நிதர்சனத்தில் இருந்து எமது மண்வாசனையுடன் திரைப்படங்கள் உருவாகிக்கொண்டிருந்தாலும் பெரும்பாலும் அவை பிரச்சார சினிமா வகைக்குள்ளேயே சேர்ந்துகொள்கின்றன. ஆக, எமக்கான ஒரு சினிமா சமீபகாலமாகத்தான் மெல்ல மெல்ல தவழ ஆரம்பித்து மிக மெதுவாகவே நகர்ந்துகொண்டிருக்கிறது. வருடத்துக்கு சராசரியாக 40-50 குறும்படங்கள் வெளிவந்துகொண்டிருந்தாலும் தனித்துவமான மாற்றம் என்பது ஒன்றிரண்டு குறும்படங்களுடனேயே சுருங்கிக்கொண்டிருக்கிறது. அதன் காரணம் என்ன? இதற்கான பதிலை அறிந்துகொள்ள முன் இன்னும் சில விசயங்களை தெரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது.
Share This:   FacebookTwitterGoogle+

Friday, May 1, 2015

Food Inc - உணவுப்பழக்கங்கள் மீதான மல்டிநேஷனல் கம்பெனிகளின் ஆதிக்கம் !

இந்த Fast food மோகம் என்றது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரை இரத்தத்தில் ஊறிப்போன ஒன்று. சிறுவகள் கூட I Like Fast Food என்று அசால்டாக சொல்லுவார்கள். நம்ம பக்கம், கொழும்பில் என்னமாதிரி என்று தெரியவில்லை. யாழ்ப்பாணத்தில் 2010 இற்கு பின்னரே KFC மாதிரியான கார்பரேட் கம்பனிகளின் Fast Food கள் கடை விரிக்க ஆரம்பித்தன. இன்றைய நிலையில் யாழ்ப்பாணம் KFC யில் போய் சாப்பிட்டு வருவது என்பதுபெரியதொரு கௌரவம். நடுத்தர வர்க்கத்துக்கும் சற்று மேல் நிலையில் இருப்பவர்களாலேயே இங்கு சாப்பிடமுடியும் என்பது இன்னொரு தகவல். சரி, இவ்வளவு பணம் கொடுத்து சாப்பிட்டுவிட்டு பெருமைப்படுகிறோம் என்பதை தாண்டி இந்த சாப்பாடு எப்படி செய்யப்படுகிறது, என்னவகையான வியாதிகளை எங்களுக்குள் திணித்துவிடுகிறது, இந்த கார்பரேட் கம்பனிகள் எப்படி உங்களையெல்லாம் அடிமையாக்க முயற்சிக்கிறார்கள் என்பது பற்றி யாரும் சிந்திப்பதாக இல்லை. அவர்கள் எல்லாரும் கண்டிப்பாக Food,INC என்ற இந்த ஆவணப்படத்தை பார்க்கவேண்டியவர்கள் ஆகிறார்கள்.
Share This:   FacebookTwitterGoogle+

Saturday, March 21, 2015

”நிலவில் ஒருவன்” - ராஜ்சிவா !

விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய அளவே அறிவியல் எழுத்தாளர்களை கொண்டது தமிழ்மொழி. அவர்களுள் முதன்மையானவர் ராஜ்சிவா தான் என்பது ஒரு சாமானிய வாசகனான எனது கருத்து. அறிவியல் தகவல்கள் அவ்வளவாக அண்டாதிருந்த தமிழ் வாசகப்பரப்பை தனது இலகு தமிழிலான விளக்கங்கள் மூலம் ஆக்கிரமித்துக்கொண்டவர் ராஜ்சிவா. ஹிக்ஸ் போசான், அண்டம், குவாண்டம், கருந்துளைகள், பயிர்வட்டம், பறக்கும்தட்டு, மாயன்கள் என்று நாம் மலைத்து பார்த்த சொற்களை எல்லாம், தினமும் அசால்டாக உபயோகிக்கும் அளவுக்கு நம்மிடையே புழக்கத்தில் கொண்டுவந்தவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. அதுதான் அவரது வெற்றி. இதை எந்தவிதமான பெருமைப்படுத்தல்  நோக்கத்திலும் சொல்லவில்லை. இதுதான் உண்மை. எனக்கும் சரி, தற்போது அறிவில ஆர்வமுள்ள இளைஞர்களுக்கும் சரி,  வழிகாட்டி ராஜ்சிவா அண்ணன் தான்.

அறிவியலை கையில் எடுத்துக்கொள்ளும்போது ஒரு சிக்கல் இருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகால மத, மனித நம்பிக்கைகளை அறிவியல் கருத்துக்கள் நிச்சயம் கேள்விக்குட்படுத்தும். அறிவியல் எதையுமே 100% ஆதாரம் இல்லாது ஏற்றுக்கொள்ளாது இல்லையா? அதனால் வெறும் நம்பிக்கைகள் மூலமே தொடர்ந்து வரும் மத கருத்துக்களை மட்டும் எப்படி ஏற்றுக்கொள்ளும்? அறிவியலின் கேள்விகளில் பல நம்பிக்கைகள் நிச்சயம் ஆட்டம் காணும். நாம் தீவிரமாக நம்பிய ஒரு கருத்து இலகுவாக உடைபடும்போது அதை உடனடியாக ஏற்றுக்கொள்ள மனித மனம் இடம் தராது. அதனால அறிவியலையும், அறிவியலாளர்களையும் எதிர்க்க ஆரம்பிப்பார்கள் ஒரு பகுதி மக்கள்.  இது நாம் எல்லோருமே வழமையாக கண்டுவரும் அனுபவம்தான். ஆனால் இந்த வழமையை மெதுவாக கையாள்கிறார் ராஜ்சிவா. தொடர்ந்து ராஜ்சிவாவின் எழுத்துக்களை படித்துவருகிறேன். எந்த இடத்திலும் யாரையும் காயப்படுத்தி எழுதியது இல்லை. இவையெல்லாவற்றையும் விட இவரது வெற்றிக்கு இன்னுமோர் காரணம் இருக்கிறது. தமிழ் எழுத்தாளர்கள் பலரிடையே இல்லாத பழக்கம் அது. “எளிமை”. எழுத்தாளன் வாசகன் என்ற உறவை கடந்து ஒரு சகோதரனை போலவே எல்லோருடனும் பழகும் அவரது தனிப்பட்ட குணமும் ஒரு சக்சஸ்தான். புத்தகத்தை பற்றி எழுத வந்துவிட்டு எழுத்தாளனை பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்தளவிற்கு ராஜ்சிவா அண்ணனை பிடித்திருக்கிறது :)
Share This:   FacebookTwitterGoogle+

Blog Archive

Followers

Powered by Blogger.
Copyright © சிறகுகள் |